தலைவி வருந்துதல்

இருண்டமேகச் சூழல்கள் உன் கூந்தல் என்றான்
அழகிய கமுகும் தோற்கும் அழகு உன் கழுத்து என்றான்
பொன்னொளி வீசும் பிறைநிலா உன் நெற்றி என்றான்
வானவில்லும் ஏங்கும் வடிவம் உன் புருவம் என்றான்
கண்பறிக்கும் கயல்மீன்கள் உன் விழிகள் என்றான்

சிவந்திருக்கும் முல்லை அரும்பு உன் இதழ்கள் என்றான்
ஒளிவீசும் முழுமதி பொறாமை கொள்ளும் மின்னிழை வஞ்சி என்றான்
பிடிக்குள் அடங்கும் உடுக்கை போல் சின்ன இடை என்றான்
சந்தனம் குழைந்து அமுதம் கலந்து பூசிய அழகு மேனி உனது என்றான்
மெல்ல மெல்ல நடைபழகும் அன்னப்பேடை நீ என்றான்

பேதை நானும் மயங்கினேன் அவன் பால் மையல் கொண்டேன்
இதயம் இடம்மாற காதல் பெருக களவும் கொண்டேன்
நாளும் கூடி இன்பங்கள் பலகோடி காண களிப்பு கொண்டேன்
வாழ்வில் ஏற்றம் காண நாவாயில் ஏறிச் சென்றான் வெறுமை கொண்டேன்

வாடாமலர் சூடி மணம்கொண்ட கூந்தல் வாடக் கண்டேன்
கண்ணயரும் விழிகளுக்கு தூக்கம் தூரமாகக் கண்டேன்
முப்பொழுதும் அவன் நினைவில் என்நிலை மாயக் கண்டேன்
வேதனையில் நான் பிதற்ற சுற்றமும் நட்பும் பரிகாசிக்கக் கண்டேன்

என்நிலை காதல் நோயின் முக்தி நிலை அறிந்த பின்பும்

தண்ணளிதனை தொலைத்து வானில் தோடும் நிலவே
கொதிக்கும் உன்னொளியால்
தனித்திருக்கும் என்னை நீயும் வாட்டலாகுமோ?

நெய்தல் மலரோடு உறவாடி களிகூரும் வண்டோடு மதுவருந்தி
தள்ளாடிவரும் இளந்தென்றலே
கைவளை நெகிழ காத்திருக்கும் என்மேல் புயலாய் நீயும் பாய்தலாகுமோ?

இரக்கமில்லா காம துட்டா மலர்க்கரும்பில் நாணேற்றி
சந்தனமலர்மேனி பொன்னொளிதானிழந்து
பசலை தீயில் தினம் வாட காதல் கணைகள் நீயும் எறிதலாகுமோ ?

ஆசைத் தீயில் அனல் மூட்டி நெஞ்சம் பறித்து
பெண்சென்மம் பரிதவிக்க விட்டுச் சென்ற கள்வா
இனிமை முதிர்ந்தொழுகும் இளமை பூவுடல்
மோகத் தீயில் கருகி உருகும் முன்னே
எனைச் சேரவா என் ஆசை காதலா!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (5-Jul-21, 12:21 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 530

மேலே