பொம்மியக்கா- அத்தியாயம் 3
கல்யாணம் கச்சேரி
காதுகுத்து கிடா வெட்டு னு
பலநாள் பாக்காத
பட்டினிப் பசிக்கு
வந்திருச்சு விருந்து
வித நெல்லை ஒடச்சு எடுத்து
விருந்து வைக்காறு மொக்கையா
சாப்பிடு மக்கா சாபிடுனு
சப்புகொட்டுது சனமெல்லாம்
வாழ இலைக்கு வக்கில்லாத காலத்துல
வந்தா போதுமுன்னு
ஓல இலைய ஒடிச்சு வந்து
உக்காந்தது ஊருசனம்
தண்ணீ தெளிச்சு தடவிகிட்டு
மொண்டு வந்த மழை தண்ணிய
மண்டுது மக்க
பசியாறி போகுமுனு
பாத்து! பாத்து! னாரு மொக்கையா
பாத்துக்குறோம் !பாத்துக்குறோம் னு
பாத்திகெட்டுது சோறால
கொலஞ்ச சோத்துல
கோழிகொழம்பு
ஓடி ஒழுகுது ஆறா
வேலி தாண்டா வெள்ளாடு ரெண்டு
விருந்துக்கு வந்திருச்சு
கழுத்து கறி எனக்கு
கால் எலும்பு எனக்கு னு
கச்சேரி கணக்கா
வாய்சண்டை வளருது
பல்லுல சிக்காத
பக்குவமான கறிய
பொக்குவாய் கிழவியொன்னு
தவணை முறையில மெல்லுது
பொம்மியக்கா பேரசொல்லி
பொட்டக்குருவி ரெண்டு
வீசுன இலைய கொத்தி
வைத்த நெரப்புது
நூறு தடவ நக்கிப்பாத்த
நல்லி எலும்பு ஒன்ன
தெருநாய்க்கு வீசுனாறு
கர்னமகாராசா ஒருத்தரு
சக்காம நடந்த சமரச விருந்துல
நாய்க்கும் நரிக்கும்
எலிக்கும் எதுக்கும்
விடிஞ்சது விருந்து
கரும்பு தோட்டத்துல
காட்டான புகுந்தது மாதிரி
கலைஞ்சு போன விருந்துல
கடைசியா ஒருத்தரு
பேரு பெரியமூக்கன்
வரிசை பந்தியில
வழக்கமா உக்காராம
ஒதுங்கி உக்காந்தாரு
ஒத்தையிலே
வெயில சிக்குன வத்தலா
வத்திப்போன வயிறும்
கலப்பைல சிக்குன கரம்ப மண்ணா
குழிவிழுந்த முகமுமா
வெளிய தெரிஞ்ச
விலா எலும்ப
வேட்டி துண்டால மூடாம
அழுக்கு துண்ட
அல்லையில ஒதுக்கிட்டு
குத்த வச்சு கிடக்காறு
வானம் பாத்தே
வழக்கப்பட்ட மனுஷன்
சோத்து வாலிய சோகமா பாக்காரு
எலிக்கும் எருமைக்கும்
இரைபோட்ட விருந்து
இவர மட்டும் கண்டுக்கவே இல்ல
சேத்த மிதிச்ச மண்வெட்டி மனுஷன் பக்கம்
சோத்து வாலி திரும்பவே இல்ல
எட்டி எட்டி பாத்து
ஏமாந்த மனுஷன்
எந்திருச்சு நடக்க எத்தனிக்கையில
ஓடி வாறாரு மொக்கையா
ஒண்டி பொறந்த பொறப்பேணு
ஒட்டி வச்சுகிட்டாறு
முகத்தோட முகத்த
தழுவுற கைலிருந்து
நழுவிப்போறாருபெரியமூக்கன்
ஒத்த சனம் பாக்கியில்லாமல்
ஊரெல்லாம் பாக்குது
தோள் துண்ட தொடையில தட்டிகிட்டு
துரைசாமி பிள்ளை எழுந்து நின்னாரு
பந்தியில இருந்த பாதிசனமும்
பட்டுன்னு எழுந்தது பாதி சோத்தோட
மொக்கையா தேவருக்கு
மூல சுண்டி போச்சா!
மெத்த தெரிஞ்ச பெரியாம்பலைக்கு
முறை மறந்து போச்சா??
நாய கொண்டுவந்து
நடுவீட்டுல வைக்காரு
சாக்கட தண்ணீல
சந்தனம் குலப்புராறு
எவன் சொன்னா என்ன
எவனுக்கு எங்க போச்சு புத்தி
எந்திரிடா ! ஈனசாதி பயலேன்னு
எங்கிருந்தோ ஒருத்தன்
எட்டி பாயுறான்
நலுவிப்போற நாலு நிமிசத்துல
நாலு அடி விழுந்துருச்சு பெரியமூக்கனுக்கு
பட்டினி பசியில
படி தாண்டி வந்துட்டேன்
செருப்ப சுமயா தூக்குற கூட்டம்
சம பந்தி சோறு கேட்டது தப்பு
விட்டுரு சாமி விட்டுருனு!
விடாம கத்துனாரு
ஏதோ ஒன்ன மிதிச்சது கணக்கா
முகத்த சுளிச்சுகிட்டு
எசவா கிடந்த எச்சி தொன்னையால
எடுத்து அடிச்சான் ஒருத்தன்
பட்டுன்னு நடந்ததுல
பதறிப்போன தேவரு
முண்டுன பயலயெல்லாம்
முட்டி தள்ளுறாரு
ஆளுயர அருவாள எடுத்து வீசி
ஆம்பள பய எவனோ ?
அடிடா பாபோம்னாறு
பொங்குன கூட்டமெல்லாம்
புச்சுனு போச்சு
பெரிய மூக்கன் -என்
பொறந்த பொறப்பு
கஞ்சிக்கு செத்து
கலப்பயோட நின்னப்ப
ஒண்டிக்கு வந்த ஒத்த கலப்ப
சாதி என்னலே சாதி?
சேத்துல சாவுற சாதி ஒண்ணு
சோத்துல வாழுற சாதி ஒண்ணு
பூமிய பாத்து
புள்ளகுட்டி பெக்குற
மண்வெட்டிகாரனுக்கு
என்னலே சாதி ?
பெரியமூக்கன் கால் பட்ட நாத்து -அவன்
கை பட்டா தான் கௌரவம்
இத முறையில னு சொல்றவன் எல்லாம்
முடிவா கிளம்பு னாரு
ஓட்டட அடிச்ச வீடா
ஒத்த சனம் இல்ல பந்தியில
பெரியய்யானு வந்த பெரியமூக்கன் மகளை
பெரியம்பள தூக்கிகிட்டு
பேயாம போறாரு