ஏழாம் பொருத்தம்
ஏழாம் பொருத்தம்
என் மனைவி சுவேதாவிற்கு அவள் பிறந்த ஊரான சென்னையில் வேலை கிடைக்கும் வரை நான் தற்போது வேலை பார்த்து க்கொண்டிருக்கிற இடமான மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஜபல்பூரில்தான் இருந்தாள், எங்கள் மகள் நர்மதா பிறந்த இடமும் ஜபல்பூர்தான், இந்தியாவில் இருக்கும் அழகான வற்றாத ஜீவ நதிகளிலே நர்மதா நதியும் ஓன்று, பழங்காலத்தில் நர்பதா என்றும் அழைக்க பெற்றது. மத்திய பிரதேசம், அனுபூர் மாவட்ட, விந்தியாச்சல் பர்வத் அமர்க்காண்டா பீடபூமிலயில் பிறந்து மத்திய பிரதேசம், மற்றும் குஜராத் கடந்து அங்கிருக்கக்கூடிய பரூச் வழியாக ஆயிரத்தி முன்னூற்றி பனிரெண்டு கிலோ மீட்டர் பயணித்து அரபிக்கடலில் சென்றடைகிறது நர்மதா நதி, மா. பி. மற்றும் குஜராத் மக்களின் வாழ்வாதாரமாக கருதப்படுகிறது, ஜபல்பூரில் உள்ள பேடா காட் என்ற இடத்தில் இரு மார்பில் மலைகளுக்கு நடுவே நர்மதா நதியை பார்க்கும் போது லட்சக்கணக்கான அழகான பெண்கள் ஒரே மாதிரி உடை அணிந்து நடந்து செல்லும் பேரணி போல இருக்கும் நர்மதா நதி, நர்மதா நதி எப்படி பேரும் புகழுடனும் வாழ்ந்து வருகிறதோ அதே போல் பேரும் புகழுடனும் வாழ வாழ்த்தி அந்த நர்மதா தாயின் பெயரை என் மகளுக்கு சூட்டினேன்.
என் மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும் எல்லாம் என் ஒற்றை மகளால்தான் , அனைத்து சண்டைகளும் படிப்பு ஒழுக்கம் மற்றும் சொல்பேச்சு கேளாதது சம்மந்தமாகவே இருக்கும், அவள் வளர வளர அந்தந்த வயசுக்கு ஏற்றால் போலோ பிரச்சனைகளின் தலைப்பு மாறும், அது எல் கே ஜி முதல் பட்டப்படிப்பு வரை தொடர்ந்திருக்கிறது
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முக்கியமான பதினாறு தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதை (OLQ) ஆஃபீசர்ஸ் லைக் குவாலிட்டி என்று சொல்வார்கள், அவைகள் ஒன்றும் சிதம்பர ரகசியமோ அல்லது எட்டாக்கனியோ அல்ல, நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் சம்மந்தப்பட்ட ஒன்று, அவைகளை வெளிக்கொணர்ந்து பட்டை தீட்டவேண்டும் அவ்வளவுதான்
கூர்மையான புத்தி, பகுத்தறிவு த்திறன், ஒழுக்கம் ஏற்பாடு செய்தல், வெளிப்பாடு, திட்டமிடல், ஒற்றுமை, மதச்சார்பின்மை, பொறுப்புணர்வு, முயற்சி, தன்னம்பிக்கை, முடிவின் வேகம், உறுதியான திறன், வாழ்வாதாரம், உறுதி, தைரியம் மற்றும் சகிப்புத்தன்மை.
எல்லா நேர்முகத்தேர்விலும் இவ்வகையான தகுதிகள் இருக்கிறதா என ஆராயப்படும், ஆக ஒரு அப்பாவாக இவை அனைத்தையும் மகளுக்கு கற்றுக்கொடுக்க முற்படும் போதெல்லாம், அப்பா போதும்பா என்பாள் மகள், உங்கள் உபன்யாசத்தை நிறுத்துறீங்களா என்பாள் மனைவி.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும் துறையில் எச் ஆர் அலுவலராக இருக்கும் நான் என் மகளுக்கு கற்று க்கொடுத்தால் என்ன தவறு ? என்று கேட்டுவிடக்கூடாது, அதன்பின் எனக்கும், மனைவிக்கும் சண்டை பெரிதாக உருவெடுக்கும், இது ஏறக்குறைய எல்லா நாள்களிலும் தொலைபேசி மூலமாக நடக்க க்கூடிய ஒன்றாகும்
படிப்பிற்க்காகவும், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்க்காகவும் மகளை கண்டித்தால், மாமனார் மாமியார் முதல் மனைவி வரை எதிரி போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
எல்லாம் அவளோட நல்லதுக்குதான் சொல்லுறேன், இப்ப நீங்க எல்லோரும் அவளுக்கு சாதகமாக பேசுறீங்க நாளைக்கு அவ கஷ்ட்டப்படும் போது அவ கூட யாரு இருப்பா? நீங்களும் நானுமா இல்ல இன்றைக்கு நாம கத்துக்குடுக்குற விசயமா? இந்த கேவிக்கு யாருகிட்ட இருந்தும் பதில் இருக்காது. கற்று கொடுத்தள் என்பது விதைக்கப்படுவது போல, அது வளர்ந்து மரமாகி பலபேருக்கு நிழல் கொடுக்க வேண்டு என்பதற்க்காக எடுக்கப்படுகின்ற முயற்சி, அவ்வகையான முயற்சிகளை நம்மை சார்ந்தவர்களே தடுப்பது என்பது "செர்பெண்ட் ஈட்டிங் இட்ஸ் டெய்ல்" என்பதற்கு சமமாகும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை நான்கு நாட்கள் விடுமுறை வரும் நான் மனைவியை பகைத்துக்கொள்ள விருப்பமில்லாமல், மகளை கண்டிப்பதை குறைத்து க்கொண்டேன், கண்டிக்க ஆரபித்தால் போதும், மனைவி வீட்டுக்கு தூரமாக இருக்கிறாளோ இல்லையோ நம்மை விட்டு தூரமாகி விடுவாள், எல்லா ஆண்களும் தோற்றுப்போகின்ற ஒரே இடம் பெண்களின் அழகில்தான், அந்த அற்ப ஆசையும் ஒரு காரணம் கண்டிப்பை குறைத்துக்கொள்ள.
