பாரதம்

பலவிதமாய் மலர்சென்று பார்த்துநல்ல தேனெடுத்து
பாரதமாம் தேன்கூட்டைக் கட்டி வைத்தார்.
உலகெல்லாம் போற்றிடவும் ஓங்குபுகழ் கொண்டிடவும்
ஊன்மறந்து உறங்காமல் உழைத்து நின்றார் !
அளவற்ற கலைவளர்த்து அகிலமெங்கும் கொண்டுசென்று
அண்ணாந்து பார்க்கின்ற உயரம் தந்தார் !
களங்கத்தின் கல்லெடுத்துத் தேன்கூட்டை கலைக்காமல்
காத்திடணும் உயிர்மூச்சாய் தேசம் தன்னை !

முப்பக்கம் கடல்நீராம் மலைபனியும் ஒருபக்கம்
மக்களெல்லாம் மனமகிழ்ந்து வாழும் நாடு !
ஒப்பில்லாத மனிதநேயம் உயர்ந்தோங்கி நிற்பதனால்
ஒழிக்கமுடன் வழிகாட்டி உயர்ந்த நாடு !
செப்புகின்ற மொழிபலவும் செம்மையுடன் இருப்பதனால்
செறிவான கருத்தெல்லாம் தோன்று தன்றோ ?
எப்பொழுதும் தாய்நாட்டை மூச்சாகக் கொண்டுவிடின்
என்றென்றும் தழைத்துவிடும் உலகும் போற்றும் !

தலைநிமிர்ந்து கைவிரித்து நிற்பதுதான் பாரதமும்
தலைப்பகுதி வடக்காகும் தளர்வு இல்லை !
நிலைபெற்று நிற்கின்ற கால்பகுதி தெற்காகும்
நீட்டுகின்ற கையொன்று கிழக்காய் காட்டும்
தொலைநோக்கில் மற்றொன்று மேற்காகும் திசைகாட்டும்
தோல்மூடி இருக்கின்ற நரம்பின் கூட்டம்
வலைபின்னி ஓடுகின்ற நதிகளாகி வளங்கூட்டும்
நிலையற்ற உயிருக்கோ நீரின் ஓட்டம் !
******************** 05/2021 ******

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Jun-21, 11:51 am)
பார்வை : 173

மேலே