காத்திருப்பில் கரங்கள்

காற்றினில் ஓர்
இன்னிசை
மிதந்து வர
காத்திருந்த விழிகள்
வியந்து வழி நோக்க

காந்தள் பூவென்று
அழகு விரல்கள்
கொண்டு
புடவை நுனியினை
மீட்டி வர கண்டேன்

ம்... தனி சுரம் காதில்
இன்பகானம் பாய்ச்ச
காதலின் ஊற்று பெருக
மெய் பித்தம் கொள்ள
மலரின் அணைப்பில் நான்!

போதுமென
நாணம் சொல்ல
கரம் இழுத்து நடக்கிறாய்
வழிமறந்த குழந்தையாய்
உன் பின்னால் வருகிறது மனம்

இடையிடையே சிந்துகிறாய்
சிரிப்பை
சிதறுகிறது சிந்தனை
வார்த்தைகள் தடம்மாற
உளறலின் உருவமாய் நான்!

இதழோடு இதழ் பொருத்தி
விழியில் நீர்கசிய
மீண்டும் சந்திப்போம் சொல்லி
பிரிகிறாய் கரங்கள் நழுவ
புரியா பரிதவிப்பில் இதயம்!

உன் நினைவுகள்
கத்தரிப்பூவாய் தினமும்
விழியில் ஊஞ்சலாட
கண்ணீரில் நனைந்து
நழுவிய கரங்கள்
இன்றும் காத்திருக்கிறது
மீண்டும் ஒருமுறை
இறுகப் பற்ற வருவாய் என்று!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (1-Jun-21, 7:09 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 330

மேலே