கால மாற்றம்

கால மாற்றம்
ஒத்தை பிள்ளை பெத்த
உத்தமி-உலகம்மை
உரிச்சோறு கிடைக்குமுன்னு
உரிமையோட வளர்த்தாளோ-இல்ல
கறிச்சோறு கிடைக்குமுன்னு
கனாக்கண்டு மலர்ந்தாளோ.!

கால்நீட்டி கண்ணீர் வழிய இப்பவும்
இடிஞ்சி போயி ஒக்காந்திருக்கா கிழவி
ஒடிஞ்சி போன குத்துவிளக்கா
ஒத்த விளக்கா-இருந்தும் இல்லாத
செத்த விளக்கா..

மாரியார் கொடுமைன்னு ஊர் சொல்லுது
மருமகள் கொடுமையை யாரிடம் சொல்வது
கிழவி 'தாக்கல்'ஊர் அம்பலம் ஏறுமோ.?
ஒத்த மகனை மத்தளமாக்க பொறுக்காம
ஒரலாகிப்போனா-ஒலகம்மை

செத்தநாக்கு சிவனேன்னு கிடக்கா
'சொல்'லை இரைக்கிறதுலயும்..
சுவையா ருசிக்கிறதுலயும்...
ஏதோ கொஞ்சம் தூக்கல் தான்-உப்பு
இப்பவெல்லாம் சாப்பாட்டுல
'என்னாச்சோ மருமகளுக்கு. ?'
அந்த கால சமையக்காரி உப்புபோட்ட அழகை உருப்போட்டா மனசுக்குள்ள

'மழை பெய்யுது எத்திரிப்பா'..ன்னு
தண்ணீ தெளிப்பா மகன் மேல
தூங்குற பிள்ளைக்கு சோறு ஊட்டவும்
வயித்துப்பிள்ளைக்கு பேர்வைக்கவும் நம்ம அம்மைகளுக்கு சொலலியா தரனும்.?

'பெருங்காத்து வருது எந்திரிடா'..என்பாள்
வயிறு முட்ட குடிச்சிட்டு அளந்துவாற அவன் அப்பந்தான் பெருங்காத்து.!
புரியாத புள்ள பொசுக்குன்னு எந்திரிக்கும்...
'கறிச்சோறு காட்டுடா வாயை ..'என்பாள்
வெறுக்கூட்டுன்னு விவரமறியா பிள்ளை
வாய்திறக்கும் ஆவலாக...
வெடிச்சுக்கிளம்பும் அவளுக்குள்ளும் இயலாமை கேவலாக...

'போதும் போதும்' என பிள்ளை உறங்கிவிழுந்த பின்னும்
பொங்கிப்பொங்கி அழுவா-உலகம்மை
'பூச்சி கத்தரிக்காய் தான்...புடலையும் முற்றல் தான்...புளியும்,பூண்டும் கூட புது வீட்டு இரவல் தான்...'
காலையிலே கேட்பானே
'கறிச்சோறுன்னு ஏம்மா ஏமாத்துனே.?'ன்னு
நாளைக்காவது நல்லதா சமைக்கனும் பிள்ளைக்கு
குறுகுறுப்பா கொசுவத்தை பார்ப்பா...பால் இல்லா மாராக பதுங்கி கிடக்கும் சுருக்குப்பை...

தினம் தினம் அதே தான் கதி...அன்றாடக்காய்ச்சிகளின் மாறாத தலைவிதி
அதே அரைத்தூக்கம்-கனாக்கறிச்சோறு
விடிஞ்சதும் பிள்ளை கேட்பான்
'உப்பை ஏம்மா அதிகமா போட்ட.?'
'மளுக்'கென திறந்துகொள்ளும் மடைக்கண்ணீர் 'வெளுக்'கென துடைக்குமுன்னே விடைத்ததுதான்
கரிப்பு கூட்டி கலந்ததப்பா உப்பில்லா மண்ஜாடியின் வெறுமை போக்க..'-சொல்ல மறந்திடுவாள் தாய்.

நாக்கின் வழி நரம்பில் பாய்ந்து
ஞாபகம் சிதைந்து மீண்டுவந்தது நினைவலை
'மருமகளுக்கு என்ன துயரமோ.?'
மிடறு விழுங்கி மெல்ல கேட்டாள்
கலிகாலத்தின் சாபக்கேட்டை
எலிக்காதை இரவல் வாங்கி
'கூறு கெட்ட சோறு திங்க கிழவிக்கு கூச்சம் கேடோ...போடு கொஞ்சம் கூட்டி உப்பு'...
பொறுமலோடு புதல்வன் சொன்னான்.

பள்ளிக்கூட சீறுடையோடு 'பள்ளி கொண்ட'மதலை தனை
தொலைக்காட்சியை இயக்கி-ஒலி விசையை கூட்டி...வெடுக்கென திரும்பி கூவினாள் குலவிளக்கு-குழந்தைக்கு சோறூட்ட....'பூந்தளிரே எந்திரியடா பூகம்பம் வருது.!'♦

எழுதியவர் : அரும்பூர் குரு (7-Oct-21, 11:30 am)
சேர்த்தது : ARUMBOOR GURU
பார்வை : 93

மேலே