தன்னுயிர்க்கு மேன்மை நாடி மன்னுயிர்க்கு நன்மை மருவி வாழ்வார் - இருப்பு, தருமதீபிகை 915
நேரிசை வெண்பா
தன்னுயிர்க்கு மேன்மை தனைநாடி எவ்வழியும்
மன்னுயிர்க்கு நன்மை மருவியே - பொன்னுயிராய்
வாழ்ந்து வருவாரே வாழ்வார் வழுவினார்
வீழ்ந்தார் இழிவாய் விளிந்து. 915
- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பிற உயிர்களுக்கு இரங்கி இதம் புரிந்து தம் உயிர்க்கு விழுமிய மேன்மைகளைத் தேடிக்கொள்பவர் எவ்வழியும் திவ்விய நிலையில் வாழ்ந்து வருகின்றார்; அல்லாதவர் இழிவாய் வீழ்ந்து ஒழிகின்றார்; அவ்வாறு ஒழிந்து போகாமல் தெளிந்து வாழ்வது நலமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தான், பிறர் என்னும் வேறுபாடுகள் மானச மருமங்களாய் மருவியிருக்கின்றன. அருகும் அயலும் எவ்வழியும் பெருகி வந்துள்ளன. தனது உடல் தாய், தந்தையர் மனைவி மக்கள், ஒக்கல் உறவுகள் பக்கம் படர்ந்து நிற்கின்றன. பழக்கமாய்த் தொடர்ந்து வந்தன யாவும் அயலே அடர்ந்துள்ளன. உரிமையாய் உற்றவரிடம் மாத்திரம் யாவரும் பிரியம் கொண்டாடுகின்றனர்; மற்றவரிடம் அவ்வாறு புரியாமல் பொதுவாய் நடந்து வருகின்றனர். பழகிய வாசனைகளே கிழமை தோய்ந்து கேண்மை வாய்ந்து யாண்டும் வளமையாய் நீண்டு வந்துள்ளன.
பிற உயிர்களுக்கு இரங்கி அருளும்பொழுது அந்த மனிதன் பெரியவனாய் உயர்ந்து ஒளிபெறுகின்றான். உரைகளில் இனிமையும் செயல்களில் இதமும் கனிந்து வருமளவு அவனிடம் உயர் நிலைகள் சுரந்து உறுதி நலங்கள் ஓங்கி வருகின்றன.
செல்வம், கல்வி, அறிவால் ஒருவன் உயர்ந்தபோது அந்த வகையில் தாழ்ந்துள்ளவர்க்கு உதவி செய்வது அவனுக்குக் கடமை ஆகின்றது. உயர்ந்த மலையிலுள்ள நீர் தாழ்ந்த நதிகளில் பாய்ந்து பயிர்களுக்கு உதவுதல்போல் மேலோர் விதிமுறையே உயிர்களுக்கு உதவுகின்றனர். உறவினர், அயலினர், பெரியவர், சிறியவர், உயர்ந்தவர், இழிந்தவர் என்று வேறுபாடுகள் யாதும் காணாமல் எவ்வுயிரையும் பேரருளோடு பேணி வருபவனே திவ்விய நிலையைக் காணியாய்க் காணுகிறான்.
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
உடலுறுப் புகள்மேல் கீழென்(று)
..உன்னிடா(து) ஓம்பல் போலுந்
தடமலை கொண்ட நீரைத்
..தாழ்தரைக்(கு) அளித்தல் போலுந்
தொடர்புறு மேலோர் தங்கைத்
..தோய்நிதி யாவுந் தாழ்ந்தோர்க்(கு)
இடவெனக் கடவுள் ஈந்த(து)
எனநினைந் திடுவர் மாதோ. 8
- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல், நீதி நூல்
இதனை ஈண்டு நினைந்து நீதிகளைத் தெளிந்து கொள்ள வேண்டும்.
பிற உயிர்களுக்கு இதமாய் உதவி செய்துவரும் அளவே ஒருவனுடைய வாழ்வு புண்ணியம் உடையதாய்ப் பொலிவடைந்து வருகிறது. ஆன்மாக்கள் பரமான்மாவின் உறவினங்களாதலால் சீவகோடிகளுக்கு இதம் புரிபவனைத் தேவதேவன் விழைந்து நோக்கி உவந்து தழுவிக் கொள்கிறான். உள்ளம் இரங்கி உதவி வருந்தோறும் அவ்வுயிர் உயர்ந்த பரம நீர்மையை மருவி மிளிர்கிறது. தண்ணளியுள் புண்ணியம் விளைகிறது.
அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
பகவன். - 3 மணிமேகலை
புத்தரது நீர்மையை இவ்வாறு ஒரு தவமகள் குறித்திருக்கிறாள். உலக மக்களுடைய அவல நிலைகளைக் கண்டு கவலை கொண்டு இரங்கி அத்துன்பங்களை நீக்கும் பொருட்டே தமது இன்ப நிலையமான அரச வாழ்வை அடியோடு துறந்து அடவி புகுந்து அருந்தவம் புரிந்த பெருந்தகையாதலால் இவரது சீவதயையை வியந்து ஞாலம் முழுவதும் சாலவும் புகழ்ந்து போற்றுகிறது. ஆருயிர்க்கு அருளுவது அதிசய நீர்மையாம்.
தன்னுயிர் ஓம்பாது தண்ணளி நிறைந்து
மன்னுயிர் ஓம்பிய மாதவன்.
என மகிமை பெற்றிருத்தலால் இவருடைய நீர்மை சீர்மைகளை நேரே தெரிந்து நெஞ்சம் வியந்து கொள்ளுகிறோம்.
சிறந்த மனிதப் பிறவியை அடைந்தது உயர்ந்த கதியை அடைந்து கொள்ளவேயாம்; அறிவும் அன்பும் பரிவும் பண்பும் அதிசய நலங்களை அருளுகின்றன. இந்த இனிய இயல்புகள் மருவிய பொழுது மனிதன் புனிதனாய் உயர்ந்து தனி நிலையில் விளங்கி எவ்வுயிர்க்கும் எவ்வழியும் இதமே செய்கிறான்.
உதவியாளனை உலகம் உவந்து தொழுகிறது; இதம் இல்லாதவனை எள்ளி இகழ்கின்றது. இனிய உதவியால் மனிதன் தனிமகிமைகளை அடைதலால் புனிதனாய்ப் பொலிந்து திகழ்கிறான்.
நேரிசை வெண்பா
முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர்; - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்(து)
ஆயினும் ஆமோ அறை. 28 - நன்னெறி
உபகாரிகள் நயவர்; அஃது இல்லாதவர் கயவர் என இது காட்டியுளது. அவருடைய மேன்மை கீழ்மைகளை ஊன்றி உணர முறையே இனிய தீங்கனியும் எட்டியும் என்று சுட்டியது.
சீவர்களுக்கு இரங்கி அருள்பவன் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கிறான்; அந்த இனிய நீர்மை இல்லையேல் மனித வாழ்வு இன்னாததாய் இழிகின்றது; அவ்வாறு இழிவு நேராதபடி எவ்வழியும் உரிய வாழ்வைப் புனிதமாக்கி இனியனாயுயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்..