என்னதான் நடக்கும்

என்னதான் நடக்கும்
புருவஞ்சுருக்கி பார்த்திடுவோம் .....
என்னதான் நடக்கும்
போர்க்களஞ்சென்று பார்த்திடுவோம் .....

அச்சங்கொள்ளத் தேவையில்லை ....
மிச்சம்வைக்காது உண்டுருண்டு
ஓடும் இப்புவிதனில் .....
எக்கச்சக்கமாய் இச்சைகொண்டு
உச்சந்தொட்டு வாழ்ந்தவனும்
யோகமச்சங்கொண்டு ஆண்டவனும்
மிச்சசொச்சமேதுமின்றி
விட்டுவிட்டவோர் எச்சமென
வச்சவொரு உருவில் நின்றார்கள் ......

அச்சங்கொள்ளத் தேவையில்லை ....
சொல்லப்போனால்
நிச்சயமென்றொன்றே இங்கில்லை ....
அந்தரத்தில் மிதக்குமோர்
கோளப்பந்தல்லவோ இது .....
இதில்மந்திரங்கள் வைத்துவோர்
தந்திரங்கள் செய்துவோர்
சந்திரனை தொட்டவோர்
உந்திதனில் எந்திரமாய் வாழ்தலை
என்சொல்லி அழைப்பது .....
காயங்கொண்டுவந்த காயங்கள்
மாயங்களேதோ செய்ததென
மார்தட்டி நிற்றலை
என்சொல்லி அழுவது .....

என்னதான் நடந்துவிடும் ....
நீலவானது நெற்றியில்வந்து வீழ்ந்திடுமோ .....
கூர்வாளது குடலைப்பறித்து தின்றிடுமோ .....

புயல்காற்றது புலன்கொண்டு போகிடுமோ ....
சுழல்காற்றது சுருட்டிக்கீழ் தள்ளிடுமோ .....

நீரெழுந்து நமையிழுத்து தாஞ்சென்றிடுமோ ....
நிலம்பிளந்து நமையுண்டு
ஏப்பமிட்டுதான் போகிடுமோ .....

தீயாயிருந்தச் சூரியனில்
தனியாய்பிரிந்து தணியாய்தணிந்து
மணியாயுருளும் மங்கையிவள்
மடியில்பிறந்த மாணிக்கம்நாமும்
தீயின் புதல்வர் தானன்றோ .....
சூரியப்புதல்வர் தானன்றோ ......

தீயுண்ணும் மந்தையோயல்ல ....
தீயையுண்ணும் தீயையாளும்
வித்தைகற்றவோர் வித்தகர் தாமல்லோ ....
தீயில்மிதக்கும் தீயில்நடக்கும் தைரியங்கொண்ட வீரியங்கள் நாமல்லோ ....

என்னதான் நடக்கும் ......
மேகமிடித்து மேல்வந்து விழுந்திடுமோ .....
தாகமெடுத்து களைப்பு கொஞ்சங்கூடிடுமோ .....

மின்னலடித்து பின்னிநமை சுற்றிடுமோ .....
வாரியிழுத்து சேறுதான் நமைமூழ்க்கிடுமோ ....

விந்தைமானிடம் வீம்புபேசி
விரக்தியாக்கிடுமோ ....
மந்தைகூட்டமும் மனதுக்கேற்றார்போல்
தான்தூற்றிடுமோ ....

அதையுந்தான் பார்ப்போம் .....
அதிலுந்தித்தான் பறப்போம் .....
இல்லையென்பது இப்போது உண்மைதான் .....
அறவேயில்லை என்பது
எப்போதும் இல்லைதான் ......
கொள்ளைபோகா திறனது
எல்லைமீறி யிருக்கையில்
சிறுவில்லையது காற்றில்போனாலென்ன ......
ஆகாயத்தாமரையொன்று ஆற்றில்போனாலென்ன .....
ஆனது ஆகட்டும் .....
பார்ப்போம் ......

