சுதந்திரமாக வாழ்வது என்றால் என்ன

சுதந்திரமாக வாழ்வது தான் ஒருவருக்கு உண்மையான வாழ்க்கையாக இருக்க முடியும். ஒரு விதத்தில் பார்த்தால், எவருமே சுதந்திரமாக வாழ்வதில்லை. ஏனென்றால்,
உண்மையான சுதந்திரம் என்பது நாம் நினைத்த நேரத்தில் சாப்பிடுவது அல்ல; ஆனால் நமக்கு தேவையானதை மட்டும் நாம் விரும்பும் நேரத்தில் சாப்பிடுவது சுதந்திரம்;

தொலைக்காட்சியை தவறாமல் மணிக் கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பது சுதந்திரம் அல்ல; நமக்கு ஏற்றம், ஊக்கம் தரும் தரமான நிகழ்ச்சிகளை, நமக்கு உகந்த நேரத்தில் பார்த்து ரசிப்பது சுதந்திரம்;

பக்கத்து வீட்டினருடனும், போனிலும் அரட்டை அடிப்பது சுதந்திரம் அல்ல; இருவருக்கும் பரஸ்பரமான நன்மை தரும் , ஒருவரை ஒருவர் ஊக்குவிக்கும், உற்சாகப் படுத்தும், சவால்களை எதிர் கொள்ள உதவும் சம்பாஷணைகள் நிறைந்த பேச்சு இருப்பின் அது சுதந்திரம்;

ரொம்ப வேண்டிய ஒருவரின் வீட்டுக் கல்யாணத்திற்கு சென்று, 2 நாட்கள் நல்ல விருந்து சாப்பிட்டு வருவது சுதந்திரம் அல்ல; சாப்பாட்டில் மட்டும் அக்கறை காட்டாது, ஏற்பாட்டிலும் அக்கறை காட்டி, தம்மால் முயன்ற உதவிகளை அவருக்கு செய்து தந்துவிட்டு வருவது, சுதந்திரமான காரியம்;

"வாழ்வதற்கு தேவையான வசதிகள் என்னிடம் இருக்கிறது. நான் ஒன்றும் செய்யத் தேவையில்லை" என்று சும்மா உட்கார்ந்து சாப்பிட்டு இருப்பது சுதந்திரம் இல்லை; பிறரும், குறிப்பாக, மெலிந்தவர்கள், நலமுடன் வாழ நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்து, முடிந்த வரை, அதை செயலளவில் செய்து திருப்தி அடைவது துதிக்கப் படவேண்டிய அருமையான சுதந்திரம்;

ஒரு நடிகர், நடிகை, ஒரு கிரிக்கெட் வீரர், ஒரு அரசியல் தலைவர், இவர்களைப் பற்றிய, தம் வாழ்க்கைக்கு உதவாத, ஒவ்வொரு சிறு சிறு செய்திகளையும் , கிசுகிசுக்களையும் ஒரு வரி விடாமல் வெகு ஆர்வத்துடன் படித்தும், தெரிந்தும் கொள்வது சுதந்திரமாகாது; ஏன்? "நானும் கூட ஆற்றல் மிக்கவன்தான்" என்ற நம்பிக்கை கொண்டு, "எனக்கும் ஏதாவது ஒன்றை வாழ்க்கையில் செய்து நிரூபிக்க முடியும்" என்று சூளுரை கொண்டு, அந்த எண்ணத்தை வண்ணமாய் தீட்டி, வைராக்கியமாய் மாற்றி அமைத்து அதன்படி வாழ்ந்து செயல்படுவது, சுதந்திரத்தை அற்புதமாக அநுபவிக்கும் ஒரு சிறந்த காரியமாகும்.

சுதந்திரம் என்பது தந்திரம் அல்ல மந்திரமும் அல்ல; அல்லது எந்திரம் போல வாழ்வதும் அல்ல; ஒருவரின் ஆழ்மனதில் உள்ள முத்தான சிந்தனைகளை தோண்டி எடுத்து, அதில் உள்ள பழுதுகளை அப்புறப் படுத்தி, பின் அதை மெருகேற்றி, தூண்டி விட்டு, சுரந்து வந்த அந்த நற்சிந்தனையின் படி வாழ ஆர்வத்துடன் பாடுபடுவது, என் பார்வையில், சுதந்திரத்திற்கு ஒரு மகுடம் சூட்டுவதான செயலாகும் .

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Jun-21, 11:21 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே