தந்தை ஒரு விந்தை
( தந்தையர் தின கவியரங்கக் கவிதை )
தந்தையே ! நீங்கள் விந்தையானவர் !
வாழ்க்கையில் முந்தியே ஓடிட
எங்களை ஊக்குவித்தீர்கள் !
வீழ்ந்த போதெல்லாம் எங்களை
விழித்தெழச் செய்தீர்கள் !
தாழ்ந்த போதும் உமது கைகளில் எம்மைத்
தாங்கிக் கொண்டீர்கள் !
தோள்களில் எம்மைத் தூக்கி
உயரத்தைக் காட்டியவர்.
தான் பார்க்காத வற்றை எல்லாம்
நாங்கள் பார்த்திட வழி வகுத்தீர்கள் !
குடும்பத்தில் கொண்டாட்டம்
குறைவின்றி நிலவிட
கொளுத்தும் வெயிலையும்
குளிர் நிலவாக்கிக் கொண்டீர்கள்.
தந்தையாய் ஆனபின்பும் எங்களைக்
குழந்தையாய் நினைத்தீர்கள்- ஆனால்
உங்களைத் தந்தையாகக் கருதுதாமல்
முதுமையாக்கி அல்லவா போட்டு விட்டோம்..
உங்கள் இளமையை உருக்கி
எங்கள் முதுகினை நிமிரவைத்தீர்கள்- ஆனால்
உங்கள் முதுமையைக் கண்டு
இன்று முகத்தை அல்லவா சுழிக்கிறோம் !
புதுமை உலகத்தைப் புரிய வைத்தீர்கள் !
நாங்களோ உங்களை -அந்தப்
புதுமை உலகத்தில் புலம்ப அல்லவா
வைத்துவிட்டோம் !
எல்லாம் தெரிந்த தந்தையாக இருந்தும்
எதுவுமே தெரியாத கிழமாக்கி அல்லவா
வைத்து விட்டோம் ?
தோளில் சுமந்து சுமந்து சென்றவரை –ஒரு
சுமையாக அல்லவா கருதி விட்டோம் !
மன்னித்து விடுங்கள் ! காலத்தின் கோலம் !
எங்கள் முதுமையில் நாங்கள் எக் கோலமோ !
கூட்டுக் குடும்பங்கள் குலைந்து போனதால்
பாச வலைகள் அறுந்து போனது !
சுயநலக் கிருமிகள் புகுந்து விட்டன
தடுப்பு ஊசிகள் கண்டு பிடித்தால் மட்டுமே
நாங்கள் எதிர்காலத்தில் இயங்கமுடியும்.
இல்லையென்றால் சுமையென்று கருதி
கடலிலே வீசப் படலாம் !
தந்தையின் தினத்திலாவது
உங்களை நினைத்துக் கொள்கிறோம்.
நினைத்துக் கொள்ளவாவது
நெஞ்சில் ஈரமிருக்கிறதே என்று
நெகிழ்ந்து கொள்ளுங்கள் !
தந்தையே நீ பட்ட இன்னலை
நாங்களும் பட்டு விடக் கூடாதே
என்பதால் மட்டுமே உன்னை நினைத்து
தந்தையர் தினத்தைக் கொண்டாடுகிறோம் !
வாழ்த்துங்கள் தந்தையே !
*************** 20-06-2021 *********** பொதிகை மு.செல்வராசன்.