உறுவது உணராமல் உள்ளம் களித்து சிறுமையாய் நாளைக் கழித்தார் - இருப்பு, தருமதீபிகை 920

நேரிசை வெண்பா

உறுவ(து) உணராமல் உள்ளம் களித்து
மறுமை நிலையை மறந்து - சிறுமையாய்
நாளைக் கழித்தார் நமனுக்(கு) இரையாக
ஆளைக் கழித்தார் அவர். 920

- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மேல் உறுவதை உணர்ந்து உயிர்க்கு உறுதியை விரைந்து தேடாமல் நாளை வீணே கழித்து வருபவர் எமனுக்கு இரையாய் அவமே அழிந்தார்; அவ்வாறு அழிந்தொழியாமல் தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இயல்பாகவே மனிதரிடம் நல்ல அறிவு அமைந்துள்ளது; இருந்தும் அதன் பயனை அடையாமல் மயலாய் இழிந்து கழிவதே மாயமயக்கமாய் யாண்டும் மருவி வருகிறது. பல நூல்களைப் படிக்கின்றார்; கலைகளைக் கற்கின்றார்; காவியங்களை உணர்கின்றார்; உலக நிலைகளை அறிகின்றார், வான மண்டலங்களை ஆராய்கின்றார்; கிரக சஞ்சாரங்களைத் தெரிகின்றார்; இன்னவாறு யாவும் ஆவலோடு தெரிய நேர்ந்தவர் தன்னைக் குறித்து யாதும் தெரியாமல் அவலமாய் அழிந்தொழிகின்றார் மதிகேடராய் இழிந்து ஒழிந்து போவது அதிசய வினோதமாய் விரிந்து நிற்கிறது.

சாவு யாவருக்கும் தலைமேல் இருக்கிறது; அது நேருமுன் நேர்ந்த பிறவிக்கு ஆர்ந்த பயனை ஓர்ந்துணர்ந்து ஏதேனும் ஓரளவு உறுதிநலம் அடைந்தவனே உத்தமனாய் உயர்கின்றான்; அல்லாதவர் எல்லாரும் பித்தராகவே இழிந்து படுகின்றார்.

துன்பத் தொடர்புகள் தொலைந்து இன்பப் பேறுகள் எய்தும்படி வாழ்வதே வாழ்வாம்; அவ்வாறு வாழ்பவனைத் தேவர் முதல் யாவரும் புகழ்ந்து வருகின்றார். உத்தம மனிதனுடைய வாழ்நாளைக் குறித்துப் புத்தர் ஒருமுறை போதித்த போதனை வித்தக ஞானமாய் விளங்கித் தத்துவ நீர்மையைத் துலக்கி நின்றது.

அமுத பதத்தை அறியாமல் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதினும் அதனை அறிந்து ஒரு நாள் வாழ்வதே உயர்வுடையது என்னும் தம்மபதம், 114 ன் கருத்து ஊன்றி உணர வுரியது.

என்றும் அழியாத பேரின்ப நிலையையே அமுத பதம் என்று இங்கே குறித்திருக்கிறார். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மகான் உரைத்ததை இன்றும் அறிவுலகம் உரிமையோடு கருதி வருகிறது. பொய்யான மாய வாழ்வில் மெய்யான உண்மையை உணர்ந்து கொள்வது மேலான கதியை அருளுமாதலால் அது மேன்மையான தூய மந்திரமாய் எண்ண நேர்ந்தது. உயிர்க்கு உய்தி புரிவது ஒளி மிகுந்த வாழ்வாய் உயர்வுறுகிறது. பயனுடையது விழுமிதாய் வியனடைந்தது; பயனில்லது இழி மடமையாய்க் கழிவடைந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மடமையாய் வருடம் நூறு வாழ்வதின் மதிகூர்ந்(து) ஓர்ந்த
கடமையைக் கருதி ஓர்நாள் கழியினும் கதிமுன் காணும்;
அடவியில் புகுந்தார் ஏனும் அருந்தவம் புரிந்தார் ஏனும்
உடலுறு பயனை ஓர்வார் உயர்கதி பரனை ஓர்வார்.

ஆன்ம நோக்கமான ஞான நாட்டம் ஒருகணம் காணினும் அது இனிய அமுத வாசனையாய் அரிய பரகதியை அடையச் செய்யுமாதலால் அதிசய பாக்கியமாய்த் துதி செய்ய வந்தது.

மனிதனுடைய நல்ல அறிவுக்குப் பயன் தன் உயிர்க்கு யாண்டும் அல்லல் நேராமல் ஆக்கிக் கொள்வதேயாம். உண்மை தெளிந்து உய்தி புரியும் உணர்வே ஞானம் என மேன்மையாய் விளங்கியுளது. அதற்கு மாறான எதுவும் அஞ்ஞானம் என அவலமடைந்துள்ளது. துன்பமும் அழிவும் எவ்வழியும் தொடர்ந்துள்ள உலகப் பொருள்களை அவாவி யுழல்வது மாய மயக்கமாம்; என்றும் அழியாத இன்ப நிலையை எய்துகின்றவரே தூய ஞானிகளாய்த் துலங்கியுள்ளனர்.

மெய்ப்பொருளை அறிந்தவர் பொய்ப் பொருளை இகழ்ந்து விடுகின்றனர். மருள், இருள் என மருண்டு இருண்டு நிற்கும் நிலையிலேதான் துயரப் பிறவி நிலையாய்த் தொடர்ந்து கொள்கிறது. உண்மை உணர்வு ஒழியவே புன்மை புகுந்துகொண்டது.

பொருளல்ல வற்றைப் பொருளென்(று) உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. 351 மெய்யுணர்தல்

யாதும் நிலையில்லாத புலையான உலகப் பொருள்களை உண்மை என்று நம்பியுழலும் மாய மயக்கத்தாலேயே தீய பிறப்புகள் தோன்றியுள்ளன என்று வள்ளுவர் இங்ஙனம் தெளிந்துள்ளார். தத்துவ நிலைகளை உய்த்துணர்ந்து உத்தம விவேகியாய் உய்தி பெறவேண்டும் என்பது ஈண்டு உணர வந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சகமென உடலம் என்னத் தகுகர ணங்கள் என்ன
அகமென இதம தென்ன அழிவில்போ கங்கள் என்ன
வகைபட உயிர்கட்(கு) ஆதல் மாயையம் மாயை நீக்கிப்
புகலரு முத்தி சேரும் அவர்கள்புண் ணியத்தி னோரே. - பரிபூரணசித்தி

அவல நிலைகளை உணர்ந்து தெளிந்து ஆன்ம ஞானத்தால் விடுதலை பெறுபவரே மேலான புண்ணிய சீலர் என இது விளக்கியுளது. மெய்யறிவு மனிதனுக்கு உய்தி தருகிறது; பொய்யறிவு புலைகளில் ஆழ்த்துகிறது.

The wise man alone is free, and every fool is a slave. (Stoic).

ஞானி ஒருவனே விடுதலை பெற்றுத் தலைவனாய் நிற்கிறான்; மற்ற மூடரெல்லாரும் அடிமைகளாகவே அல்லல்களில் வாழுகின்றனர் என்னும் இது இங்கே உள்ளம் தெளிய வுரியது.

நல்ல அறிவுக்கும் பொல்லாத மடமைக்கும் உள்ள வேற்றுமையை ஈண்டுணர்ந்து கொள்கிறோம். தன் வாழ்நாளைப் பாழாக்காமல் உயிர்க்கு உயர்ந்த பயனை அடைந்து கொள்ப'வனே சிறந்த ஞானி ஆகிறான்; அருமையாய் அமைந்த நாளைப் பழுதுபடுத்துபவன் இழுதையாய் இழிந்து கழிந்து ஒழிகிறான்.

உனக்கு அமைந்த ஆயுளை இனிமை செய்து உயர் பயனுறுக.

நேரிசை வெண்பா

வாழ்நாட்(கு) அலகா, வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ(து) எழுதலால், - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர(வு) ஆற்றுமின்; யாரும்
நிலவார், நிலமிசை மேல். 22 யாக்கை நிலையாமை, நாலடியார்

இறப்பு நேருமுன் உயிர்க்கு உறுதி பெறும்படி உணர்த்தியுளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-21, 8:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே