தவமாய் தவமிருந்து

ஊர் சொல்லுக்கு அஞ்சினேனோ ....
உணர்ச்சி வில்லுக்கு இறைஞ்சினேனோ .....

துள்ளித்திரிந்த மானதை
அள்ளியெடுத்து அவன் நிதம் கொஞ்சினாலும்
ஒட்டாத உயிரணுவையெண்ணி
ஒய்யாரக் கடவுளிடம் நித்தமும்
கெஞ்சினேனடா .....

மாலைசூடிய மறுதிங்கள்முதல்
சேதியுண்டா ....
மல்லிகை மனமிவளை மாற்றிமாற்றி
மனையோர்  கேட்டும்
மைச்சோலிபோட்டு பார்த்தும்
மடியது நிரம்பவில்லையடா .....
மார்புந்தான் சுரக்கவில்லையடா .....

அங்கமதை ரசிக்க முயலும்
ஆண்வர்க்க ஆடவர்கூட
அமைதியாய் கடக்க
எல்லாமறிந்த பெண்மைதான்
புரணிபேசி கொல்லுதடா .....
பொறுமையது போனதடா .....

கையில் கரும்பேந்திய காமாட்சி
கிளி வளர்க்கும் மீனாட்சி
மண்டலவிரதக்காரி மாரித்தாய்
மயிலேறி பறந்த மானத்தமிழன்
அரசமர தொந்திக்காரன் ....
எத்தனை எத்தனை .....
ஏனையோருமென்னிடம் வாங்கா திட்டில்லை ....
எமை வஞ்சித்த நாளது கொஞ்சமில்லை ......

இருள்மத்தியில் நாட்கணக்கில்
போர்புரிந்தும் குறையது தீரவில்லை
குடமது நிறையவில்லை .....
தவமிருக்க தயாராய் நானிருந்தும்
வழிகொடுக்கும் விழியது திறக்கவில்லை .....
பத்திய வாழ்வதுவும் தொடங்கவில்லை ....

மணக்கும் போலிச்சுற்றமது
மகர லகர டிகரமென்னும்
மூன்றெழுத்தின் முனைசீவி
மனம் நொந்த வெண்மேகமிவளை
கீறிடும் வேளைதனில்
முத்தாப்பாய்
மூன்றுநாள் போக்கது
தள்ளிப்போக
உள்வானில் பூத்தது விடிவெள்ளி ....
ஊரார் உரைத்த உவமையோ புதுஅல்லி ....
கன்னம் கிள்ளிக் கணவன்
சொன்னான் அடிகள்ளி .....

வயலில் விழுந்த விதையது
முளைவிட அள்ளியெடுத்துகட்டும்
உழவன் போல்
கொடிவைத்து கட்டினேன் கொதித்தடங்கியிருந்த மடிதனில் .....

குதித்துப் பறக்கும் குருவியாய்
இருந்தவள் ஊர்ந்து செல்லும்
மண்புழுவானேன் முதல்திங்கள் ......
கவனமாய் கால்தடம் வைத்தேன்
ஒவ்வொரு முறைதனிலும் ....

சுறுசுறுப்பான கருப்பெறும்புக்கு
துவளும் நிலையென்பதில்லை .....
பவித்திரகுடமது நிரம்பத்தொடங்க
உடலயர்ச்சி வந்தாலும்
மனக்குதூகலமது குறையவில்லை ......
முகமலர்ச்சியதை காட்டினேன் மறுதிங்கள் .....

தவமிருக்கும் முனிவனுக்கு
அகம்பற்றி கவலையேது .....
உடல்பேணும் உணவுபற்றி உணர்வுயேது ....
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ
மருட்சியுடன் கடந்தேன் மற்றுமொருதிங்கள் ......

மண்தின்று அறைவாங்கி
வளர்ந்த மழலையிவள்
மங்கையாகி மன்னவன் வந்து
மாலையிட்ட பின்னாளில்
கொடிச்சாளரம் வழியுணரும்
உன்பேர் சொல்லி
கொஞ்சலாய் சாம்பல்தொட்டு
உண்டேன் நான்காந்திங்கள் .....

பெண்ணுக்கழகான
எடுப்பான யிடையது சற்றகல
மேடிட்ட வயிறது உப்பத்தொடங்க
ஆவலாய் கள்வனவன் தடவிப்பார்த்து
உனக்கு முத்தமிட ....
சிவந்தயென் கன்னங்களது வெட்கப்பட ....
இருகை கொண்டு நானென் முகம்மறைக்க .....
அழகாய் கடந்தது ஐந்தாந்திங்கள் .....

