நானா கடவுள்
நானா கடவுள்
📦📦📦📦📦📦📦
பிறந்தை(பிறவி)யில் மனிதனின் குழந்தையாய் பிறந்திருந்தால்
கடவுளென் பெயரென்று கற்சிலையாய் நின்றிரேன்...
தாட்டிகம்(பெருமை)தான் தலைமேலே பொன்பொருளால் அர்ச்சனை
பூட்டிவிட்டுப் போகும்போது எனக்கேன்டா கடுங்காவல்...
குத்தங்கள் செய்கின்ற குள்ளநரி கூட்டங்கள்
வித்தங்(பொன்)களைக் காணிக்கையாய் விதைக்கின்றனர் உண்டியலில்...
ஒட்டுபசை கள்ளச்சாவி உருவியுமே மீந்ததுவை
பட்டைநாமம் போடுவதே பதவியரின் தகணா(பழக்கமா)க்கும்...
அடக்கிவிட்ட ஊரடங்கால் ஆன்ற(நிறைத)லில்லை என்வருவாய்
கிடைக்கிறது லாபமென தங்கம் உருக்கி விடத் துணிந்தாயோ...
பண்டிகைகள் நடத்திவிட்டு உண்டியலைத் திறக்கின்றாய்
சாக்குப்பைகள் நிறைந்தால்தான் சக்திபற்றிய புகலெ(புகழ்)னக்கு
கம்பலை(அச்சம்)யோ சிறிதுமின்றி காணிக்கைத் தங்கங்களை
கும்பல் சேர்ந்து உருக்குவதன் குறிக்கோளும் நானறிவேன்...
திருக்கோயில் பாணி(ஊர்)தோறும் தீரமுடன் நின்றெதற்கு
உருக்குங்கடா என்சிலையும் உயிர் கொடுத்தும் வயிர் நிறைப்பேன்...
பிசாசிடம் தப்பிக்க போற்றப்படும் என்நாமம்
உசாவி(விசாரி)னால் சொத்துபற்றி கூற்றம்(கொடும்பகை)நேரும் நமக்குள்ளே...
அறங்காவல் பெயர்சொல்லி அதிகாரக் கூட்டங்கள்
புறங்கையால் தேன்நக்க பொருத்திருந்தும் பார்க்கின்றேன்...
ஆக்கலும் அழித்தலும் மனிதனா? கடவுளா?
அக்குழப்பம் வரும்போது இகுதல்(சொரிதல்)செய்வேன் என்தலையை...
செம்பொருளாய்(உண்மைப்பொருள்) சொல்லிட்டால் உன் சொத்தை தந்தாயா?
என்சொத்தை எடுத்தாயா? இயம்புங்கடா மனிதர்களே...
📦📦📦📦📦📦📦📦📦📦📦📦📦