லொக் டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 09
09
கலியாணத்துக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லா ஏற்பாடும் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாய் இரண்டு வார முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் நடராசாவும் பவளமும் வேதனையடைந்தனர். எங்கே மகனின் கலியாணம் நடக்காமல் போயிடுமோ என்ற வேதனை மனதை ரணப்படுத்தியது.
"மெய்யேப்பா... ஒருக்கா போலீஸ் ஸ்டேசன் வரைகும் போய் கதைச்சிட்டு வாங்களேன் ப்பா... பதினைஞ்சு பேருக்கு அனுமதி இருக்கென்றால் ஒரு கடிதத்தை எழுதி கொடுத்து அனுமதி வாங்கிக்குவம்... எப்பிடி சரி இந்த கலியாணம் நடந்தே ஆகனும். அவங்களுக்கு எங்கட பிரச்சனையை வடிவா சொல்லுங்கோ... அப்ப தான் அனுமதி தருவாங்கள்..."
"சரி சரிப்பா... நான் விதானையாரோட கதைச்சனான்... நாளைக்கு தானும் வாறன் என்றார். போய் கதைச்சு பார்ப்போம்..."
"ம்ம்ம்... சம்மந்தி ஆக்கள் என்ன நினைக்கிறினமோ தெரியாது என ப்பா..." - மனைவி
"சம்மந்தியோடயும் கதைச்சிட்டன். குறித்த தினத்தில தாலி கட்டியே ஆகனும்... ரெஜிஸ்ரேசன், ரிஷப்ஸ்சன் எல்லாம் பிறகு வைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று ஒரே பிடியாய் சொல்லிட்டன். அவரும் உங்கட விருப்பம் போல என்று சொல்லிட்டார்... மற்றது அவையள் ட பக்கம் ஐஞ்சு பேர் தான் முக்கியமாம். எங்கட பக்கமும் ஐஞ்சு அல்லது ஆறு பேர் போதும். ஐயர், மேளம், பீப்பி என்று பதினைஞ்சு சரியாய் இருக்கும்..." - நடராசா
"ஓமோமோம்... அவ்வளவும் போதும். அதுக்கு மேல தேவையில்லை. பதினைஞ்சு பேருக்கு நீங்கள் அனுமதி எடுங்கோ போதும்..." - மனைவி பவளம்
"என்னப்பா... லொக் டவுணுக்குள்ளே கலியாண வீடு ஒன்றும் செய்ய ஏலாது என்று சொல்லுறாங்கள்... அப்பிடியேப்ப்பா..." - ஆதி கலவரத்துடன் வந்தான்
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் கதைச்சாச்சு... நாளைக்கு பொலிஸ்ட்ட போய் பாஸ் எடுத்திடுவன். ஏலாது என்று சொன்னாங்கள் என்றால் கோயில் ல வைச்சு சரி தாலி கட்டுறது தான்...." - நடராசா உறுதியாக இருந்தார்.
"ஓமப்பன்... இது தான் கடைசி முகூர்த்தம். என்ன நடந்தாலும் சரி கலியாணத்தை முடிச்சே ஆகனும்..." - தாய் பவளம்
"இஞ்சைப்பா... தேவையான சாமான்களை லிஸ்ட் போட்டு வையும். உவன் பிரகாஷ் ட கடையில பின்னால போய் வாங்கிட்டு வந்திடுறன்..." - நடராசா
"ம்ம்ம்ம்... சரி ப்பா" என கூறிய பவளம்
"ஆதி.... இந்த பெயிண்ட் அடிக்கிற பொடியன் வருவானோ தெரியாது என..."
"இல்லை ம்மா... அவன் வருவான். சொல்லிட்டன் அவன் ட. இப்ப லொக்டவுண் என்றதால சீக்கிரமே முடிச்சு தரச்சொல்லியிருக்கிறேன். உதில தானே வீடு. உள்ளுக்காலை வரலாம்..."
"பொண்ணுருக்குக்கு பத்தர் ட வரச் சொல்லிவிடுங்கோ... லொக்டவுண் தானே, இப்போ கலியாணம் செய்யமாட்டினம் என்றுட்டு இருந்திட போறார்..." - தாய் பவளம்
"அப்பா... நீங்கள் அனுமதி எடுத்திட்டீங்கள் என்றால் சின்னதா வீட்டுக்குள்ள மட்டும் சோடிப்பம். அதுக்கு எங்கட பொடியங்கள் வருவாங்கள். ஏற்கனவே வாங்கின சோடினைகளும் அநியாயம் தானே..." - ஆதி
"மற்றது ப்பா... வெளியில் இருந்து ஓடர் பண்ணினதில என்னென்ன வேணும் வேண்டாம் பார்த்து அவங்களுக்கு சொல்லிவிடோனும்... அதையும் கொஞ்சம் பாருங்கோ. முக்கியமா மாலைக்கு சொல்லிவிடுங்கோ. மேக்கப்காரிக்கும் சொல்லோனும். " - அடுக்கிக்கொண்டு போனார் மனைவி பவளம்
"தம்பி... சாப்பாடு என்ன மாதிரிடா ப்பு... பதினைஞ்சு பேருக்காக வரசொல்லுறதா..." - தாய்
"வேண்டாம் மா... உந்த ரெஸ்டோரண்ட் ல சொல்லி மரக்கறி ரைஸ் அல்லது பிரியாணி எடுத்துவிடுவோம்... அது தான் லேசு... " - கவியழில் கூறினாள்
அனைவருக்கும் அது சரியாகப்படவே ஏற்றுக்கொண்டனர்.
"மற்றதுகளை நாங்கள் பார்ப்போம். அப்பா... நீங்கள் எப்படியாச்சும் அனுமதியை வாங்கிடுங்கோ என..." நடராசாவுக்கு மனைவியிடம் இருந்து கட்டளையாய் பிறந்தது.
"தம்பி ஆதி... அங்க பிள்ளை ட சொல்லி வை. குறிச்ச முகூர்த்தத்தில கலியாணம் நடக்குமாம் என்று... அவைக்கும் உதவிக்கு ஆட்கள் இருக்கிற மாதிரி தெரியேல்ல... என்ன ஏது என்று விசாரித்து பார்த்து செய்து கொடுத்துவிடு..."
"சரி ம்மா... நான் சொல்லுறன்..." சொல்லும் போதே தமிழிசையிடம் இருந்து அழைப்பு வந்தது.
(((கலியாண பேச்சு தொடரும்)))
-பெல்ழி