நான் வெளி ஊரில் இருக்கும் போது பொதுவாகவே மகளை தொலைபேசியில் அழைப்பதில்லை அவள் என் அழைப்பை எடுக்கவும் மாட்டாள் குறும்செய்தி எதுவும் அனுப்பினால் பார்க்கவும் மாட்டாள் பார்த்தல் பதில் கூறவும் மாட்டாள் ஏதாவது படிப்பு பத்தி பேச ஆரம்பித்துவிடுவேன் என்று. ஒரு அப்பா மகளுடன் படிப்பை பத்தி பேசுகிறான் என்றாள் அது பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட மேலான ஒன்று என்பதை புரியாத மகள். இதை என் மனைவிக்கு புரிய வைக்க முயற்சித்து தோற்றுப்போனேன், மகளின் எதிர்காலம் பத்தி பேசி பேசி பேச்சு நிறைய முறை சண்டையில் முடிந்திருக்கிறது, அதை தொடர்ந்து வெகு நாட்கள் நானும் மனைவியும் பேசாமலே இருந்திருக்கிறோம்.
மனைவி நன்றாக என் எண்ணங்களை புரிந்திருந்தால் இந்த பிரச்சனைகள் இருந்திருக்காது, ஒரு வகையில் மனைவியும் என்ன செய்வாள் அலுவலக வேலை, வீட்டு வேலை அப்பா அம்மா அத்துடன் நான் கொடுக்கும் மகளின் படிப்பு விசய அழுத்தத்தையும் ஏற்று க்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அவளும் பெண்தானே என்பதை விட அவளுக்குள்ளும் ஒரு உயிரும் உணர்வும் இருக்கின்றது என நான் புரிந்து கொண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது, இருந்தாலும் மகளின் எதிர் காலம் பற்றி சிந்திப்பது ஒரு பெற்றோரின் கடமை ஆகும்.
ஒருநாளும் இல்லாத திருநாள் போல, எப்போதாவது மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்,
அப்போது புரிந்துகொள்ளலாம் ஏதோ ஒன்று வீட்டில் அனைவராலும் மறுக்க பட்டிருக்கிறது அதை நான் இப்போது பூர்த்தி செய்ய வேண்டும்.
அவள் மேல் இருக்கும் எல்லா கோபங்களையும் தூக்கி எறிந்து விட்டு...
சொல்லு தங்கம் என்ன வேணும் என்பேன்,
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
இந்த உலகத்தில அன்பிற்கு முன்பு அனைவரும் தோற்று போகின்றனர், அப்படி தோற்றுப்போவதிலும் ஒரு ஆனந்தம் உண்டு அவள் கேட்டதை செய்து கொடுப்பேன் மிகவும் மகிழ்ச்சியும் அடைவேன்...
காரணம் அவள் என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள் யார் செய்தாலும் செய்யாவிட்டாலும் என் அப்பா இருக்கிறார் அவர் செய்வார் எனக்காக என்று, அதுதான் ஒரு அப்பாவாகிய எனக்கு கிடைக்கும் வெற்றி.
அவள் ஒரு நல்ல மகள் அவளது வேலை முடியும் வரை நான் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்வாள் வேலை முடிந்ததும் பழய குருடி கதவ திறடி தான், இது குழந்தைகளின் இயற்கை, ஒரே வருத்தம், இன்று வரை நான் சொல்லியதை அவள் எதையும் செய்யவில்லை, மனிதனுக்கு தேவையான பதினாறு தகுதிகளை பலமுறை விவரித்து கூறியும் எதையும் ஒழுங்காக கடைபிடிக்கவில்லை என்பதுதான், என்னக்காக செய்ய வேண்டாம் அவளின் எதிர்காலத்திற்க்காக செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை.
