நிரந்தர பணிவிடுப்பு

கேள் இறைவனே ....
போதும் ...
இந்த மடமானிடம்
நன்குணர்ந்து விட்டது .....

வருடந்தாண்டி போராடிக்கொண்டிருக்கிறோம்
சிறு ஓய்வாவது கொடு
இந்த உலகத்தொற்றிற்கு ......

மறந்துங்கூட நினைத்ததில்லை ...
மரணத்தின் யதார்த்தமதனை ...
அதை யுணர்ந்துவிட்டோம் ....

மருந்திற்கே நீண்ட வரிசை ....
கேள்விப்பட்டதில்லை எந்தலைமுறையில் ....
அதையும் பார்த்துவிட்டோம் ......

மருத்துவமனை வாசலில்
காத்திருப்பில் நோயாளிகளாம் .....
அடுக்கடுக்காய்
அவசர ஊர்திகளாம் ....
அதில்சிலர் அங்கேயே மரணமாம் ....
காணும்போதே நெஞ்சமது
பதைபதைக்கிறது .....
திரைக்காட்சிகளில் அல்லவா
அப்படிச்சில பார்த்திருக்கிறோம் ....

சுடுகாட்டில் இடமில்லையாம் ....
கேட்கும்போதே கண்கள் தானாய்
கலங்குகிறது ....
மரணத்தை வெறும்பூமாலையோடு
மட்டுமல்லவா
கடந்து வந்திருக்கிறோம் என ....


உள்ளே சென்றுவந்த காற்றதனை
கணமும் சிந்தித்ததில்லை....
உண்மைதான் .....
சொல்லப்போனால்
சுவாசிப்பதையே இப்பொழுதுதான்
நினைக்கிறோம் .....
ஒத்துக்கொள்கிறோம் ....

பிஞ்சுகள் முதல் இளசுகள் வரை .....
மூத்தோர் முதல்
முடியாதோர் வரை ....
அடுக்குமாடி வீட்டுக்காரன் முதல்
அன்றாடக் கூலிகள் வரை .....
மருத்துவன் பொறியாளன்
பொழுதுகழிப்பவன்
ஆசிரியன் அமைதிவிரும்பி
சமூக சேவகன்
எவரையும் விட்டுவைக்கவில்லை .....
எத்தனை நாள் திட்டமிதுவோ
மொத்தமாய் எமைகதிகலங்க வைக்க ....

மூத்த தலைமுறையதற்கோ
நிம்மதியாய் போய்சேர்தல் திண்டாட்டமாய் ....
அடுத்த தலைமுறையதற்கோ
ஆரம்பக்கல்வியே திண்டாட்டமாய் ....
என்னவென்று சொல்ல ...

பசி பட்டினியில் எத்தனை .....
பார்த்துப் பயந்தவை எத்தனை .....
ஆற்றில் மிதந்தவை எத்தனை .....
அடுத்து வரிசையாய்
எத்தனையோ .....

போதும் இறைவனே ....
எழுதுகையில் கூட எங்கைகளது நடுங்குகிறது .....

பிரபஞ்சமாளும் நாயகனே .....
வந்து வாழ்ந்து இருந்துச்செல்லும்
வழிப்போக்கர்கள் உணர்ந்துவிட்டோம் ...
இனியும் ஊமையாய் நிற்காமல்
இதற்கொரு விடைகொடுக்க வழிகொடு ....
அல்ல இக்கொடிய நோயதற்கு
நிரந்தர பணிவிடுப்பு கொடு .....

எழுதியவர் : என்.கே.ராஜ் (15-May-21, 8:50 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 142

மேலே