அன்னைத் தமிழின் பெருமைகள் கவிஞர் இரா இரவி

அன்னைத் தமிழின் பெருமைகள்!

கவிஞர் இரா. இரவி

உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்
உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழ்!

முதல் மனிதன் முதலில் மொழிந்தது தமிழ்

மொழியியல் ஆய்வாளர்கள் உரைத்திடும் உண்மை!

தாய்மொழிகளின் தாயாக விளங்கும் தமிழ்
தரணியில் உதித்திட்ட ஒப்பற்ற மொழி தமிழ்!

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே
கனிவுடன் முன் தோன்றிய மொழி தமிழ்!

ஒரு எழுத்துக்கும் பொருள் உள்ள தமிழ்
ஒரு எழுத்து மாறினால் பொருள் மாறிடும் தமிழ்!

உலகம் முழுவதும் இன்றும் ஒலிக்கும் தமிழ்
உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை!

பன்னாட்டு மொழியாக விளங்கிடும் தமிழ்
பண்பாட்டை உலகிற்கு உணர்த்திடும் தமிழ்!

ஆதியில் உதித்து இன்றுவரை நிலைத்திட்ட தமிழ்
ஆதிபகவன் திருக்குறளை வடித்திட்ட தமிழ்!

உலகப்பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்
உலகப்பொதுமறையால் உலகப்புகழ் பெற்றிட்ட தமிழ்!

ஓலைச்சுவடி தொடங்கி கல்வெட்டில் நிலைத்து
ஒப்பற்ற கணினியில் வலம் வரும் தமிழ்!

கீழடியில் கிடைத்திட்ட மண்பானையில் தமிழ்
கண்டுபிடிக்க கண்டுபிடிக்க வியப்பைத் தரும் தமிழ்!

கடல் கடந்து அயல்நாடுகளிலும் தமிழ்
கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தமிழ்

வட இந்தியாவின் தெருப்பெயரில் வாழும் தமிழ்
வடகொரியாவிலும் நிலைத்து வாழும் தமிழ்!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தமிழன் நாமக்கல்லாரின் வைர வரிகள் உண்மையடா!

உலகின் முதல்மொழிக்குச் சொந்தக்காரன் தமிழன்
உலகின் முதல் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ்!


--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (23-Jul-21, 6:27 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 17

மேலே