விரலிடுக்கில் வெளிச்சம் நூல் ஆசிரியர் கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

விரலிடுக்கில் வெளிச்சம்!

நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224.

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி-604 408. பக்கங்கள் : 64, விலை : ரூ.70


******

‘விரலிடுக்கில் வெளிச்சம்’ நூலாசிரியர் கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் இலாஹி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கி வருகின்றார். முகநூலிலும் பதிவுகள் செய்து வருகிறார். இந்நூலை வெளியீட்டு விழாவிற்கு முன்பாகவே மதிப்புரைக்காக எனக்கு அனுப்பியதற்கு முதல் நன்றி!

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், சுண்டக் காய்ச்சிய பால், மெல்லத் திறந்த கதவு, மூன்றடி முத்தாய்ப்பு - இப்படி ஹைக்கூ கவிதைக்கு பல்வேறு விளக்கங்கள் உண்டு. ஜப்பானிய கவிஞர்கள் போலவே நூல் முழுவதும் இயற்கை, இயற்கை, இயற்கை தவிர வேறில்லை என்ற அளவிற்கு முழுக்க முழுக்க இயற்கையிலேயே மூழ்கி விட்டார்கள். பாராட்டுகள்.

முழு நிலவில்
மிதந்து வருகிறது
உதிர்ந்த மலர்!

முழு நிலவில் நல்ல ஒளி இருக்கும். உதிர்ந்த மலர் மிதந்து வரும் காட்சி நன்கு புலப்படும். தான் உணர்ந்த உணர்வை காட்சிப்படுத்தல் உத்தியில் நன்றாக வடித்துள்ளார்.

வண்ணத்துப்பூச்சி
பூவில் அமர்ந்ததும் படபடக்கும்
சிறுவனின் மனம்!

பொதுவாக வண்ணத்துப் பூச்சியை ரசிப்பது, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சி பூவில் வந்து அமரும் காட்சியைக் கண்டால் பரவசம் அடைவார்கள்.

சிற்பியின் ஆசை
இமைகள் திறந்தபடியே
புத்தர் சிலை!

பெரும்பாலான புத்தர் சிலைகள் தியானத்தில் இமை மூடியபடியே தான் இருக்கின்றன. ஆசையே அழிவுக்குக் காரணம் என்று ஆசையை வெறுத்த புத்தரை இமை திறந்து பார்க்கும்வண்ணம் வடிக்க சிற்பி ஆசைப்படுகிறான் என முரண்சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

வெட்டிய மரம்
கீழே விழுந்து கதறுகிறது
கூடிழந்த குஞ்சு!

மரத்தை வெட்டச் சொன்னவுடன் வெட்டும் மனிதனுக்கு மரத்தில் பறவையின் கூடு உள்ளதே வெட்டலாமா? என்று சிந்திப்பதே இல்லை. மனம் போன போக்கில் வெட்டி வீழ்த்தி விடுவான். கூட்டை இழந்த குஞ்சு படும் சோகத்தை படம்பிடித்துக் காட்டியது சிறப்பு.

உலுக்கிய மரம்
தலைமேல் விழத்தொடங்கும்
நாவல் பழங்கள்!

மரத்தை உலுக்கியவுடன் நாவல் பழம் கொட்டத் தொடங்கி விடும். கீழே மண்ணில் விழாமல் துணி விரித்து பாதுகாப்பதும் உண்டு. மண்ணில் விழுந்தால் மண் தூசி பட்டுவிடும். அவ்வை- முருகன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற புராண நிகழ்வு நினைவிற்கு வந்துவிடுகிறது.

பவுர்ணமி இரவு
மெல்ல அசைந்தபடியே
குளத்தில் நிலா!

குளத்தை கூர்ந்து ரசித்தால் நிலா அசைவது போல தெரியும். குளத்தில் ஏற்படும் சலனத்திற்கு ஏற்ப நிலவும் அசையும் இக்காட்சியை ரசனையுடன் உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ நன்று.

திரும்பும் திசை
எங்கும் அழகான
ஹைக்கூக்கள்!

ஹைக்கூ படைப்பாளியின் கண்களுக்கு திரும்பும் திசை எங்கும் ஹைக்கூ காட்சிகள் தோன்றும். எனக்கும் தோன்றியது உண்டு. கையில் குறிப்பேடு வைத்து குறித்து வைத்துக் கொள்வேன். பிறகு மறந்துவிடும் என்பதால். நமக்கு ஏற்பட்ட அனுபவம் நூலாசிரியர் கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் அவர்களுக்கும் ஏற்பட்டதன் விளைவே இந்த ஹைக்கூ.

ஊரடங்கு காலம்
கோவில் மணிக்குள்
வலை பின்னும் சிலந்தி!

ஊரடங்கு காலத்தின் போது மதவழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆலயமணி ஒலிக்க வழி இல்லாமல் இருந்ததால் சிலந்திக்கு வழி பிறந்தது, வலை கட்டியது. இக்காட்சியை ஹைக்கூவாக்கியது சிறப்பு.

பட்டிக்குள் அடையும்
கடைசி ஆட்டின் முதுகில்
செல்லமாய் ஒரு தட்டு!

கிராமத்தில் பட்டியில் ஆடு அடைவதை பார்த்து ரசிக்காமல் இப்படி ஒரு ஹைக்கூ எழுதிட முடியாது. எதையும் உற்றுநோக்கினால் படைப்பதற்கு ஆயிரம் பொருள் கிடைக்கும் என்பது முற்றிலும் உணர்ந்த உணமை.

கோயில் மணியை
அசைக்கப் பார்க்கிறதோ?
அந்தப் பூட்டாம்பூச்சி!

கோயில் மணியின் மீது வந்து அமர்ந்த பட்டாம்பூச்சியை ரசித்து ஓ அசைக்கப் பார்க்கிறதோ! என்று கற்பனை செய்து பார்ப்பதில் ஹைக்கூ கவிஞர் வெற்றி பெறுகின்றார்.

ஒன்று ஏற ஒன்று இறங்க
சந்திக்கும் இடத்தில் பேசிக்கொள்ளும்
அணில்கள்!

அவைகளுக்குள் ஏதோ மொழி உண்டு, பேசிக் கொள்கின்றன. இக்காட்சியை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். அணில் மட்டுமல்ல எதிரெதிர் சந்திக்கும் எறும்புகளும் பேசிக் கொள்வதைப் பார்த்து இருக்கிறேன். அதனை ஹைக்கூவாக்கியது சிறப்பு.

காட்டைக் கடக்கும்
யானையின் முதுகில்
ஒரு சிறிய பறவை!

காட்டு யானையைக் கண்டால் மனிதனுக்குப் பயம். ஆனால் ஒரு சிறிய பறவை பயமின்றி காட்டு யானை மீது பயணிப்பதை காட்சிப்படுத்திய ஹைக்கூ நன்று. இயற்கைப் பாடும் ஹைக்கூக்கள் நன்று.

முதல் நூலே முத்தாய்ப்பாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.இனி சமுதாய விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ எழுதிட வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்து முடிக்கிறேன்

.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (19-Aug-21, 9:21 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 46

மேலே