போல்ட் நட் ஸ்க்ரூ

இரண்டு நாளுக்கு முன் தொல்லை காட்சியில், மன்னிக்கணும் சகோ, தொலை காட்சியில் உலகத்தின் மிக வேகமான மனிதர் ஹுயூஸைன் போல்ட்ஐ (Hussein Bolt) பார்த்தேன். அடேங்கப்பா, எப்படி பட்ட திறன் படைத்த உலக மின்னல் வேக ஓடுனர் என்று வியந்து ஆச்சரிய பட்டேன். இந்த நினைவுகளுடன் தான் அன்று இரவு உறங்கினேன்.

ஒரு வேலை விஷயமாக நான் ஜமைக்கா (Jamaica) தேசம் செல்ல வேண்டி இருந்தது. உங்களிடம் சொல்ல என்ன தயக்கம். நான் நம்ம ஊரில் ஒரு ஹார்ட்வர் (வன்பொருள்) கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். இந்த கோவிட் டேவிட் திராவிட் பிரச்னை வந்ததிலிருந்து என்னுடைய வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. என்ன செய்ய, என் சம்சாரம் ரொம்ப பெருசு. (அட நீங்க ஒன்னு, என் மனைவி மிக குண்டு என்று எண்ணி விட வேண்டாம். அவள் எப்போதும் குண்டு மணி மாதிரி சிக்குன்னு பளபளன்னு தான் இருப்பாள்). வீட்டில் ஆட்கள் அதிகம் என்பதைத்தான் பெரிய சம்சாரம் என்று குறிப்பிட்டேன். மனைவி ஒருத்தி, அவளுடைய தங்கை ஒருத்தி (கல்யாணம் இன்னும் ஆகலிங்க. ஹிஹிஹி), அவளுடைய தம்பி ஒருத்தன்( கல்யாணம் பண்ணுவதை தவிர மற்ற எல்லாம் பண்ணி கொண்டுதான் இருக்கிறான்), என் குழந்தைகள் இரண்டு மூன்று. ஒண்ணும் நெனச்சுக்கிட வேண்டாம். இரண்டு என் சொந்த குழந்தைகள், அதாவது என் மூலம் பிறந்த குழந்தைகள். இன்னொண்ணு என் மனைவியின் அன்பு தங்கச்சி கெஞ்சி கேட்டதின் பேரில் ஒரு பெண் குழந்தயை தத்து எடுத்தோம். ஆக வீட்டில் எத்தனை பேரு? எங்கே உங்களுக்கும் கணக்கு போட தெரியும் தானே? சட்டுன்னு சொல்லுவீங்களா? ஆமாம் ரொம்ப சரியாகத்தான் சொன்னீர்கள். ஏழு உருப்படிகள், அட என்னுடைய பாண்ட் ஷர்ட்ஐ சொல்லல. என் குடும்பத்தின் ஜனத்தொகையை தான் சொன்னேன்.

சரி விஷயத்துக்கு வாங்க. நான் என் வியாபாரத்தை விருத்தி செய்ய என்ன செய்யலாம்னு யோசனை செய்துகொண்டிருந்த போது, எனக்கு வேண்டிய நண்பர் ஒருவர் " ஏம்ப்பா, ஒரு தடவை நீ ஜமைக்காக்கு போய் வரலாமே" அப்படின்னு சொன்னார். நான் சொன்னேன் எனக்கு சமைக்க தெரியாதுன்னு. அவர் சொன்னார் "அட நீ ஒண்ணுப்பா, உனக்கு சமைக்க தெரிய தேவை இல்லை. அமைக்க தெரிந்தால் போதும். ஜமைக்கா என்பது மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்று. அங்கு போய் வருவாயா என்று தான் கேட்கிறேன்"
ஏன்பா திடீர்னு என்னை நாடு கடத்த பார்க்கிறாய்" அவர் சொன்னார் "அந்த தேசத்தில் தன ஹுசைன் போல்ட் வசிக்கிறார்" நான் சொன்னேன் " அவர் எந்த தேசத்தில் இருந்தா எனக்கு என்னப்பா"
அவர் சொன்னார் " இப்போ ஓட்டம் ஏதும் இல்லை என்பதால் ஹுசைன் போல்ட் அவர் குடும்ப தொழிலான போல்ட் நட் ஆணி விற்கும் வியாபாரம் செய்து ஆட்டம் போட்டு வருகிறாராம். அவங்க குடும்பத்தில் செய்யப்படும் போல்ட் நட்டுக்கள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவையாம். நீ அவரை நேரில் சென்று பார்த்தால் அவர் உன் போல்ட் நட் வியாபாரத்தை எப்படி அபிவிருத்தி பண்ணலாம் என்பதை பற்றி தகுந்த அறிவுரைகள் கொடுப்பாரு. அந்த அறிவுரையை நீ செயல் படுத்தினால் உன் வியாபாரம் கண்டிப்பா அமோகமாக இருக்கும்.