ஆழக்கடலதை சரிபாதி தாண்ட
அடிக்கடி இளைப்புவந்து சீண்ட
அத்தையவள் மருந்தரைத்து மலர்காக்க
படுக்கையில் கணவன்
கட்டியணைக்கமுடியாமல் முகம்வாட
கள்ளச்சிரிப்பதனை நான்விழியும்
காட்டிச்சிரிக்க ......
கரைகடந்தது ஆறாந்திங்கள் .....

பொன்மீது அலாதிபிரியங்கொள்ளும்
அன்னப்பறவையிவள்
பொன்தவிர்த்து கைநிறைய
கண்ணாடிவளையங்கள் பூட்டி
கன்னக்குழிகளில் குளிர்சந்தனம் நிரப்பி .....
பலவண்ண அன்னமதை உறவுகள்
ஒன்றுகூடி ஊட்டிவிட ......
குங்குமச் சிவப்பாய் சிவந்தது
ஏழாந்திங்கள் ......

உலா போகும் வெண்மேகமதின்
தூரம் குறைவாகும் ....
இளவரச னிவன் கரம்கோர்த்து
இன்நிலா போன ஊர்வலம் .....
அரவணைப்பாய் கைதாங்கி
நித்தமவன் நடைபோடவைக்க .....
விரும்பி வலிதாங்கி வழிநடந்தேன்
என்னவன் தோள்சாய்ந்து .....
எட்டாந்திங்களின் தூரம்
குறைந்ததென கோவமெனக்கு ......

சீர்சுமந்து தாய்மாமன்
மருமகனைதேடி வாசல்வர .....
தலைப்பிரசவமது எங்கடமையென அவங்கூறி தாய்வீட்டிற்கு அழைக்க .....
சுகம்போன திசைதெரியவில்லை
உந்தந்தைக்கு ....
மனம்தயங்கி எனை வழியனுப்ப
எப்போது முடியும்
இந்த ஒன்பதாந்திங்கள் ......

உலகதனை காக்கும் பகலவனாய்
தினம் எனைக்காண வந்து
நெற்றிமுத்தம் இட்டுச்சென்றான்
எம்தலைவன் .....
நாளது கூடிவர ....
தவக்காலமது இறுதிவர ...
அங்கமெல்லாம் நீர்கூடி வீக்கம் கொள்ள ...
பனிக்குடமது பாரமிறக்கும் நேரம்வர ....
நிற்கும் தெம்பது குறைந்துவிட .....
தூக்கிச்சென்ற சுற்றமது
படுக்கையில் கிடத்திவிட .....
மருத்துவரர் சிகிச்சை தொடர
மனமது மாமனைக்காண ஏக்கங்கொள்ள ....

எத்தனை எத்தனை பரிசோதனை ....
அத்தனையும் தாங்கியது எஞ்சாதனை ....
அங்குல வாசலது வாய்திறக்க
தலைநீட்டி கன்றது வெளிவர
இடுப்பெலும்புகள் விலகிவழிதர
மொத்தவுடல் எலும்புகளும்
உடையும் வலிதர .....
மூளையில் கண்ட
மின்சாரமதின் தாக்கம்
இன்னுமுள்ளதடா .....
முதன்முறை மார்சுரக்கத் தொடங்குதடா ....

முழுக்கடல் மூழ்கியதன் பயனாய்
இம்முத்தது கிடைக்க ....
தவமிருந்த பலனாய்
தரணி ஆளப்போகும் வீரன்
வந்தானென
மனம் பெருமிதங்கொள்ள .....
கண்ணில் நீர்ததும்ப
மன்னன் வந்து இட்டான்
மற்றுமொரு நெற்றிமுத்தம் .....

நாக்கில் தேன்விட்டு சுற்றம் நகர ....
அடுத்தகட்ட தவமாம்
உன்வளர்ப்பு திட்டமது
மனதில் தொடங்க ......

கட்டியணைத்து காதில் சொன்னான்
என்கள்வன் .......
பெண்மையை போற்றும்
ஆண்மையுடன் வளர்ப்போம்
நம் மகனை .....

எழுதியவர் : என்.கே.ராஜ் (9-May-21, 9:27 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 1043

மேலே