குழந்தைகள் புத்திசாலிகள், பத்து வயதில் படிக்க சொல்லி மிரட்டும் போது தாத்தா பாட்டி பின்னாடி ஒளிந்து கொண்டாள், பதினைந்து வயசுல அதற்றும்போது அப்பா கொடுமை படுத்துறாருனு போலீசுல கம்பளைண்ட் கொடுத்துவிடுவேன் என்றாள், இருபது வயதில் பட்டம் வாங்கியாச்சு சரி மேலே படி என்றதும், முடியாது என் கூந்தல் என் வாழ்க்கை, என் வாடிகா என்று தொலைக்காட்சி விளம்பரத்துல வர்ற மாதிரி பாரதியின் புதுமைப்பெண்ணாக பெண் உரிமை பேசினாள்
படிக்க ச்சொல்லி அப்பா அம்மா திட்டினாலே போலீசுக்கு போகலாம் என தெரிந்த மகளுக்கு, நல்லா படிச்சா நல்ல பொசிஷனுக்கு போகலாம் என்ற புத்தி இல்லையே என்று வருத்தமடைந்தேன். அல்லது நாம் அதை புரிய வைக்க தவறிவிட்டோமோ என தோன்றியது
சரி பட்டம் வாங்கியாச்சு வேலை ஏதாச்சும் பார்க்கலாமே என்றதற்கு நோ நோ டாட் ஐ கேன் நாட் மேனேஜ் போத் தி சைட் ஆப்டர் மை மேரேஜ் என்று ஆங்கிலம் பேசினாள், சரி அப்படின்னா கல்யாணம் பண்ணிக்கோ பெத்தவங்க கடமையாவது முடியும் என்று கொஞ்சம் வெறுத்துப்போய்தான் சொன்னேன்.
வாழ்க்கையில் முதல் முறையாக நான் சொன்னதை கேட்டு சரி என்றாள் என் மகள், மாப்பிள்ளை எப்படி வேண்டும் என்றேன், உங்களுக்கும் அம்மாவுக்கு புடிச்சிருந்தா போதும் எனக்கு ஓகே தான் என்றாள்....
கற்றுக்கொடுக்க நினைத்த பதினாறு தரங்களை விட உயர்வான ஒரு தரம் என்னிடத்தில் இருக்கிறது அப்பா,... அத்தரத்தி பெயர் குடும்ப மரியாதை என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது அப்பா அம்மாவிற்கு பிடித்திருந்தால் போதும் எனக்கு ஓகே தான் என்று சொன்ன போது....
நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், என் மனைவியின் பார்வையோ, பார்த்திங்களா நம்ம மகளை எப்படி ஒழுக்கமா வளர்ந்திருக்கிறேன் என்று கேட்பது போல இருந்தது.
இதுவரை என் மகள் என் பேச்சை கேட்காமல் இருந்தது எல்லாமே ஒரு அன்பின் வெளிப்பாடாகத்தான் தெரிந்தது, மேலே படிக்கவும், நல்ல வேலை தேடிக்கொள்ளவும் சந்தர்ப்பங்கள் இருந்தும் என் மகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கையை சுருக்கி க்கொண்டாள் என்பது மனதுக்கு சங்கடமாகவே இருந்தது...
நாம் என்னதான் பிள்ளைகளுக்கு அதை கொடுக்க வேண்டும் இதை கொடுக்க வேண்டும் என்று முயற்சித்தாலும், அவர்கள் அவர்களுக்கு பொருத்தமானதை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள் போல...
ஆக என் மகளுக்கு பொருந்தியது திருமணம் மட்டுமே என்று கூட இருக்கலாம், இது வரை என் பேச்சை கேக்காத என் மகள் இனிமேல் கேக்கவா போகிறாள், வழக்க போல வேண்டாம் என்றுதான் சொல்லுவாள், அதை காரணமாக வைத்து மேலே படிக்க சொல்லலாம் என எண்ணி திருமண பேச்சை எடுத்தேன், அவளோ திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லி என்னை ஆச்சரிய ப்படுத்திவிட்டாள்.
மகளுக்கு பெயர் வைக்கும் போது நர்மதா நதியின் எல்லா சிறப்புகளையும் ஆராய்ந்த நான் உல்ட்டா பேகதா நதி என்பதை ஆராயவில்லை, இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா தீபகற்ப நதிகளும் வெவ்வேறு திசைகளில் பாய்ந்து கொண்டிருக்க, என் வழி தனி வழி என நீண்ட தூரம் மேற்கே நோக்கி நீளமாக பாயும் நதி என்ற பெருமைக்குரிய நதி நர்மதா நதி மட்டுமே, அப்படிப்பட்ட நதியை மற்ற நதிகளுக்காக திசை திருப்பவா முடியும், எங்கள் நர்மதாவும் எங்கள் திசையில் இருந்து வேரு திசையில் பயணித்து க்கொண்டிருந்தாள், எங்களின் எண்ணங்களுக்கு அவளின் எண்ணங்களுக்கும் ஏழாவது பொருத்தம் கடைசிவரை அமையவேயில்லை.
ஆம் நர்மதாக்களை திசை மாற்ற யாராலும் முடியாது.... 🙏🙏