யோசனை சொன்ன நண்பர் சென்று விட்டார். நான் அன்று தூக்கமே இல்லாமல் இதை பற்றி யோசித்தேன். ஒரு முறை போய் பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. மனைவியிடம் சொன்னபோது " சரி சென்று வாருங்கள். எப்படியோ நம்ம வியாபாரம் நல்லா ஓடினா சரி. நான் தான் வீட்டை கவனிக்கணும். என் தங்க சிட்டு தான் பாவம். (அவள் தங்கையின் பெயர் சிட்டு). அவளையும் கூட்டிகிட்டு போயிட்டு வாங்க." இது என்னடா வேணும்ங்கிற வம்பு வருது என்று நினைத்தேன். ஆனா சிட்டு என்னுடன் வர மறுத்துவிட்டாள். ஏன்னா ஹுசைன் போல்ட் என்றால் அவளுக்கு பயமாம். நான் சொன்னேன் " ஏம்மா சிட்டு, நான் மட்டும் போய் போல்டை பார்த்துட்டு வாரேன். நீ ரூம்லேயே இருந்துக்கோ." அதுக்கு சிட்டு சொன்னது எனக்கு இன்னமும் சுருக்குன்னு குத்துது. அவள் என் மனைவியிடம் சொன்னாளாம் " ஹுசைன் போல்டை நேரில் பார்க்க பயம் உன் கணவருடன் இரவில் தனிமையில் தங்கவும் பயம்.' நான் என்ன அவ்வளவு அரக்கனா? சரி, சரி, இந்த விஷயத்தை இடத்தோடு விட்டுடலாம். ஏற்கெனவே நமக்கு ரொம்ப நல்லா பெயர்.

ஒரு நல்ல நாளில் ஜமைக்கா சென்று அடைந்தேன். ஒரு ஹோட்டலில் ரூம் போட்டிருந்தேன். விமான பயணம், ஹோட்டல் ஏற்பாடு எல்லாம் ஆன்லைன்ல தான். ஹோட்டலுக்கு போய் அங்கே கிடைத்த சைவ உணவை சாப்பிட்டு விட்டு, டெலிபோன் புத்தகத்தில் ஹுசைன் போல்டோட போன் என்னை கண்டு பிடித்து அவருடன் பேசினேன். என்ன அப்படியே யோசிக்கிறீங்க? இந்த ஆளு எந்த மொழியில் போல்ட்டுடன் பேசினார்ன்னு. நான் பிகாம் படித்து பட்டம் பெற்ற ஆளுங்க. ஓரளவுக்கு ஆங்கிலமும் தெரியும். you know that!

ரொம்ப ஆச்சர்யம் என்னன்னா, ஹுசைன் போல்ட் என்னுடன் மிகவும் அன்பாக பேசினார். அடுத்த நாளே வீட்டுக்கு வர சொல்லி வீட்டு விலாசத்தையும் கொடுத்தார். எனக்கோ ஏகப்பட்ட மகிழ்ச்சி. அன்னிக்கு சாயங்காலம் பக்கத்துல ஒரு பூங்காவுக்கு போய் வேடிக்கை பார்த்தேன். அங்கே சிறுவர்கள் விளையாடுவதையும் , முதியவர்கள் மெதுவா நடை பழகுவதையும், இளம் வாலிபர்களும் நங்கையர்களும் கை கோர்த்து கொண்டு, சிரித்துக்கொண்டு ,அவ்வப்போது கட்டி பிடித்து முத்தம் கொடுப்பதையும் கண்டு மகிழ்ந்தேன். வேறு என்ன செய்ய முடியும், சொல்லுங்க!

