மனிதன் பெயரடைந்து வளர்ந்தும் வருவது உணராமல் சிந்தை தளர்ந்தான் - பிறப்பு, தருமதீபிகை 905

நேரிசை வெண்பா

உயிரினங்கள் உள்ளே உயர்ந்து மனிதன்
பெயரடைந்(து) இங்கே பெருகி - இயல்சிறந்து
வந்து வளர்ந்தும் வருவ(து) உணராமல்
சிந்தை தளர்ந்தான் சிதைந்து. 905

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகில் தோன்றிய உயிர் இனங்களுக்குள்ளே மனிதன் உயர்ந்த நிலையில் சிறந்து வந்திருக்கிறான்; அவ்வாறு வந்து வளர்ந்தும் உணரவுரியதை உணராமல் உள்ளம் மடிந்து இழிந்து போகிறான்; அப்போக்கு அவனைப் புலையில் தாழ்த்தி விடுகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சீவப் பிராணிகளுள் மனிதப் பிறப்பு மிகவும் சிறந்தது. பெறலரிய உயர் பிறவியை அடைந்தும் அதனால் பெறவுரிய பெரிய பயனை அடையாமல் இருப்பது கடையான அவல நிலையாம். ஊன இழிவு ஒழிவதே ஞான வழியாகிறது.

அல்லல்கள் யாதும் நேராமல் தன் உயிர்க்கு நல்லதை நாடிக் கொள்வதே ஒருவனுடைய கூரிய அறிவுக்குச் சீரிய பயனாம். பொறி வெறிகளில் இழிந்து போகாமல் புலன்களை அடக்கி நெறியே ஒழுகி வருபவனே நிலையான பேரின்ப நிலையை அடைகின்றான். நியமமான சீலத்தால் சித்தம் சுத்தி ஆகி முத்தி நிலை அவனுக்கு முதல் உரிமையாய் வருகிறது.

மனம் மாசு படின் மனிதன் நீசம் அடைந்து, ஈசன் அருளை இழந்து அவன் இழிந்து கழிந்து தொலைகின்றான்.

உள்ளம் கெட்டபொழுது மனிதன் கெட்டவனாயிழிந்து படுதலால் நல்ல அறிவு அவனிடமிருந்து ஒழிந்து விடுகிறது.

Men that are greatly guilty are never wise.- E.Burke

மிகவும் குற்றமுள்ள மனிதர் ஒரு போதும் ஞானம் உடையவராகார் என எட்மண்டு பர்க் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். பிழைகள் படிந்து உள்ளம் பாழ் படின் அந்த மனிதன் உயர் நலங்கள் யாதும் அடைய முடியாது.

தன் உள்ளத்தைப் புனிதப்படுத்தி வருகிறவனே உயர்ந்த கதிகளை அடைய நேர்கின்றான். தான் பிறந்த பிறப்பைச் சிறந்த நிலையில் உயர்த்துகின்றவனே உத்தம மனிதனாய் ஒளி மிகுந்து நிற்கின்றான். துயர் தோயாத தூய நிலையை உயர்வு என்றது.

அரிய பல அறிவு நலங்களுக்கு இனிய நிலையமாய் மனிதப் பிறவி மருவியுள்ளது; உண்மை நிலைகளை ஊன்றி உணர வல்லது. உலக அறிவு, கல்வி அறிவு, அனுபவ அறிவு, ஆன்ம அறிவு என இன்னவாறு மேன்மையான அறிவுகளுக்கெல்லாம் இடமாயுள்ள மனிதன் உறுவதை ஓர்ந்துணர்ந்து தன் உயிர்க்கு நன்மை செய்து கொள்ளவில்லையானால் அப்பிறவி புன்மையாய்ப் புலையுறுகின்றது. ஆவதை அறியாமை அவகேடாய் முடிகிறது.

உயர்ந்த பிறவியில் வந்த மனிதன் மேல் வருவதை உணர்ந்து சிந்தை தெளிந்து முந்துறச் செய்து கொள்ள வேண்டியதைச் செய்யாமல் மையலோடு மறுகி நிற்கும் மடமை நிலையை ’வருவது உணராமல்’ என்றது. மூடம் கேடான பீடை ஆகிறது.

மூப்பு இறப்புகள் மூண்டு நிற்கின்றன; அவை நேரும் முன்னரே உயிர்க்குறுதியை நேர்ந்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் கொண்டவனே பிறவிப் பயனைப் பெற்றவனாகிறான்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 5

- முதல் தந்திரம் - 7.இளமை நிலையாமை

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே. 10

- ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை, பத்தாம் திருமுறை, திருமந்திரம்

காலம் கழிவதைக் கருதியுணர்த்து உயிர்க்குய்தியை விரைந்து செய்து கொள்ளுங்கள் என உலகமாந்தரை நோக்கித் திருமூலர் இவ்வாறு உரிமையோடு இனிது உணர்த்தியிருக்கிறார்.

புலையான புலன்களில் அலைய நேர்ந்தால் நிலையான நலன்களை அடைய முடியாதாதலால் அவற்றை விலகி நின்றவரே விழுமிய கதியை மேவுகின்றனர். உலக இன்பங்கள் எவ்வளவு உயர்ந்தனவாயினும் எவ்வழியும் துன்பங்களையே விளைத்து வருகின்றன; ஆகவே அந்த மாயச் சுகங்களை வெறுத்து விலகினவரே தூய பேரின்ப நிலையை நேயமாய்த் தோய்கின்றனர்.

Earth's sweetest joy is but disguised woe. (William}

’உலகத்தின் இனிய மகிழ்ச்சி கொடிய துக்கமே’ என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுரியது.

’விடம் விடம் அன்று; விடயமே விடம்’ என முனிவர் இங்ஙனம் முடிவு செய்துள்ளனர். தேகபோகங்களை விழைந்து மோகமாயுழலாமல் விவேகமாய் உய்பவரே விழுமிய யோகராய் விளங்கியுள்ளனர். ஆன்ம போகம் அதிசய நிலையது.

கலிவிருத்தம்
(மா விளம் விளம் கூவிளம்)

அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே. 5

- 061 திருவரிசிற்கரைப்புத்தூர், ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர்.தேவாரம்

அல்லல் வாழ்க்கையில் இழிந்து கழியாமல் நல்ல பேரின்ப நிலையை நண்ணி உய்யும்படி அப்பர் இப்படி அருளியிருக்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Oct-21, 8:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே