பாஞ்சாலி சபதம்
துரியோதனன் - சகுனி
ஐவரை வெல்ல வேண்டும்,மாமா!
அவர் குலம் அழிக்க வேண்டும்
அதற்கு ஒரு வழி சொல் என்றான்.
போரிடத் தேவையில்லை, மருமகனே!
அவர்க்கு சூழ்சி வலை விரிப்பேன்
பகடைக்கு வீழ வைப்பேன், அவர்
தேவியை உனக்கு பரிசளிப்பேன்!
சகுனியும் கொக்கரித்தான்
கௌரவர் குலத்திற்கு குழி பறித்தான்.
துரியோதனன் - திருதராஷ்டிரன்
மன்னனே, என் தந்தையே கேள்.
ஐவரை சூதுக்கு அழைப்போம்.
அழைப்பிதழ் அனுப்பி வைப்போம்.
அவர் வரவுக்கு காத்திருப்போம்.
சூதிலே தோற்கடிப்போம்.
அவர் குல வதுவை நாம் நோகடிப்போம்.
மன்னனின் ஆணைதேவை.
மற்றதெல்லாம் மாமன் வேலை.
நாங்கள் முடிவெடுத்து விட்டோம்
இனி முடிவில் மாற்றமில்லை.
பெரியவர், ஆசான், சான்றோர்
எவரையும் கேட்பதற்கு இல்லை.
மன்னனின் ஆணை தேவை.
மறுப்பை ஏற்க இயலாதென்றான்.
திருதராஷ்டிரன்
சூதெதற்க்கு ஆட வேண்டும்?
சூழ்சி ஏன் செய்ய வேண்டும்?
அமைதி ஏன் குலைக்க வேண்டும்?
அழிவை ஏன் தேட வேண்டும்?
பாண்டவர்க்கு நாம் ஏன் இந்த பாவத்தைச் செய்ய வேண்டும்?
பேரிடர் நிகழும் முன்னே பிள்ளையை காக்க வேண்டும்.
பாவி சகுனியின் பிடியில் இருந்து சந்ததி மீள வேண்டும்.
ஆயிரம் கேள்விகள்,ஆசைகள் எழுந்தன மனதினுள்ளே.
ஆயினும் பிள்ளை பாசம் குருடனை தடுத்தது அங்கே.
இது,
அஸ்தினாபுரத்தை விட்டு அலைமகள் விலகும் நேரம்.
அறிஞர், பெரியோர் மேன்மை அடிபட்டு வீழும் நேரம்.
சகுனியை உலகம் சபிக்க போகும் நேரம்.
திருதராஷ்டிரன் - விதுரன்
குருடன் ஆணை இட்டான், விதுரன்
தூது போக வேண்டும் என்று
மறுக்க முடியவில்லை, விதுரன்,
மனதில் வலிமை இல்லை.
எதிர்க்க முடியவில்லை, சகுனி,
என்னும் நஞ்சை முறிக்க முடியவில்லை.
கல்வி,ஞானம் பெற்று என்ன?
நாய்கள் கூட்டத்தை நாடி
இருந்துவிட்டான். விதுரன்,அவரை அண்டி உடல் வளர்த்தான்
பாண்டவர் நிலம் நோக்கி பாவத்தை ஏந்திச் சென்றான்.
தருமன் ஒப்புதல்
விதுரன் சொன்ன சேதி வியப்பளிக்கவில்லை
அஸ்தினாபுரத்தில் எதுவும் மாறவில்லை
சூழ்ச்சி மாறவில்லை, கொண்ட பகையும் மாறவில்லை
சகுனி மாறவில்லை, அவன் சதியும் மாறவில்லை
அழைப்பில் இருந்த சூழ்ச்சி தருமன் அறிந்து கொண்டான்
தலைவிதியின் வேலை அதை தருமதேவன்
உணர்ந்தான்
அழைப்பை மறுத்துவிட்டால் அது தந்தையறை அவமதிப்பதாகும்,
பகடை ஆட்டம்தானே கொஞ்சம் ஆடிவிட்டு வருவோம்
பார்த்து விட்டு வருவோம் பகையை பதம் பார்த்து விட்டு வருவோம்
அழைப்பை ஏற்றுக் கொண்டோம், நாம் அஸ்தினாபுரம் வருவோம்.