அடுத்த நாள் பிரட் பன் ஜாம் வெண்ணை தடவி சாப்பிட்டு விட்டு, தேநீர் குடித்து விட்டு ஒரு டாக்ஸி பிடித்து ஹுசைன் போல்ட் வீட்டுக்கு சென்றேன். நான் இருந்த இடத்திலிருந்து இருப்பது கிலோ மீட்டர் தூரம் அவர் வீடு. அவர் வீட்டு வெளியே ஒரு நாய் இருந்தது. என்னை உள்ளே விடாமல் மிகவும் படுத்தியது. நல்ல வேளை. ஹுசைன் போல்டே வெளியே வந்து அந்த நாயை கொஞ்சம் கடிந்து கொண்டு (அவர் வீட்டு வாட்ச்மேன் தான்) என்னை கை குலுக்கி (அப்பா , அம்மாடி என்ன ஒரு கை குலுக்கு, என் விரல்கள் எல்லாம் ஒடிந்து விடும் போல் இருந்தது) வீட்டிற்குள் அழைத்து சென்றார். நான் அவருக்கு என் வீட்டில் செய்த 50 லட்டும் , 100 தட்டையும் கொடுத்தேன். அவர் மிகவும் மகிழ்ந்து " அன்பு ஸ்க்ரூ, இதோ பார் ஒரு மனிதர், இந்தியாவிலிருந்து என்னை பார்க்க வந்திருக்கார்.' ஸ்க்ரூ அவருடைய மனைவி. போல்ட்டுக்கு ஏத்த ஸ்க்ரூ தான் என்று நினைத்தேன்.

நான் என்னை பற்றியும் என் வியாபாரத்தை பற்றியும் சொன்னேன். அவர் மிகவும் பொறுமையுடன் கேட்டார். பத்து நொடிக்குள் நூறு மீட்டர் ஓடுபவர் இவ்வளவு பொறுமை உள்ளவரா என வியந்தேன். என் முகத்தை பார்த்து என் எண்ணத்தையும் புரிந்து கொண்ட போல்ட் சொன்னார் " அன்பரே, பொறுமை எவ்வளவு அதிகமோ அவ்வளவு வேகமும் இருக்கும்" அடடா என்ன ஒரு வார்த்தை என்று ரசித்தேன்.
இடையில் ஸ்க்ரூ வந்து எங்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை வைத்தாள். போல்ட் விற்பனை செய்வது இரண்டே பொருள்கள் தான். ஒன்று போல்ட் இன்னொன்று நட். இந்த போல்ட் நட்டில் நிறைய அளவுகள் உள்ளது. பெரிது சின்னது என்று. போல்ட் சொன்னார் " என்னுடைய போல்ட்களை 'டிசைன் போல்ட்' என்ற பெயரிலும் நட்டுகளை 'கிரௌண்ட் நட்' என்ற பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்கிறேன். நான் கேட்டேன் ' . நான் நீங்கள் ஸ்க்ரூக்கள் விற்பதில்லையா என்று. அவர் சொன்னார் " கலயாணத்திற்கு முன் ஸ்க்ரூக்கள் விற்று வந்தேன். ஆனால் என் மனைவியின் பெயரே ஸ்க்ரூ என்று இருப்பதால் ஸ்க்ரூக்கள் விற்பதை நிறுத்தி விட்டேன். நான் உடனே அவரிடம் கேட்டேன் " சார், நீங்க ஸ்க்ரூ விற்பனை செய்வதில்லை என்றால் நான் இந்தியாவில் உங்கள் ஸ்க்ரூவை விற்பனை செய்யலாமா? அவர் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தார். அதே நேரத்தில் அவர் மனைவி ஸ்க்ரூ அங்கு வந்து ' நீங்கள் கொடுத்த இனிப்பும் உப்பு பலகாரமும் ரொம்ப சுவையாக உள்ளது. ஊருக்கு சென்று இவை இரண்டையும் நீங்கள் எங்களுக்கு கூரியரில் அனுப்பி வையுங்கள், எங்கள் செலவில்.". இதை கேட்ட ஹுசைன் போல்ட் ' எங்கே கொஞ்சம் எனக்கும் அதை சுவைக்க கொடு என்றார். ஸ்க்ரூ கொடுத்த லட்டுவையும் தடையையும் சுவைத்து ' அடாடா, எவ்வளவு ருசி என்று மகிழ்ந்தார். உடனே என்னிடம் " என்னுடைய ஸ்க்ரூ வியாபாரத்தை இனி நீங்களே இந்தியாவில் நடத்துங்கள். நான் எல்லா வழி முறைகளையும் சொல்கிறேன் என்றார். நான் அவருக்கு நன்றி சொல்லி " இதற்காக நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும், எப்படி தர வேண்டும் என்பதை தயவு செய்து கூறுங்கள் என்றேன். அவர் சொன்னார் " கவலை வேண்டாம். நான் அதிகமாக பணம் ஏதும் கேட்கமாட்டேன். உங்களுக்கு 20%க்கு மேலாக லாபம் வந்தால் எனக்கு லாபத்தில் 5 % மட்டும் கொடுங்கள் போதும்". நான் உங்களுக்கு நான் தயாரிக்கும் ஸ்க்ரூவின் தொழில் நுட்ப உரிமையை உங்களுக்கு கொடுக்கிறேன். அதற்காக நீங்கள் பத்தாயிரம் அமெரிக்கா டாலர்கள் கொடுத்தால் போதுமானது. இதையும் நீங்களே ஓரிரு வருடங்களில் உங்களின் வியாபாரம் வளர்ந்த பின் கொடுத்தால் போடும். ஒரு வேளை வியாபாரம் லாபகரமாக இல்லை என்கிற பட்சத்தில் நீங்களே எனக்கு பணம் எதுவும் தர வேண்டாம். நானே ஒரு முறை இந்தியா வந்து இந்த ஸ்க்ரூ பொருட்களுக்கு முடிந்த விளக்கமும் விளம்பரமும் கொடுக்கிறேன்." நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் சொன்னார் " நீஙகள் பணம் அனுப்புகிறீர்களோ இல்லையோ, இந்த சுவையான இனிப்பு லட்டுகளையும், தட்டைகளையும் அவ்வப்போது எங்களுக்கு கோரியரில் அனுப்பி வையுங்கள்.

