கொதிக்கும் உலை

அவனின் கண் அசைவில்
அவள் கருத்தசைந்து
கை பிடிக்கும் நாளை எண்ணி
கருவறையில் வளர்த்த காதல்
காணாமல் போவதென்ன
கல்யாணம் ஆன பின்னே?

எங்கு எப்போது காண்போம்
என்பதெல்லாம் போய்
எப்படித் தவிர்ப்பது
என்பதே தினமும் தவிப்பாகி
முகம் நோக்குவதே கடுப்பாகி
வெறுப்பாய் காதல் ஆனதேனோ?

குடும்ப பாரம் சுமையாய் அழுத்த
குழந்தை கடமை கனமாய் ஆகி
ஒவ்வொரு கணமும் கண்டமாகி
நிம்மதி தேடி ஓடவும் முடியாமல்
நின்றிருக்கும் காலம் அதில்
பெருமூச்சின் அனல் காற்று...

இருதயத்தில் அன்பில்லாமல்
இருண்டு போன நெஞ்சங்களில்
ஓடும் வருஷங்கள் ஓராயிரம் ஆனாலும்
வாழ்ந்த காலம் என்னவோ சில நொடிகளா?
சிரிக்கப் பழகி சிந்தனையைச் செப்பனிட்டு
சந்தோஷத்தைத் தொலைக்கும் கல்யாணங்கள்...

கொதிக்கும் உலையாய் கனன்று
கொந்தளிக்கும் இதயங்களுக்கு
ஆனந்த வாழ்வைத் தரும்-
குறுகின பார்வை விட்டு
உலகத்தையே தன் குடும்பமாக்கி
எல்லோரையும் அன்பு செய்தால்....





எழுதியவர் : shruthi (28-Sep-11, 6:52 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 278

மேலே