குருவி தாத்தா

செங்கலை சீமைக்காரைப் பூசி ஒவ்வொன்றாய் அடுக்கி வைத்தான் ராஜமூர்த்தி. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக, அவப்போது வீசும் காற்று ஆறுதல் கூறி சென்றது. கட்டிய நூலுடன் தான் எழுப்பிய சுவரைச் சரிபார்த்தான். இன்னும் சில நாட்களில் இந்த கோழி கூண்டை முடித்தாக வேண்டும்.

நண்பகல் உணவு வகைகள் மனைவி கலாவால் அவசராமாக முடியும் தருணத்தில் இருந்தது. " என்னெங்க, கை கழுவிட்டு வாங்க, சமச்சி முடிக்கபோறென் " என உணவுச் சங்கை ஊதினாள் உமையவள். சற்று எழுந்தவாரே, ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு இன்னும் கம்பியும் தகரமும் வரவில்லை என எண்ணியவாரே வீட்டை நோக்கினான். அடிக்கும் வேர்வை நாற்றத்திலும் ஆங்காங்கே ஒட்டிய மணலும் சிமெண்டும் தனக்கு வீட்டின் உள் உண்ண நல்ல வரவேற்பைத் தராது என்று எண்ணி குளிக்கச் சென்றான்.

குளித்து முடித்து மேசை மீது அமர்ந்தான். "பாரு....டேய் பாரு, சாப்பிடவா " என தன் மூன்று வயது மகள் பார்வதியை அழைத்தான். தன் பாட்டியின் பெயர் சூட்டிய மகள் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இங்க வா என்று மீண்டும் அழைத்ததும் ஒரு கையில் பந்தை ஏந்தியவாறு ஒரு கையை வாயில் வைத்துக் கொண்டு வந்தாள். "அப்பா செல்லம்" எனச் சொல்லி தன்னுடன் அமர வைத்தான் ராஜமூர்த்தி. சுட சுட மனத்தக்காளிச் சாம்பாருடன் பொரித்த மீன். ஊதியவாரே தன் மகளுக்கு ஊட்டி தானும் ஒரு வாய் உண்டான்.

" இன்னும் கம்பியும் தகரமும் வரல. அப்படிய இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கனும். சாப்பிட்டதும் கடைக்கு போய்ட்டு வந்துடுறேன்" என தன் மனைவியிடம் சொன்னான். கடைக்கண்ணில் பார்த்தவாறு தன் தட்டில் சோற்றை போட்டுவிட்டு அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள் கலா. "அம்மா சமச்சது நல்லா இருக்கா? தக்காளி கீரை உடம்புக்கு நல்லது" எனச் சொல்லியவாரே தானும் சாப்பிட்டு முடித்தான்.

கோழிகளை வாங்கி வளர்க்க வேண்டும் என பல நாள் கனவு. கூலி வேலைச் செய்ய ஆள் கிடைக்காததால், கூண்டைக் கட்டிடத் தானே இறங்கி விட்டான். பொருட்களை இன்றே கொண்டு வர வேண்டும் என, மரக்கடையில் அன்பு வேண்டுகோள் விடுத்து விட்டு, அருகில் உள்ள "pet shop " கடைக்குச் சென்றான். கோழிக் குஞ்சுகளைப் பார்த்ததும் தனக்குள் பரவசம். பல தடவை வந்தாலும், விரைவில் இவைகளை வாங்கிடலாம் என நினைத்தவாரே, வான்கோழிக் குஞ்சுகளும் இருந்ததைக் கண்டான். இவற்றின் விலைகளையும் விசாரித்து விட்டு, மகளுக்குச் சில தின்பண்டங்களுடன் வீடு சேர்ந்தான்.

சில நாட்களில் கூண்டு முடியும் தருணத்தில் இருந்தது. பல முறை சரி பார்த்து விட்டான். எலிகளும் பாம்பும் வராமல் இருக்க எங்கேயாவது சந்துக்கள் இருக்கின்றதா என தன் கண்களால் சோதனையிட்டான். இல்லாவிட்டாலும், எப்படியாவது ஒரு வழிசெய்து வந்து விட்டால் பின்பு தம் 'Manager' கலாவிடம் ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டி இருக்கும். பறவைகள் வளர்த்து வந்த ராஜமூர்த்தி, அவைகள் கூண்டில் வைத்து சுதந்திரம இல்லாமல் இருப்பது தன் மனைவிக்கு பிடிக்காததால், திருமணத்திற்கு முன்பே அவற்றை பறக்க விட்டுவிட்டான். பல வகை பறவைகள் வளர்ப்பது அப்பாவிடம் இருந்து தொற்றி கொண்ட 'hobby'. ஏதோ கோழிகளை வளர்த்தாவது தனது பறவை வளர்ப்பை தொடர நினைத்தான். தன் மகளால், "குருவி தாத்தா" என தன் தந்தையை அழைக்கமுடியாமல் அவர் பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டது தனக்குப் பெரிய கவலை.

கோழிக்குஞ்சுகளை வாங்க இம்முறை தன் மகளுடன் 'pet shop' கடைக்கு விரைந்தான். மகளுக்குப் பல வகையான வளர்ப்பு பிராணிகளைக் காண்பித்து விட்டு கோழிகுஞ்சுகளை வாங்கினான். தன் கட்டிய கூண்டில் தன் மகளும் கோழிக் குஞ்சுகள் சுற்றி வருவதை ரசித்தாள். ஆசையுடன் அவற்றை தூக்கி கொஞ்சுவாள். தன் தாத்தாவின் ரத்தத்தில் பறவை வளர்க்கும் ஆசைக் காய்ச்சல் தன் மகளுக்கும் பரவி விட்டதை எண்ணி மகிழ்ந்தான். தாயற்ற அக்குஞ்சுகளுக்கு தன் மகள் தாய்போல் தீனைகளை பகிர்ந்தாள்.
தற்காலிகமாக நிறுத்தப் பட்ட தன் ஆசை மீண்டும் வளரத் தொடங்கியதை சிறு புன்னகையுடன் தன் மகளுடன் கொண்டாட ஆரம்பித்தான். தன் கூண்டில் அங்கும் இங்குமாக ஓடின கோழி குஞ்சுகளும் மகளும். அவர்களைப் பார்த்தவாறு அக்கூண்டுக்குள் புதிதாக குடி வந்தது கருத்த சிறு பல்லி ஒன்று.

#siven19

எழுதியவர் : Siven19 (15-Aug-21, 9:39 pm)
சேர்த்தது : siven19
Tanglish : kuruvi thaathaa
பார்வை : 105

மேலே