விடியலுக்கு வள்ளுவமே வழி
#விடியலுக்கு வள்ளுவமே வழி
வள்ளுவம் என்றொரு பொன்னேடு
வைத்துக் காத்திடு கண்ணோடு
வாழ்வின் உயர்விற்கு படிக்கட்டு - குறள்
வாசித்து வெற்றிக் கொடி கட்டு..!
அறம் பொருள் இன்பம் அழகோடு
அறிவுரை புகட்டும் தெளிவோடு
உரமாய் விளங்கிடும் வளர்ச்சிக்கு
வரம்தான் வள்ளுவம் வாழ்க்கைக்கு..!
கற்க கசடற ஓதும் குறள்
நிற்க அதன்வழி ஓங்கும் குரல்
பற்றிக் கொள்க பண்பு நெறி
முற்றும் பிறவிக்கு முதன்மைவழி..!
பிறவி என்பது பெருங்கடலாம்
நீந்திக் கடத்தல் இறை செயலாம்
பணிந்திடு இறைவன் பாதங்கள்
பலனடை குறள் மொழி வேதங்கள்..!
உடலுக்கு நஞ்சாம் மதுவென்றார் - அதை
ஒழித்தவர் வாழ்வில் பிணி வென்றார்
ஆயிரமிரண்டு ஆண்டின் முன்னே
பாவில் உரைத்தார் பற்று இன்னே..!
காதலுக்கும் நெறி முறைகள்
காமத்திற்கும் வரையறைகள் - குறள்
அளந்துரைக்கும் துலாக்கோலாம்
அளவாயிருப்பின் விழாக்கோலம்..!
இறைவன் அவனிவன் என்றில்லை
இனங்கள் மதங்கள் சாதியில்லை
ஒன்றாம் இறைவன் உரைத்திட்டார் - வள்ளுவர்
உரைத்தார் இறைநிலை உயர்ந்திட்டார்..!
ஒன்றே முக்கால் வரிகளிலே
நன்றாய் சமைத்தார் நெறிகளையே
குன்றா ஒளி தரும் வாழ்க்கைக்கு - ஊன்று
கோலாம் குறள் உன் பாதைக்கு..!
வள்ளுவம் உயர்த்தும் ஏணிப்படி
வகையாய் அதிலே ஏறிடு நீ
வானம் கை தொட வாழும்படி - குறள்
வைக்கும் ஊரே மெச்சும்படி..!
#சொ.சாந்தி