அதர்மம்....

*அதர்மம் என்ற தலைப்பில் கவிஞர் கவிதை ரசிகன் எழுதிய கவிதையை படித்துப் பாருங்கள் புதிய சிந்தனை தோன்றும்*


அன்று
படங்களில்
சண்டைக் காட்சிகள்
இருக்கும்....
இன்று
சண்டை காட்சிகளே
படங்களாக இருக்கிறது....!

அன்று
கைகளால்
குத்துவது
அடிப்பது
தாக்குவது
தள்ளுவது சண்டையாக காட்டினார்கள்....

இன்று
வீச்சருவாளால்
பட்டாக்கத்தியால் குத்துவது துப்பாக்கியால் சுடுவது என்று கொடூரமான முறையில் சண்டைக்காட்சிகள்
காட்டுவதால்
உளவியல் ரீதியாக
சிறு பிள்ளைகள் முதல்
பெரியவர்கள் வரை
மனதளவில்
பாதிக்கப்படுவார்கள்.....

படம்
விறுவிறுப்பாக
இருக்க வேண்டும்
என்பதற்காக....
இவர்கள்
பலர் சுறுசுறுப்பை
குழி தோண்டிப்
புதைக்கின்றனர்....

தலையை வெட்டி
தனியாக வைப்பது
கையை வெட்டிக்
கதற வைப்பது
காலை வெட்டி
கத்த வைப்பது
தோலைக் கிழித்து
உதிரும் கொட்ட வைப்பது
இதுதான்
இவர்கள் கலை என்று
கசாப்புக் கடை
நடத்துகின்றனர் ....!

இவர்கள்
மறைமுகமாக
பல மனங்களில்
அதர்மத்தை விதைக்கின்றனர்
வன்முறையை
தூண்டி விடுகின்றனர்....!

அமெரிக்காவில்
துப்பாக்கி
வீடியோ கேம்னால்
பல சிறுவர்கள்
கையில்
துப்பாக்கி தோட்டாக்கள்
நிஜமாகவே
வெடித்ததைக் கண்டு
துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு
தடைப்போட்டதை
மறந்து விடக்கூடாது.....

பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும்
சகமாணவர்கள்
சின்ன விஷயத்துக்கெல்லாம்
ஒருவரை ஒருவர்
தாக்கி கொண்டதாக
நாளிதழ்களில்
செய்தி வருவதற்கு
இந்தக் காட்சிகளும்
ஒரு காரணம் என்பதை
யாராலும் மறுக்க முடியாது...!

நல்லது ஆனாலும்
கெட்டது ஆனாலும்
காட்சியே மனதை
ஆட்சி செய்யும் என்பதை
மீண்டும் ஒருமுறை
நாம் இங்கு
நினைவுபடுத்திக்
கொள்ளவேண்டும் ...!

அற்புதமான
திரைப்படக்
கலையை
பணத்திற்காக
அற்பமான கலையாக்கி
விடாதீர்கள்....!

அளவுக்கு மீறினால்
அமுதமும்
நஞ்சாகும் என்பார்கள்....
ஆனால்
இங்கு
நஞ்சே ! அளவுக்கு மீறி கொடுக்கப்படுவதை
கவனத்தில்
கொள்ளவேண்டும் .....

சண்டை காட்சிகளுக்கு
எல்லைக்கோடு போடுவோம்...!
அதை மீறும் படங்களுக்கு
தடை விதிக்க
சட்டம் போடுவோம்....!

*கவிதை ரசிகன்*


நன்றி!

எழுதியவர் : கவிதை ரசிகன் (26-Jul-21, 8:45 pm)
பார்வை : 38

மேலே