கிளர்ந்தூக்கி நின்றான் திருவில் நிறைந்து வென்றான் எதையும் விரைந்து - தரம், தருமதீபிகை 866
நேரிசை வெண்பா
தளர்ந்து மடிந்திருந்தான் தாழ்ந்து பழியில்
வளர்ந்து துயரோடு மாய்கின்றான் - கிளர்ந்தூக்கி
நின்றான் திருவில் நிறைந்து சிறந்துமேல்
வென்றான் எதையும் விரைந்து! 866
- தரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உள்ளம் தளர்ந்து சோம்பலாயிருப்பவன் எள்ளலாய்த் தாழ்ந்து இழிபழியில் வீழ்ந்து இழிந்து அழிகிறான்; உள்ளம் கிளர்ந்து ஊக்கி முயன்றவன் எல்லாச் செல்வங்களையும் அடைந்து நல்ல மேன்மையாய் உயர்ந்து திகழ்கின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தளர்வு, வளர்வு என்பன வறுமை, செல்வங்களை முறையே வரைந்து வந்துள்ளன. செல்வ நிலையில் செழித்துச் சீரோடு சிறந்து வாழ்வதையும், அல்லல் நிலையில் இழிந்து அவலமாய்த் தளர்ந்து உழல்வதையும் மனித சமூகத்தில் யாண்டும் கண்டு வருகிறோம்.
உயர்வும் தாழ்வும் இயல்பாய் வருவன அல்ல; நிறைந்த காரண காரியங்களோடே கலந்து வருகின்றன. ஒரு மரம் பெரிதாய் வளர்ந்து கிளர்ந்து விரிந்து பரந்து குளிர்நிழலைத் தந்துவரின் அதன் மூல வேர்கள் நல்ல நிலையில் பாய்ந்து தோய்ந்துள்ளன என்பதை நாம் ஓர்ந்து உணர்ந்து கொள்ளுகிறோம். இலை தழைகள் இன்றிப் பட்ட மரமாய் நிற்பின் அதன் அடிவேர் கெட்டுப் போயிருத்தலை அது முடிவாய்ச் சுட்டிக் காட்டி நிற்கின்றது.
ஒரு மனிதனுடைய வாழ்வு வறுமை, சிறுமை, மடமை முதலியன மண்டி மறுகியிருப்பின் அவன் சரியான நிலையில் எண்ணி முயலாதவன்; இழிவான வழிகளில் பழகியுள்ளவன் என்பதை அது தெளிவாகக் காட்டியுள்ளது. புறத்தில் புலனாகின்ற எவையும் அகத்தின் விளைவாகவே அமைந்து வருகின்றன.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
சிந்தையின் வழியதே சிறப்பும் சீர்மையும்
நிந்தையும் இழிவுமெந் நிலையும் நேர்வதால்
அந்தமெய் அகத்தினை அழகு செய்தவன்
எந்தநன் னலங்களும் எளிதின் எய்துமே.
இது மதியோடு மனிதன் நாளும் சிந்தனை செய்து தெளிந்து வரும்படி விளைந்து வந்துள்ளது. கூர்ந்து ஆராய்ந்து ஓர்ந்து எண்ணுகின்றவன் தேர்ந்த மேதையாய்த் திகழ்ந்து சிறந்த மேன்மைகளை அடைந்து எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து விளங்குகிறான். கருதி உணராதவன் கடையனாய் இழிகின்றான்.
எவன் உள்ளம் துணிந்து உறுதியோடு கருதி முயலுகின்றானோ அவனிடம் அரிய பல பெருமைகள் உரிமையாய் மருவி வருகின்றன. அங்ஙனம் முயலாதவன் மயலாயிழிந்து மாண்பிழந்து படுகிறான். முயற்சி ஒழியின் உயர்ச்சிகள் ஒழிகின்றன.
மனிதன் அடைகிற மாட்சிகள் யாவும் அவனுடைய முயற்சியால் விளைந்தன. தாழ்ச்சிகள் எல்லாம் அயர்ச்சியால் அமைந்தன. முயன்று உயர்ந்து வாழ்; அயர்ந்து தாழாதே.
உரிய சமயத்தில் ஊக்கி முயலாதவன் கல்வி செல்வம் முதலிய நல்ல பொருள்களை இழந்து மடையன் வறியன் என இழிநிலைகளில் இழிந்து அவன் கடையன் ஆகின்றான். பழியான மடியால் அழிகேடுகள் விளைகின்றன.