எங்கள் ஐவர் வணக்கம் ஏற்பீர்!அஸ்தினாபுரத்தில் சந்திப்போம் விரைவில்.
ஆடுகளம்
ஐவர் வந்தடைந்தர் அஸ்தினாபுரத்தை
அரசராக வந்தோர் அடிமையாகி நிற்பர்
அரசபைக்கு சென்று பரிசுகள் வழங்கி
அளவளாவி பெரியோர் அனைவரை வணங்கி
அன்னம் உண்டு சற்றே ஓய்வெடுத்த பின்னர்
சகுனி என்ற சனியன் சதியை துவக்கி வைத்தான்
"பகடை ஆடலாம் வா தருமா! பொழுதை போக்கலாம் வா!
போட்டி எல்லாம் சும்மா இது பொழுதை போக்கத் தானே!"
சகுனியின் அழைப்பை சற்றே மறுத்த தருமன்,
"பகடை ஆட்டம் அது பகை வளர்க்கும் ஆட்டம்
பகை விலக்கத் தானே நாம் முயற்சி செய்ய வேண்டும்
பந்தயம் வைத்து ஆடுதல் பகைவருக்குள்ளே நடக்கும்
சொந்தங்களுக்குள்ளே இந்த சூது ஏன் வேண்டும்?
பொழுதை போக்குதற்கு பல நல் உபாயம் உண்டு.
பகடை ஆட்டம் நாம் ஆடுதல் தருமமன்று!
சகுனி
பயந்து விட்டாய் தருமா! உன்னை அரசனென்று நினைத்தேன்!
வீரனென்று நினைத்தேன் ஆனால் எனக்கு வியப்பளித்து விட்டாய்
அளப்பரிய செல்வம், ஆள், அம்பு, சேனை
இந்த ஏழை மாமன் முன்னே இழக்க நீ கூடுமோ?
பயம் கொள்ள வேண்டாம், பகடை உருட்டுவோம் வா!
தருமம் தயங்கி சென்றது, சதியின் முன் தலை குனிந்தது.
அழிவு அனைவரையும் நன்றாய் அரவணைத்தது
தருமன் கருவம்
பகடை ஆட வந்தாய் மாமா ஆனால் பந்தயம் என்ன வைப்பாய்?
அரசனல்ல நீயும் அண்டி வாழ்பவன் தானே?
என் அளப்பறிய செல்வம் வைத்து ஆடுவேன் நான்.
என்ன செய்வாய்,? வெறும் பேச்சை நம்பி வந்தாய்.
சகுனி
கவலை வேண்டாம் தருமா, நானும் களம் இறங்கிவிட்டேன்.
என் மருமகன் பெற்ற செல்வம் எனது செல்வம் அன்றோ?
ஒன்று வைத்தால் அதன் முன் ஒன்பது வைத்தெடுப்பேன்
ஆடிப்போர்ப்போம் வா!அதிர்ஷ்ட்டத்தை தேடிப் பாப்போம் வா!
விதி
விதுர நீதி எல்லாம் விரயம் ஆனதிங்கே
பாட்டன் சொன்ன சொல்லை எவனும் கேட்கவில்லை.
உண்ட சோற்றை நினைந்து துரோணர் உதடும் திறக்க வில்லை.
அன்னை தந்தையை மதிக்கும் வழக்கம்
அஸ்தினாபுரத்தில் இல்லை
மனிதர் எல்லாம் சபையில் மதி இழந்து விட்டார்
பேய்கள் ஆகி விட்டார், பெற்ற பேரை இழந்து விட்டார்,
கற்ற கலை மறந்து விட்டார், களை இழந்து விட்டார்.
பேய்கள் ஆட்டம் தொடரும். பெரும் தீமை இங்கு விளையும்
பகடை இங்கு உருளும், பல தந்திரங்கள் நிகழும்
ஆட்டம்
ஆட்டத்தில் என்ன ஆச்சு?
ஐயோ!பொன்னும் பொருளும் போச்சு.
