அவளாற்றுப்படை

காதலில் கட்டுண்ட பெண்ணொருத்தி ஓர்நாளில்
காதலவனைக் காணப் புறப்பட்டாள் கவிமொழிய...!

நீராடிப் பூச்சூடிய நிறைமுகக் கனவுகளோடு
போராடித்தான் போகவேண்டும் அந்தப் பொல்லாக் காதலுக்காய்...!

இட்ட கோலமதில் மீதப்பட்ட வண்ணங்கள்யாவும்
எட்ட நின்றவாறே எள்ளிநகைத்து நாணியொழிய...!

இடையொற்றிய மகிழம்பூச் சேலைதனை எடுப்பாக
அடைகாக்கும் கோழிபோல் இணக்கமாய்ச் சொருகிக்கொண்டாள்...!

இறுகப்பற்றிய ஆடைதனை இடமும்வலமும் சரிசெய்ய
வறுமைக்கறையோ விடையளிப்பதாய்த் தெரியவில்லை!, தெளிவுமில்லை...!

அடுத்தடுத்த உடுப்புகளை அக்கணமே மாற்றினாலும்
தொடுத்தெறிந்த அம்புகளாய் தொடர்ந்தவாறே வறுமைக்கறை...!

களைந்தெறிந்த ஆடைகளெல்லாம் கவலையில் ஒதுங்கிவிட
விளைந்தழுந்த யாக்கைதனில் விலையுயர்ந்த காதல்பரிசு...!

கண்ணாடி முன்நின்று ஒப்பனையால் ஆடைநெய்ய
வண்ணதுப் பூச்சிகளெல்லாம் நிறமிழந்து போயினவே...!

எடுப்பான ஆடையொன்றை மிடுக்காக உடுத்திக்கொண்டு
இடுபொருளாய்க் காதலும் துணைக்கென கைக்குட்டையுமாய்...!

திரும்ப எத்தனிக்க திகைத்தவளோ கலையானாள்
விரும்பிய காதலனோ அவளடுத்தே சிலையானான்...!

வடிக்கப்பட்ட சிலைபோலக் காதலனே மெய்மறக்க
துடிக்கின்ற நாளங்களில் வெடிக்கின்றது அவள்காதல்...!

எப்போது வந்தானோ!, என்னவெல்லாம் காண்டானோ!,
அச்சம் மடம் நாணமென அக்கணமே அவளடைந்தாள்...!

#அணங்கினி_அவளது_மொழியாகும்

எழுதியவர் : (3-Nov-21, 8:29 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 51

மேலே