சாதனை புரிய விழைபவர்களின் கவனத்திற்கு

சாதனை புரிய வேண்டும் என்பதில் தவறு இல்லை. மாறாக சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோள் மிகவும் வரவேற்க தக்கதே. ஆனால் இதற்கு மிக முக்கியமாக தேவை படுவது ஒருவரின் திறமை, கலைகள் மற்றும் உழைப்பு மட்டும் இல்லை, வரும் சோதனைகளை எதிர்கொண்டு சந்தித்து, பொறுமையுடன் நிதானத்துடன் சாதுர்யமாக அவைகளை கடந்து, நினைத்த சாதனையை படைக்க வேண்டும். எந்த ஒரு துறையிலும் சாதனைகள் செய்ய நினைக்கையில் பல இடர்பாடுகள் எப்போதுமே ஒருவரை பின்வாங்க வைக்க செயல் பட்டு கொண்டே இருக்கும். இப்போதுள்ள நிலையில் எந்த விஷயத்திலும் போட்டி பொறாமை வஞ்சகம் போன்றவை ஒளிந்து கொண்டோ இல்லை நேரில் இருந்து கொண்டோதான் இருக்கிறது. அன்று டென்சிங் ஹில்லரி இருவரும் எவெரெஸ்ட் சென்று அடைந்தபோது அங்கே வேறு எவருமே இல்லை, ஈ காக்க கூட.இப்போது எவெரெஸ்டை ஒரு சுற்றுலா தலமாக மாற்றினாலும் வியப்பில்லை. அந்த அளவுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள், ஆக்ஸிஜன் அளவு எல்லாமே கிடைக்கிறது. எவெரெஸ்ட் சிகரம் இருப்பவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு பெருகிவிட்டது. பெண்களும் எவெரெஸ்டை அடைய தயங்குவதில்லை.இப்போது நம் விஷயத்திற்கு வருவோம்.

திறமை மற்றும் அதிருஷ்டம்:
அறிவும் திறமையும் நிறைந்து இருப்பின் போட்டியினை சந்திப்பது மிகவும் கடினமான காரியமாக இராது. படிப்பு மற்றும் பயிற்சி இந்த இரண்டும் திறமையை கூட்ட வழி செய்கிறது. ஆனால் அறிவு என்பது ஒருவருக்கு இயற்கையாக அமைந்திருப்பது. பயிற்சி மற்றும் முயற்சியால் இதை ஓரளவுக்கு மட்டுமே கூட்டி பரிமளிக்க செய்ய முடியும். இயற்கையில் உள்ள அறிவுத்திறன் தான் பெரும்பாலும் ஒருவர் செயல்களுக்கும் முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. நாம் காணும் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஏதாவது ஒரு விஷயத்திலோ அல்லது பல விஷயங்களிலோ அதிக திறமை பெற்றவராக இருக்கிறார்கள். ஆனாலும் ஆச்சரியப்படவைக்கும் திறமையும் கலையும் மிகவும் குறைந்த மனிதர்களிடம்தான் இருக்கிறது. வெற்றி பெற திறமை தேவை, நிச்சயமாக. ஆனால் அவ்வப்போது சிலருக்கு அதிருஷ்டம் கூட வெற்றிகளையும் புகழையும் பெற்று தருகிறது. முன்னாள் முன்னணி திரைப்பட பின்னணி பாடகர் திரு.டி.எம். சௌந்தரராஜன் ( TMS ) திடீரென புகழ் அடைய காரணம் அவரது அதிருஷ்டம். இதற்கு "தூக்குத்தூக்கி" என்ற சிவாஜி கணேசன் நடித்து ஓஹோ என மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் இதற்கு நல்ல உதாரணம். அப்போது ஓஹோ என்று இருந்த பின்னானி பாடகர் திருச்சி லோகநாதனை இப்படத்தின் பாடல்களை பாட அழைத்தபோது கூடுதல் தொகை கேட்டாராம். அதுமட்டும் இல்லாமல் " மதுரையிலிருந்து ஒருவர் பாட வந்திருக்கிறாராம். அவர் நீங்கள் கொடுக்கும் தொகைக்கு பாடுவார்" என்றும் சொன்னாராம். தயாரிப்பாளர்கள் டி.எம். சௌந்தரராஜனுக்கு பாட வாய்ப்பு கொடுத்தார்கள். G ராமநாதன் இசை அமைப்பில் ஐந்து பாடல்களை TMS ஐ வைத்து பாட வைத்தார்களாம். சிவாஜி கணேசன் இந்த பாடல்களை கேட்டு மிகவும் திருப்தி அடைந்து அப்போதிலிருந்து தான் நடிக்கும் எல்லா படங்களுக்குமே TMS தான் பாடவேண்டும் என்று சொன்னாராம். TMS இன் வருகையால் திருச்சி லோகநாதன் உட்பட பல பின்னணி பாடகர்கள் பாடும் வாய்ப்புகளை இழந்தனர். 1976 ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளர் இளையராஜா திரையில் நுழையும்வரை TMS சிவாஜி மற்றும் MGR இருவருக்குமே பாடி கொடிகட்டி பறந்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்தி. அதிருஷ்டத்திற்கு இன்னொரு உதாரணம் ஹிந்தி திரைப்பட பின்னணி பாடகர் குமார் சானு. ஆஷிக்கி மற்றும் சாஜன் போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த நேரத்தில் மாபெரும் ஹிந்தி பின்னணி பாடகர் கிஷோர் குமாரும் காலமடைந்துவிட்டார். குமார் சானு தபேலா வாசித்து தான் வந்தார். ஒரு முறை இவர் கொல்கத்தாவிற்கு ஒரு இசை குழுவில் தபேலா வாசிக்க சென்றார். எப்போதும் பாடுபவர் அன்று வர இயலாத நிலையில் இவரையும் பாட சொன்னார்களாம் ரசிகர்கள். அப்போது குமார் சானு பாடியதை ரசிகர்கள் வெகுவாக ரசித்ததின் விளைவு தான் இவர் தபேலாவை விட்டு விட்டு பாடல் துறைக்கு வந்தது.

போட்டி:
உண்மையில் இந்த போட்டி மனப்பான்மை மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நல்லது இல்லை. ஏனெனில் போட்டி உள்ள இடத்தில பொறாமை ஒளிந்து இருக்கும், எப்படி பேரழகிற்கு பின் அபாயம் பதுங்கி இருக்குமோ அதுபோல். ஒருவர் முதலிடம் என்றால் அடுத்தவர் பின் தள்ளப்பட்டு இரண்டு மூன்று நான்கு ஐந்து என்ற இடங்களுக்கு தள்ள படுகிறார். வெற்றியிலும் தோல்வி என்பதற்கு இது எடுத்துக்காட்டு. பலர் முதலிடம் பெற எவ்வளவோ இடர்களையும் இன்னல்களையும் சந்திக்கின்றனர். முடிவில் முதலிடம் இல்லை என்று ஆகும்போது அவர் மகிழ்ச்சையை விட தோல்வியின் நிலையைத்தான் அதிகம் காண்கிறார். ஆனால் அந்த தோல்வியே அவரை இன்னும் கடுமையாக பயிற்சி செய்து இழந்த அந்த முதல் இடத்தை பெற்றிட ஊக்குவிக்கிறது. எனவே சாதனை படைக்க நினைப்பவர்க்கு முதல் பாடம் , தோல்வியை சந்திக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும். பல தொழில்களில் மற்றும் வியாபாரங்களில் நாம் இந்த போட்டியின் தீவிரத்தை கண்கூடாக பார்க்கிறோம். அன்று வெற்றி வகை சூடிய நோக்கியா செல் கம்பெனி இப்போது கீழ் மட்டத்தை அடைந்துவிட்டது. மாருதி கார்களை விட்டால் வேறு எந்த காருமே சரியில்லை என்ற ஒரு கால கட்டத்தில் மாருதி கார் கம்பெனி கார்கள் விற்பதில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தது. இப்போது அதற்கு போட்டியாக பல கார் கம்பெனிகள் உருவாகிவிட்டது. ஹூண்டாய், ஹோண்டா, டாட்டா என்று பல கம்பெனிகள். ஆயூள் காப்பிட்டு நிறுவனம் என்றால் பொது நிறுவனமாகிய LIC ஒன்றுதான் என்பது போய் எவ்வளவு தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நூற்று கணக்கில் வந்து விட்டது. ஏன், நம் BSNL ஐ எடுத்துக்கொள்ளுங்கள். தரை வழி பேசி தொலைபேசி, கைத்தொலைபேசி இரண்டுக்குமே இந்த ஒரு பொது நிறுவனம்தான் கதி என்ற நிலை மாறி நூற்றுக்கணக்கில் தரை வழி மற்றும் கை தொலைபேசி கம்பெனிகள் எங்கும் நிறைந்து விட்டது. இவைகளை தாக்கு பிடிக்க முடியாமல் BSNL இன்று பெரு நஷ்டம் ஈட்டும் நிறுவனமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் போட்டி எதற்கு எடுத்தாலும் போட்டி. எனவே போட்டி நிறைந்த சூழ்நிலையில் வாழ சாதனை புரிய விரும்புபவர் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்.