மடி என்பது மனிதனை உயிரோடு மடியச் செய்கிற கொடிய நோய். அதனை ஒருவன் தழுவ நேர்ந்தால் அவன் குடி அடியோடு அழிந்துபோம். இழிவுகள் யாவும்.அவனைக் தழுவி நிற்கும்.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்(கு)
அடிமை புகுத்தி விடும்!. 608 மடியின்மை
சோம்பல் ஒருவன் குடியுள் புகுந்தால் அது மிடி வாய்ப்பட்டு மடிந்துபோம்; அவனும் விரைந்து பகைவர்க்கு அடிமையாய் இழிந்து போவான் என இது உணர்த்தியுள்ளது. சோம்பி இராதே; எவ்வழியும் செவ்வையாய் முயன்று வாழ் என மனிதனுக்கு இனிது போதிக்க நேர்ந்த தேவர் மடியால் நேரும் குடிகேடுகளை இவ்வாறு விளக்கித் தெளிவுறுத்தியிருக்கிறார். தாளாண்மை ஒழியின் ஆளாண்மை அழியும்.
கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமால் 149 கலித்தொகை
முயற்சியில்லாதவன் குடி தானாகவே தேய்ந்துபோம் என்னும் இது இங்கே கூர்ந்து உணரவுரியது.
தாள் - முயற்சி.
கால் மனிதனுக்கு உறுதி தருகிறது; அதனால் எங்கும் நலமாய் நடந்து திரிகிறான்; அது இல்லையானால் அவன் முடமாய் ஒடுங்கிக் கிடப்பான்; தாள் மனிதனுக்கு எப்படியோ, அப்படியே வாழ்வுக்கு முயற்சி உறுதியாயுள்ளது. இந்த உண்மையை நுண்மையாய் உணர்ந்து கொள்ளவே முயற்சிக்குத் தாள் என்று ஒரு பெயரைப் புகழ்ச்சியாய் மேலோர் புனைந்து தந்துள்ளனர். ஓடி உழைப்பவன் பீடும் திருவும் ஒருங்கே பெறுகிறான்,
காரியம் புரிந்து வருமளவு மனிதனிடம் வீரியம் சுரந்து வருகிறது. அதனைக் கைவிட்டுச் சோம்பியிருப்பவன் மதியும் மாண்பும் இழந்து கதிகெட்டவனாய்க் கழிந்து இழிகின்றான்.
கருமம் புரிவதில் தருமம் மருமமாய் விளைகிறது. உள்ளம் ஒருமுகமாய் ஊன்றி வேலை செய்யுங்கால் உயிருணர்ச்சி அங்கே உயர்வாய் ஒளி பெறுகின்றது. செயலிழந்து நின்றால் உயர்வுகள் ஒழிந்து போகின்றன; இழிவுகள் எதிர்ந்து நேர்கின்றன.
Life is Act, and not to do is Death! - Morris
செயல் உயிர் வாழ்வாம்; செய்யாது நிற்றல் சாவாம்’ என்னும் இது இங்கே அறியவுரியது. தொழில் செய்பவன் ஒளி பெற்று உயர்கிறான்; அவ்வாறு செய்யாதவன் இளிவுற்று அழிகிறான். கழி சோம்பலே அழிதுயரங்களுக்கு வித்தா யுள்ளது.
Idleness is the greatest prodigality in the world. - Taylor
இந்த உலகத்தில் மிகவும் அழிம்பாயுள்ளது சோம்பலே என ஜெரிமி டெய்லர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
மடி படிய மிடி படிகிறது; அது படியக் குடி அழிகிறது. கொடிய குடிகேடுகளை விளைத்து மனிதனை இழிவாக்கி யாண்டும் அழி துயரங்களைச் செய்கின்ற சோம்பலை அடியோடு ஒழித்தவனே அதிசய பாக்கியவானாய் உயர்ந்து உலகம் துதி செய்ய வருகிறான். ஆற்றும் தொழில் வழியே ஏற்றங்கள் விளைகின்றன.
உனது மதிப்பான உயர்ச்சியெல்லாம் முயற்சியில் இருக்கின்றன; அதனை உரிமையோடு ஒர்ந்து செய்; அதனால் அரிய பல மகிமைகளும் பெரிய செல்வங்களும் ஒருங்கே உனக்குளவாம்.