அறஞ்செய்யும் ஆதவன் - கட்டளைக்கலித்துறை
ஆதவா யாவைக் குமேமூத் தவனே முதற்பிறப்பே
ஆதியில் தோன்றி அனைத்தையும் ஆக்கிய மூலவித்தே
நீதியில் என்றுமே மாறா நிரந்தர நல்மிடுக்கே
ஓதியே உன்னைத் தொழுதல் எமக்கது நன்மைதானே --- (1)
காலையில் மென்மையாய் நண்பகல் வீரிய தீயெனவே
சாலையின் மண்ணையும் சூடாய் எரித்தும் கனன்றவாறே
சோலையின் வண்மையை யாவரும் சூழ்ந்து மகிழ்ந்திடவே
மாலை வரையில் வலிமையில் மாறா இருப்பவனே --- (2)
உன்னில் பிரிந்த துகள்கள் பலவகை கோளெனவே
தன்னிலை அச்சில் சுழலும் நிலையிலே ஈர்ப்பினாலே
பன்னிலை கோள்கள் இருந்தும் எதிலும் நிலமெனவே
உன்னிலை மாறா நெருப்பென விண்மீன் நிலையிலேயே --- (3)
பிணைப்பினால் பொங்கும் நெருப்பென தோன்றிய நாள்தோறுமே
அணைந்து விடாமலே ஆச்சரி யந்தரும் தன்னொளியே
கணையினால் ஆய்விட நோக்கின் தடுக்கும் அனலெழிலே
துணையென உன்னையே ஏற்றிடும் பால்வெ ளிமண்டலமே. --- (4)
புவிக்கு எனவொரு தன்மையை தந்த அனல்பொழிவே
குவிந்த கதிரினால் தாழ்ந்த பரவையின் நீரையுமே
கவிழ்ந்து உறிஞ்சியே மேகமாய் மாற்றி மழையெனவே
பவித்திர நீராய் பொழிவது உன்னின் கருணைதானே --- (5)
------ நன்னாடன்.