வெற்றிகரமாக இந்தியா திரும்பினேன். ஹுசைன் போல்ட் சொன்ன படி எல்லாமே நல்லபடியாக நடந்து முடிந்தது. தற்போது நான் மாதம் ரூபாய் இருபது லட்சம் வரை, மிஸ் ஸ்க்ரூ வியாபாரம் செய்கிறேன்.
(இந்தியாவில் ஹுசைன் போல்டின் ஸ்க்ரூவை மிஸ் ஸ்க்ரூ என்ற பெயரில் விற்பனை செய்கிறேன்) . போல்ட் புண்ணியத்திலும் , இறைவன் அருளாலும், ஏதோ உங்களை போன்ற நல்ல மனிதர்களின் வாழ்த்துக்களாலும் என் வியாபாரமும் நன்றாகவே நடந்து வருகிறது. என் மனைவி தம்பி தான் என் ஸ்க்ரூ வியாபாரத்தில் மேனேஜர். சிட்டுக்கும் சிக்குன்னு ஒரு பையன் கிடைத்து சட்டுன்னு கல்யாணம் ஆயிடிச்ச்சு. சிட்டு பிடிவாதமா என்கூட தான், இல்லங்க, எங்க கூட எங்க வீட்டில் தான் வசிப்பேன் என்று அடம் பிடித்ததால் மாப்பிள்ளையும் ஒப்புக்கொண்டு விட்டார். அவர் சுத்தி வியாபாரம் செய்கிறார். அதனால் தான் என்னவோ எப்போதும் சிட்டையே சுத்தி சுத்தி வருகிறார். இதனால் அவ்வப்போது எனக்கு தலை சுத்துது . இருப்பினும் பரவாயில்லை. நாம் வாழ்கின்ற உலகமே எப்போதும் வெகு வேகமாக சுத்திக்கொண்டிருக்கும்போது இந்த தலை சுத்தல் எல்லாம் ஒண்ணுமே இல்லை. இன்னொன்று, சிட்டின் மாப்பிள்ளை யார் தெரியுமா? தெரிஞ்சா ரொம்ப ஆச்சர்ய படுவீங்க. அவர்தான் எனக்கு ஹுசைன் போல்டை சந்திக்க யோசனை கூறிய அருமை நண்பர் சுத்திய மூர்த்தி, மன்னிக்க வேண்டுகிறேன், சத்திய மூர்த்தி. என்ன, சரிதானே வாசகப்பெரு மக்களே?

ஆனந்த ராம்

பின் குறிப்பு
இப்போது ஹுசைன் போல்ட், போல்ட் நட் வியாபாரத்தை விட்டுவிட்டு நான் அனுப்பும் லட்டுகளையும் தட்டைகளையும் அவரும் ஸ்க்ரூவும் சாப்பிட்டது போக மீதியை அவர் நாட்டில் விற்று நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார். இவர்கள் இருவரும் பேரையும் மாற்றிக்கொண்டு விட்டார்களாம். என்னவென்று? லட்டு போல்ட், தட்டை ஸ்க்ரூ. இப்போது இருவரின் எடையும் பத்து கிலோ கூடி விட்டதால் இனி வரும் ஒலிம்பிக் விளையாட்டில் இவர் ஓடுவாரா அல்லது நடப்பாரா ? இதை லட்டும் தட்டையும் தான் முடிவு செய்ய வேண்டும். நான் இதுவரை கலாய்ச்சியத்தில் எது கனவு எது நெனவு என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கணும்.???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (10-Jul-21, 6:01 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 97

மேலே