பொறாமை:
உடலை தொடர்ந்து நிழல் நடப்பது போல ஒரு போட்டிக்கு பின்னல் பொறாமையும் நிச்சயம் தொடரும். இந்த பொறாமை என்பது பொதுவாக கண்கூடாக தெரியாது. சாதனை புரிபவர்களுக்கு ஏதாவது இடர் விளைவிக்க பொறாமைகாரர்கள் யோசித்து கொண்டே இருப்பார்கள். பொறாமை காரணமாக இன்னொருவர் உயிரையும் கூட பறிக்க சில பொறாமைக்காரர்கள் தயங்குவதில்லை. இதை நாம் நேரில் பார்த்திருப்போம் அல்லது நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் கேட்டிருப்போம். இப்போதும் இப்படிப்பட்ட பொறாமையும் வயிற்றெச்சிலும் செய்யும் வேலைகள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது.

வாய்மை, நேர்மை, பணிவு, அடக்கம்:
உண்மையான உயர்ந்த மனிதனிடம் காணப்படும் பண்புகள் இவை. ஒரு காலத்தில் இந்த குணங்கள் நிறைந்திருந்தால் தான் ஒருவர் வாழ்க்கையில் பேரும் புகழும் அடைய முடிந்தது. ஆனால், இப்போதுள்ள காலம் மாறிவிட்டது. ஒருவரிடம் உள்ள நல்ல மனித குணாதிசயங்களை விட அவரது அழகு, திறமை, கவர்ச்சி இதைத்தான் பலர் எதிர்பார்க்கிறார்கள். காமராஜர், காந்தி, வஉசி, கட்ட பொம்மன், லால் பகதூர் சாஸ்திரி, லோகமான்ய திலக், சர்தார் படேல், பிர்லா மற்றும் டாட்டா நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர்கள் இவர்களை போல் எவ்வளவு பேரை நாம் இன்று காண முடிகிறது?
நல்ல திறமை, உழைப்பு இதனுடன் வாய்மை நேர்மை இதனுடன் அன்பு மனம் , கொடுக்கும் உள்ளமும் இணைந்து அமைந்து ஒருவர் முன்னேற்றம் அடைந்து சாதனை புரிந்தால், அவர் உண்மையாகவே மனமுவந்து பாராட்டி போற்றி துதிக்கப்படவேண்டிய மனிதர் தான். அப்படிப்பட்ட எளிய அற்புதமான மனிதர்கள் நம் மண்ணில் பிறந்து சாதனைகளும் படைத்தது பொதுமக்களின் நலனுக்கும் பாடுபட நான் மனதார விழைகிறேன்.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Oct-21, 8:45 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 243

சிறந்த கட்டுரைகள்

மேலே