தருமன் பெற்ற புகழ் மெல்ல தரை தட்டலாச்சு.
அரசன் என்ற கருவம் உள்ளே அமைதி அடையலாச்சு.
ஆள், அம்பு, சேனை அத்தனையும் போச்சு.
ஆட்டதின் நிஜம் தருமனுக்கு புரியலாச்சு.
சகுனி போட்ட திட்டம் சகலர்க்கும் தெரியலாச்சு.
மாடிழந்து விட்டான் தருமன் வீடிழந்து விட்டான்.
நாட்டை வைத்து ஆட மடையன் முடிவு செய்து விட்டான்.
சகுனி பகடை உருட்டி விட்டான் மறுபடி சகுனி வென்று விட்டான்.
களை இழந்த தருமன் கவலை கொல்ல நின்றான்.
சகுனி தொடர்ந்து சொன்னான், "தருமா, தயக்கம் ஏன் உனக்கு.?
தம்பி நால்வர் உளரே, அவர்மேல் உரிமை உனக்கு உளதே,
இன்னும் என்ன தயக்கம், பந்தயம் வைத்தாடு அவரை
இன்னும் முடியவில்லை ஆட்டம், ஒரு முறை முயன்று பாரு நீயும் "
தருமன் சம்மதித்தான், தம்பியரை பணயம் வைத்தான்
ஒருவர் ஒருவராக தோற்று தருமன் நான்குமுறை உயிர் துறந்தான்
தம்பி நால்வர் போன பின்னே தன்னையும் வைத்திழந்தான்
பணையம் வைக்க இனிமேல் ஆஸ்தி எதுவும் இல்லை.
ஆட்டம் தொடர்வதில் அர்த்தமில்லை.
சகுனி விடுவதாய் இல்லை, இன்னும் எட்டவில்லை எல்லை.
"பாஞ்சலி இன்னும் இருக்கின்றாள், தருமா!அவளை பணயம் வைக்கலாமே?,
ஐவரை மீட்டெடுக்கும் சக்தி உண்டு அவளிடம்.
ஆடிப்பார் உன் அதிர்ழ்டத்தைத் தேடிப்பர் அவளிடம்"
சகுனி எறிந்த கடைசி அஸ்திரம் இது
பாரதப் போருக்கு இட்ட அஸ்திவாரம் இது.
பாண்டவர் கண் ஒளி இவள், இந்த பாரதத்தின் மருமகள்
கண்ணனுக்கு இளையவள்,பராசக்திக்கு இணையவள்
கௌரவர்க்கு எமன் இவள், இந்த கவிதையின் கரு இவள்
"பணயம் வைத்தேன் எங்கள் தேவியை,உருட்டடா பகடையை"
என்றான் தருமனும்
பகடை உருட்டி விட்டான், பாவி சகுனி மறுபடி வென்று விட்டான்.
கண்ணன் கையில் சேலையோடு அஸ்தினாபுரம் விரைந்தான்.
அரச வாழ்வை இழந்து அடிமை ஆகி விட்டனர்,
குல விளக்கோடு இன்று குடி முழுகி விட்டனர்.
கௌரவர் சபையில் தலை குனிந்து நின்றனர்.
கேட்பதற்கு யாரும் இல்லை கேடுகெட்ட சபையிலே
குருடனோடு சபையில் இன்று செவிடர் நிறைய சேர்ந்தனர்.
அஸ்தினாபுறத்தின் பெருமை அஸ்தமனம் ஆனது
சகுனி செய்த சூது சகலரையும் அழித்தது.
இழுத்து வா! அடிமையை, ஐவரது மனைவியை.
அரசி அல்ல இனி, அவள் அடிமை இன்றுமுதல்."
ஆணையிட்டு துரியோதானன் அசிங்கமாய்ச் சிரித்தான்.
ஆணை ஏற்று காவலன் அந்தப்புறம் விரைந்தான்
அவையில் நடந்த அவலங்கள் அனைத்தும் விவரித்தான்
அரசனது ஆணை உடன்பட வேண்டும் என்றான்
அடிபட்ட நாகம் போல் அன்னை கோபம் கொண்டாள்
"அரசி நான். தாசி அல்ல, அவனிடம் சொல் என்றாள்
அடிமைக்கு பிறரை பணயம் வைக்கும் உரிமை இல்லை.
