இரவில் வந்தவன்

இரவில் வந்தவன்

நள்ளிரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும், “சோ” வென மழை பெய்து கொண்டிருந்தது. அவ்வப் பொழுது மின்னலும் கண் சிமிட்டிவிட்டு சென்றது. அதன் பின் இடி இடித்தது. தெருவையே ஆண்டு கொண்டிருக்கும் தெரு நாய்கள் மழைக்கு பயந்து வாலைச் சுருட்டிக்கொண்டு அங்கங்கு மூலையில் படுத்துக்கிடந்தன. “ஸரக்” ஸரக் என காலணி சத்தம் ஒலிக்க ஒரு உருவம் அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. அது மழையையும், இடியையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இரு புறங்களில் உள்ள கட்டிடங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டே வந்தது. அதனுடைய செயல் ஏதோ தேடுவது போல் இருந்தது. ஒரு இடத்தில் நின்று வலது புறம் உள்ள கட்டிடத்தை பார்த்து ஒரு நிமிடம் யோசிப்பது போல் பாவனையுடன் நின்றது. பின் ரோட்டுக்கு அருகே இருந்த படிகளில் ஏறி இரண்டாம் தளத்தில் நடந்து இரண்டு வீடுகளையடுத்து மூன்றாம் வீட்டு கதவை தட்டிவிட்டு நின்றது. உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் ஒரு முறை கதவை தட்டியது. உள்ளே அமைதியாக இருந்தது போல் தோன்றியது. பொறுமை இழந்து மீண்டும் கதவை தட்ட கையை கொண்டு போக கதவு மெல்ல திறந்தது. எதிரில் ஒரு பெண் இவரை யாரென யோசிப்பது போல் நிற்க வெளியே நின்ற உருவம் சடாரென உள்ளே நுழைந்து அந்த பெண்ணின் வாயைப் பொத்தி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து ஓங்கியது.
“தட்டென்று” கட்டிலிலிருந்து கீழே விழுந்தாள் பூர்ணிமா. ஒரு நிமிடம் எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை. என்ன இது இந்த மாதிரி கனவு அடிக்கடி வருகிறது? அதுவும் இந்த இரண்டு வாரங்களில் நான்கைந்து முறை வந்து விட்டது. அதுவும் வாயைப் பொத்தி இடுப்பிலிருந்து கத்தியை உருவும்பொழுது தனக்கு விழிப்பு வந்து விடுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என தெரியவில்லை. இந்த கனவு ஏன் வருகிறது எனவும் புரியவில்லை. நாளை காலை வத்சலாவுடன் இதைப்பற்றி பேச வேண்டும், அவள் இதற்கு ஏதேனும் விளக்கம் சொல்வாள். என்னதான் கணவன் குழந்தைகள் இவர்களை விட்டு விட்டு தொலை தூரத்தில் தனியாக தைரியமாக இருந்தாலும் இந்த மாதிரி கனவுகள் தன்னை பயமுறுத்தி விடுவதை நினைத்து பார்க்கிறபோது அவளுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வருகிறது.
இன்னும் ஒரு வருசம்தான் கண்ணம்மா, அதற்கு பின்னால் நீ டாக்டர் பட்டம் வாங்கிடுவே, அப்புறம் ஊருக்கு வந்தால் நீ வேலை செய்யற கல்லூரியிலேயே உனக்கு புரோமசனும், சம்பளமும் உயர்ந்து விடும். இரண்டு வருசமா, பதினைஞ்சு நாளைக்கு ஒருக்கா குழந்தைகளை உன் அம்மா வீட்டிலோ இல்லை என் அம்மா வீட்டிலோ விட்டுட்டு வந்து பார்த்துகிட்டுத்தானே இருக்கறேன். இன்னும் ஒரு வருசம் பல்லை கடிச்சுகிட்டு பொறுத்துக்கோ,
தனக்கு வரும் கனவை பற்றி கணவனிடம் சொல்லலாமா என் நினைத்தவள் மனுசன் இப்ப நல்ல தூக்கத்துல இருப்பாரு, நாளைக்கு போன் பண்ணிக்கலாம், முடிவு செய்தவள் குடும்பத்தை நினைத்ததால் மனசு சற்று இலேசாகி மீண்டும் தூங்க முயற்சித்தாள்.
காலை எழுந்தவுடன் அனைத்தும் மறந்து போய் யூனிவர்சிட்டிக்கு செல்வதிலேயே கவனம் செலுத்தினாள். மதியம் வத்சலாவுடன் காண்டீனில் உட்கார்ந்து சாப்பிடும்போது தனக்கு வரும் கனவைப்பற்றி பேசினாள். அவள் நீ ஏதாவது திகில் படம் பார்த்துட்டோ அல்லது ஜேம்ஸ்பாண்ட் படம் பார்க்கும்போதோ பாதியில் எழுந்து போயிருப்பே, அதான் உனக்கு அந்த படம் கனவா தொடருது. கிண்டலாக சொன்னாளா தெரியாது, அப்படீன்னா அடுத்த காட்சிக்கு ஏன் போக மாட்டேங்குது? அடுத்த வாரம் தொடரா கூட வரலாம் இல்லையா? வத்சலா கேட்க இவள் பொய்யாக கோபிக்க “ரிலக்ஸ்யா” நீ நாளைக்கு சாயங்காலம் என் வீட்டுக்கு வா. மறு நாள் ஞாயிற்றுக்கிழமை, நல்லா ரெஸ்ட் எடு, திங்கள் கிழமைக்கு இரண்டு பேரும் யூனிவர்சிட்டிக்கு வந்து நீ அப்படியே உன் வீட்டுக்கு போயிடு என்ன சரிதானே? யோசித்தவள் ஒரு நிமிசம் என் வீட்டுக்காரர்கிட்டே இதைப்பத்தி பேசிடறேன், சொன்னவள் செல்போனில் பேசி முடித்துவிட்டு ஓகே நாளைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்கு கிளம்பறோம், சொல்லிவிட்டு காண்டீனிலிருந்து அவரவர் இடத்துக்கு பிரிந்து சென்றனர்.
மறு நாள் மாலை இருவரும் வத்சலாவின் வீட்டுக்கு செல்லும் போது ஆறு மணிக்கு மேல் ஆகி விட்டது. வீடு மந்தை வெளியில் ரோட்டை ஒட்டியே இருந்தது. மூன்றடுக்கு தளமாக இருந்ததில் அவள் வீடு இரண்டாம் தளத்தில் மூன்றாம் வரிசையில் அழகான அமைப்புடன் இருந்தது. உள்ளேயும் அழகாக வைத்திருந்தாள் வத்சலா.
இதுதான் பாத்ரூம், போய் குளிச்சிட்டு ரெடியாகு, நான் போய் ‘டீ’ வைக்கிரேன், குளிச்சிட்டு வந்து குடி, அதுக்குள்ள நானும் குளிச்சிட்டு வந்துடறேன், இரண்டு பேரும் “அவுட்டிங்” போலாம். பூர்ணிமா குளயலறைக்குள் நுழைந்தாள்.
இருவரும் ஒரு டாக்சியை ஏற்பாடு செய்து கொண்டனர். ஆங்கிலப்படம் ஒன்றை பார்த்துவிட்டு ஓட்டல் சரவண பவனில் சாப்பிட்டு விட்டு கிளம்பும் போதே மழை பிடித்துக்கொண்டது. வீடு வந்து டாக்சிக்கு பணம் கொடுத்துவிட்டு கதவை திறந்து உள்ளே நுழைவதற்குள் தெப்பலாக நனைந்து விட்டனர். இந்தா என்னுடைய ட்ரஸ் போய் உன்னுடைய ட்ரஸை மாத்திகிட்டு இதை போட்டுக்க, வத்சலா கொடுத்த உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழுத்துக் கொண்டு செல்லும் போது கதவை தட்டும் சத்தம் கேட்டது. கனவாக இருக்கும் என நினைத்தவள் மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்க , படுக்கையிலிருந்தாவாறே திரும்பி வத்சலாவை பார்த்தாள். அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு போயிருந்தாள். இவள் மெதுவாக எழுந்து உள் அறையை விட்டு வெளியே வந்து கதவருகே நின்றவள் சற்று யோசித்தாள், அதன் பின் கதவை மெல்ல திறந்தாள்.
வெளியே நிற்கும் உருவத்தை அடையாளம் தெரியாமல் பார்க்க அந்த உருவம் சடாரென அவளை உள்ளே தள்ளி அவள் வாயை பொத்தி இடுப்பிலிருந்த கத்தியை உருவி குத்தப்போகும் வேளையில்
“பாஸ்கர்” என்ற கூச்சல் பூரணியின் பின்னால் வத்சலாவிடமிருந்து வந்தது. கத்தியை ஓங்கிய உருவம் சட்டென திகைத்து வாயை பொத்தியவள் முகம் பார்த்து கையை எடுத்து “ஐ ஆம் சாரி” என தள்ளிப்போய் நின்று கொண்டது.
என்ன தைரியம் உங்களுக்கு கொலை செய்யற அளவுக்கு வந்துட்டீங்கண்ணா உங்களை சும்மா விடக்கூடாது, இப்பவே போலீசுக்கு போன் பண்ணறேன் என்றவாறு போனை தேடினாள்.
அதுவரை மயிரிழையில் உயிர் தப்பிய பிரமையுடன் நின்று கொண்டிருந்த பூர்ணிமா தெளிவு பெற்று “நில் வத்சலா” அவளை தடுத்து இவர் யாருன்னு உனக்கு தெரியுமா? என்று கேட்டாள். இவள் என் ஹஸ்பெண்ட்தான், ஆனா இப்ப நாங்க இரண்டு பேரும் தனித் தனியாகத்தான் இருக்கோம், கோர்ட்ல டைவர்ஸ் கேஸ் நடக்குது, சொன்னாள்.
எனக்கு இதுல உடன்பாடு கிடையாது மேடம் தள்ளி நின்றுகொண்டிருந்த பாஸ்கர் சொல்ல, ஏன் சார் உங்களுக்கு உடன்பாடு கிடையாதுன்னு காண்பிக்கறதுக்கு இவளை கொலை பண்ணிட்டீங்கன்னா சரியாயிடுமா? கேட்ட பூர்ணிமாவுக்கு இவன் என்ன பதில் சொலவது என விழித்து என்னை மன்னிச்சுங்குங்க மேடம் நான் அவதான்னு நினைச்சுகிட்டு உங்களை குத்த பார்த்துட்டேன்.
இப்ப அதைப் பத்தி விட்டுடுங்க, நீங்க இவ கூட சேர்ந்து வாழனும்னு நினைக்கிறீங்களா? ஆமா மேடம் ஆனா அவதான் இப்ப கேசு, அது இதுன்னு போட்டு என்னை அவமானப்படுத்திட்டா.
கவலைப்படாதீங்க, தீர்ப்பு வந்து நீங்க பிரிஞ்சிட்டாலும் , இல்லை கேசை வாபஸ் வாங்க வைக்கிறதும் நாம நடந்துக்கற முறையில இருக்கு. கண்டிப்பா அவ மனசு மாறும் அப்படீன்னு நம்பிக்கை வச்சு உங்க முயற்சியை தொடருங்க. அப்படியே இவ பிடிவாதமா இருந்தாலும் கண்டிப்பா ஒவ்வொரு மனுசனுக்கும் பிடிமானம் வேணும்னு ஒரு கால கட்டம் வந்தே தீரும், அப்ப கண்டிப்பா உங்களை தேடி வரக்கூடும். தயவு செய்து அதுவரைக்கும் இந்த கொலை முயற்சி எல்லாம் செய்யாதீங்க, அதனால் உங்க வாழ்க்கைதான் சீரழிஞ்சுடும்
நான் செஞ்சது எவ்வளவு கேவலமாக காரியம்னு இப்ப நினைக்கிரேன், ரொம்ப சாரி இப்ப நான் கிளம்பறேன், அவன் கிளம்ப எத்தனிக்க எங்க போறீங்க? இந்த மழையிலே/ நாளை காலையில எழுந்து போங்க, இந்த பக்கத்து ரூமுல போய் படுத்துக்குங்க, என்று சொன்னாள்.
அவன் தயங்கி வத்சலாவின் முகத்தை பார்க்க, ஏன் சார் அவளை பார்க்கறீங்க, நான் அவளுக்கு கெஸ்ட், எனக்கு நீங்க கெஸ்ட், கண்டிப்பா இந்நேரத்துக்கு நம்ம இரண்டு பேரையும் வெளியே அனுப்ப மாட்டான்னு நினைக்கிறேன். ஓகே, குட் நைட் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்த வத்சலாவையும் இழுத்துக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள்.
மறு நாள் இருவரும் எழுந்து வெளியே வந்து பார்த்த பொழுது அவன் இல்லை, அவன் எழுதி வைத்த கடிதம் இருந்தது. மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல் இனிமேல் எந்த விதத்திலும் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன், என்றும் முடிவு எதுவானாலும் ஏற்றுக் கொள்வதாக எழுதியிருந்தான். பூர்ணிமா வத்சலாவை பார்க்க அவள் கணகள் கலங்கி இருந்தன. மாற்றம் வரும், வரவேண்டும்.
திங்கள் காலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலையில் நிற்கும் போதுதான் பூர்ணிமா கவனித்தாள், இந்த ரோடு, மற்றும் வத்சலாவின் வீடு, இவைகள் அடிக்கடி இவள் கனவில் வந்த இடங்கள் என்று !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Oct-21, 10:48 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : iravil vanthavan
பார்வை : 192

மேலே