என்னதான் நடக்கும் .....
நெஞ்சிடிந்து நடுங்கித்தான் போகிடுமா .....
பஞ்சென தைரியந்தான்
ஊதிடப் பறந்திடுமா ....

எண்ணியக்கணக்கது
தவறாகிப் பொய்த்திடுமா ....
பின்முன்வைக்க காலதுதான்
முனகி மறுத்திடுமா .....

மண்ணிலே நம்மிருப்பு
நமத்துத்தான் போகிடுமா .....
தன்னிலை தானிழந்து வெற்றிலையொன்று புளித்திடுமா ....

வீறுகொண்டு எழுந்திட
வீராப்பு உள்ளிருக்கையில் .....
தாறுமாறாய் தடைகளெல்லாம்
சுற்றிச்சுற்றி இருந்திடினும் .....
மாறுவேடம் பலகொண்டு
துரோகமது வந்திடினும் ......
காற்றில்பறந்த கால்தூசியாய்
கவலையெழுந்து எழுந்து
கருவிழிமையத்தை கடித்திடினும் ....
காலத்தை ஆள்தல் உறுதி .....
கோலத்தை மாற்றல் உறுதி .....
ஞாலம்போற்ற சாலம்புரிதல்
சத்தியமாய் உறுதி ......

என்னதான் நடக்கும் .....
எங்குமில்லா கருயிருள்வொன்று
நமைவந்து சூழ்ந்திடுமோ .....
அங்கமெல்லாம் அயர்வுதாங்கி
மங்குமொளியென உள்ளமதாகிடுமோ .....

மறுசென்ம சுகமென
சுமையது கூடிடுமோ .....
போனசென்ம வினையது
போகாமல்தான் இருந்திடுமோ .....

விரும்பிய மாற்றமெல்லாம்
திரும்பிய ஏமாற்றாமென ஆகிடுமோ .....
வருந்திய காலமெல்லாம்
அருந்திடும் உவர்நீராய்
தாந் தொடர்ந்திடுமோ ....

கனிவான உள்ளமது
மலிவாய்தான் போகிடுமோ .....
அணியான கரையான்கள்
மணிமனதை அரித்திடுமோ .....

வலிதந்த காயமெல்லாம்
விலையுயர்ந்து கூடிடினும் .....
சுமையெல்லாம்
சுற்றிவருஞ் சுள்ளெரும்பாய்
பற்றிவந்து கடித்திடினும் ......

அயர்வுத்துடிப்பு ஏதுமின்றி
உயரப்பறக்கும் ராசாளியாய் .....
இறுக்கமான பாறைப்பிளவில்
துளிர்விட்டுவரும் புத்தளிராய் ......
பிடிப்பிடமில்லா ஈரச்சுவற்றில்
ஒட்டியெழும் புதுத்தூரல் காளானாய் .....
அலையாடும் பெருங்கடலில்
மெதப்பாய்மிதக்கும் சிறுமரமாய் .....
விரிசல்விரிப்பில் பாலைபரிசலென
நீர்தாங்கியெழும் கள்ளியாய் .....

தேற்றமென தோற்றங்கொண்டு
ஆற்றல்தாங்கி மாற்றங்கண்டு
எழுந்தோடிவருதல் உறுதி .....
ஆற்றில்மிதக்கும் பொற்றாமரையாய்
வெற்றி விரைந்தோடி வருதல் உறுதி .....

எழுந்து நாம்நடந்தால்
வினை விழுந்தோடுதல் உறுதி .....
துணிந்து நாமெழுந்தால்
துணை நமைநாடிவருதல் உறுதி .....
பார்த்திரு ...பார்த்திரு .....
உற்று அதைப்பார்த்திரு .....

என்னதான் நடக்கும்
புருவஞ்சுருக்கி பார்த்திடுவோம் .....
என்னதான் நடக்கும்
போர்க்களஞ்சென்று பார்த்திடுவோம் .....

எழுதியவர் : என்.கே.ராஜ் (31-Jul-21, 5:06 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 386

மேலே