எவனது ஆணையும் நான் ஏற்பதற்கு இல்லை.
இது என் ஆணை, நீ போகலாம் " என்றாள்.
அழிவை அழைத்து அழகு பார்க்கும் நேரம்
வீழ்வை நாடே விரும்பி ஏற்கும் நேரம்
அன்னை பதிலை கேட்டு அற்பன் கொந்தளித்தான்
"தம்பி துச்சாதனா,! இழுத்து வா அவளை!
அடிமைகளின் அழகை, இழுத்து வா அவளை!"
அண்ணன் ஆணை இட்டான்,
துஷ்டன் துச்சாதனன் பாவம் செய்யத் துணிந்தான்.
துஷ்டன் செய்த கொடுமை சொல்ல வார்தை இல்லை
பெண்ணின் மனதை அறியவில்லை
அவளின் துன்பம் தெறியவில்லை
அலறல் ,கதறல் எதுவும் கேட்கவில்லை
அன்னை கூந்தல் பற்றி அற்பன் இழுத்து வந்தான்
பாண்டவர் பெற்ற பரிசை சபை நடுவே எறிந்தான்.
நீதி கேட்டு அழுது நிலைகுலைந்து நின்றாள்
கண்ணனை தன் அண்ணனை அழைத்தாள்
அழுது முறை இட்டாள், தன் நிலைமை தெரிவித்தாள்
"பாவியர் இந்தப் பாண்டவர் என்னை சூதிலே இழந்தனர்.
பேடிகள் கூட்டம் என்னை தாசி என்று இகழ்ந்தனர்.
அன்பு செய்த அனைவரும் அடிமைகள் ஆயினர்.
தூச்சாதனன் என் துகில் உருவ துடிக்கிறான்.
என் மானம் காக்க வேண்டும் , மாசு நீங்க வேண்டும்"
ஓம் நமோ நாராயணா என்று ஓலமிட்டு அழைத்தாள்.
தன்னை மறந்தாள். அந்த மாயனில் கலந்தாள்.
அழைத்ததும் அருள் கிடைத்தது, அருளுடன்
ஆடையும் வளர்ந்தது
துச்சாதனன் தோளும் தகர்ந்தது
கௌரவர் ரத்தம் அச்சத்தில் உறைந்தது.
பாஞ்சாலியின் தூய்மை பன்மடங்கானது.
பாஞ்சாலி மெல்ல வாய் திறந்தாள்
பார்த்தசாரதிக்கு நன்றி தெரிவித்தாள்
கோபத்தின் எல்லை தொட்டாள், பெரும் கூச்சலிட்டாள்.
"ஆண்களின் சபை அல்ல இது அலிகளின் கூட்டம்.
பெண்ணின் மானம் காக்க முடியா பேடிகளின் கூட்டம்.
குருடன் அரசாளும் கூனர்கள் கூட்டம்.
இது குல வதுவை கூவி விற்ற கூட்டம்.
பாஞ்சாலி அல்ல இனி பத்ரகாளி நான்
கௌரவர் குலத்திற்கு சாவு மணி நான்
அக்னியின் மகள் எனக்கு எல்லை இனி இல்லை
ஆண் வர்கத்தின் மேல் இனி நம்பிக்கை இல்லை
பாண்டவர் ஐவர்க்கு இனி நான் பத்தினியும் இல்லை.
அழிவின் தொடக்கம் இது, இனி அமைதி என்பது இல்லை.
கூந்தல் முடியவில்லை, இவள் கோபம் குறையவில்லை.
துஷ்டன் துரியோதனன் தொடை பிளக்க வேண்டும்
பாவி துச்சாதனன் தோள் முறிக்க வேண்டும்
பாவிகள் குறுதியில் என் கூந்தல் நனைய வேண்டும்.
குருடனின் குலம் நாசமாடைய வேண்டும்.
மதி இழந்த பெரியோர் மாண்டு போக வேண்டும்."
பாஞ்சாலி சபதமிட்டாள் , தனியாய் சபை விட்டு அகன்றாள்.