நம்மடியில் வசப்படும்
மரங்கள் வளர வேரும் தழையும் உழைக்கின்றன
நீரினைப் தரவே காற்றும் கதிரும் உழைக்கின்றன
காடுகள் பெருக பறவை விலங்கள் உழைக்கின்றன
மனிதன் உழைப்பின் வெளிப்பாடு என்ன?
ஒன்றின் எச்சம் வேறொன்றை ஆக்கவே உதவும்
செறிவுற்ற எவையும் புதுப்பிறவி எடுத்தே வளரும்
மாறா ஒன்று சிதைவின்றி கல்லாய் கிடக்கும்
மதிதெளிந்த மனிதனின் எச்சப் பயனென்ன?
செடி கொடி மரமென பலபெயராய் வளர்ச்சியுறும்
காரம் புளிப்பு துவர்ப்பு கசப்பு இனிப்பு உவர்ப்பாய்
கீரை தழை இலை வேரென பலவகையாய் பயன்படும்
மாசை மட்டுமே மனிதனால் ஆக்க முடிவதேனோ?
பேசாத எல்லா வகை எல்லாமும் நன்மைக்காக
கூழை கும்பிடு போடாத எதுவும் மிடுக்காய்
புவியை நம்பிய யாதும் பாகுபடுகள் இல்லாமலே
அறிவுற்ற மனிதனால் ஆக்கப்பட்ட பாகுபாடு ஏனோ?
சங்கிலி போலவே வாழ்ந்தால் சஞ்சலம் வாராதே
அங்கலாய்ப்பு அகன்றால் அகிலமும் நம் சொந்தமே
தங்கம் தகரம் என்பனவற்றின் மதிப்பை நீக்கினால்
மங்கலமான வாழ்வது நம்மடியில் வசப்படும் பார்.
----- நன்னாடன்