கள்வரின் அஞ்சப் படும் மூன்று - திரிகடுகம் 18
நேரிசை வெண்பா
ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையும் இன்னாப் பிரிவும் - உருவினை
உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரின் அஞ்சப் படும். 18 திரிகடுகம்
பொருளுரை:
உறுதியாக வந்தடையும் கிழப்பருவமும்,
நட்பினருக்கு பிரியப்பட்டவரும் பிரிந்தவரும் ஆகிய இரண்டிடத்தும் துன்பத்தைத் தருகின்ற பிரிவும்,
உடம்பை உள்ளிடத்துள்ள தசை முதலியவற்றை கரையச் செய்து வருத்துகின்ற மருந்து முதலியவற்றால் தீராத நோயும் ஆகிய இம்மூன்றும் கள்வர்க்கு அஞ்சுவது போல் பயப்படப்படும்.
கருத்துரை:
கள்வருக்கு அஞ்சி எச்சரிக்கையாயிருப்பது போல உறுதியாக வரக்கூடிய மூப்பு, நண்பரிருவர்க்கும் விருப்பமில்லாத பிரிவு, உரு அழிக்கும் நோய் இம் மூன்றுக்கும் அஞ்சிச் செய்ய வேண்டுவன செய்து எச்சரிக்கையா யிருக்கவேண்டும்.
ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி என்னும் இருவருள் ஒருவரிடத்து எனலுமாம்.
பருவம் முதலிய ஒத்த தலைமகனும், தலைமகளும் மணத்தல் மரபாதலால் ஒருதலையான் எனப் பொதுப்படக் கூறப்பட்டது.
இருதலை: தலை - இடம், இது தலைமகன் தலைமகள் என்ற இருவரையுங் குறிக்கும்;
பெருமையாவது மருந்துண்ணல், மந்திரித்தல், மணி முதலியன தானஞ் செய்தல் இவைகளால் தணியாமை.