இளமை வருகிறது பவனி , முதுமையே சற்று கவனி

தேடி, ஆடி, ஓடி, கூடி அலைந்தால் அது இளமையின் துள்ளல்தான்! ஆடிப் போய் ஆட்டம் கண்டாலோ அது முதுமை தான்!

பஸ்ஸில் நெரிசலில் தினமும் சென்று வரும் இளமை; பஸ்ஸில் நெரிசல் காரணமாக ஆட்டோவில் அமர்ந்து கொள்ளும், முதுமை!

மூன்று வேளை வயிறாற உண்டும், சுறுசுறுப்புடன் இயங்குவது இளமையின் தாளிப்பு; ஒரு வேளை கஞ்சி, இரண்டு வேளை அளவு சாப்பாடு, நாலு தரம் காப்பி என்பதோ முதுமை கொந்தளிப்பு!

தினமும் மூணு கிமீ ஓடினாலோ , ஐந்து கிமீ வேகமாக நடந்தாலோ, இளமையின் ரகசியம்; தினமும் இரன்டு கிமீ நடப்பதற்குள் ஓய்ந்து சாய்ந்தால், அது முதுமைதான் என்பது நிச்சயம்!

வெளியூர் பஸ்ஸில் அமர்ந்தவுடனேயே தூங்கிவிடுவது இளமையின் பாக்கியம்;
பஸ்ஸில் உட்காரவும் தூங்கவும் முடியாமல் தவிப்பது, முதுமையின் சௌபாக்கியம்!

அலுவலகத்தில் அதிகாரியையும் எதிர்க்கும் துணிவிருந்தால் அது இளமை படுத்தும் பாடு; இல்லத்தில் உள்ள(த்) துணையுடன் சமரசமாகப் போனால், அது முதுமை பண்பாடு!

காதில் மணிக்கணக்கில் இயர்போன் போட்டிருந்தால், இளமை போடும் சதிராட்டம்; எவரும் தன் பேச்சை காதில் போடுவதில்லை என்றால், அது முதுமையின் திண்டாட்டம்!

அடிக்கடி டென்ஷன், பரபரப்பு என்றால், அது துடிப்பான இளமையின் ரத்தம்; வாழ்நாள் முழுதும் டென்ஷன் பட்டு என்னத்த நாம் கண்டோம் ? இதுதான் முதுமையின் சித்தம்!

பாஸ்ட் புட், நவநாகரீகம், ஷாப்பிங் மால், இதெல்லாம் இளமை போடும் குத்தாட்டம்; வீட்டு உணவு, எளிமை உடை, கோயில் குளம், இதுக்கெல்லாம்தான், முதுமையில் நாட்டம்!

கண்ணோட்டம் எல்லா பக்கமும் இருந்தால் இளமை பவனி வருகிறது என்று அர்த்தம்; கண்ணோட்டம் ஒரு புறம் இருக்க, சிந்தனைகளில் பின்னோட்டம் இருப்பின் அங்கு முதுமை ஊர்கிறது என்று அர்த்தம்!

பைக்கில் சர்ர்ரென்று பறந்தால் அங்கே, இளமை ஊஞ்சல் வேகமாக ஆடுகிறது; அப்பாடா என்று சொகுசாய் ஊபரில் அமர்ந்தால் முதுமை ஊசல் ஆடுகிறது!

இளமை இனிமைதான்; விறுவிறுவென பல புதிய அநுபவங்கள் சேகரிக்கப்படுகிறது. அநுபவங்களின் பட்டறிவால் நமக்கு முதுமையில் தான் ஞானம் பிறக்கிறது, ஏன், சாந்தியும் கூட ..கூடக் கிடைக்கிறது!

ஆனந்தராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jun-21, 4:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே