25ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 25
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

மனம் உள்ளவன்தான் மனிதன் ஆவான். ஞானத்தின் பலன் அல்லது மனிதனுடைய மேன்மையான முடிவு மோட்சம் ஆகும். மனிதனுடைய பூர்ணமான வாழ்வு மனநிறைவான வாழ்க்கை மோட்சம் ஆகும். நிறைவு அடையாத மனதை நிறைவு செய்வதுதான் மோட்சம். நமது அறியாமை அகல வேண்டுமானால் நம் மனதில் விவேகம் வளரவேண்டும். மனம் என்பது நமது கண்களுக்குத் தெரியாத நம்மோடு இருக்கும் ஒரு அபூர்வமான நல்ல கருவி ஆகும். மனங்களில் ஆழ்மனம், மேலோட்டமான மனம் என பிரிக்கலாம். மேலும் மனிதர்களுடைய மனங்களை கோபப்படக்கூடிய மனம், பொறாமைப்படும் மனம், லோபப்படுகிற மனம் என்று மனங்களை வைத்து மனிதர்களை வகைப்படுத்தலாம். இப்படிப்பட்ட மனங்களில் ஏதேனும் ஒன்று நம்மிடம் இருந்தாலும் நம் மனம் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது. நம் மனதில் நல்ல எண்ணங்களும் அதன் செயல்பாடுகளும் நிரம்பி இருந்தால்தான் மனதை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முடியும்.

மனிதனுடைய பாவ புண்ணியங்களுக்கு எல்லாம் காரணமாக இருப்பது இந்த மனம்தான். ‘மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்’ என்று மனதை செம்மைபடுத்தும்படி அகஸ்தியர் ஞானப்பாடல் மூலம் வலியுறுத்தி பாடியுள்ளார். எனவே நமது மனதை செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் நம்மையும் நம் செயல்பாடுகளை மட்டும் நன்கு கவனித்து வரவேண்டும். உன்னையும் உனது மனதையும் உனது செயல்பாடுகளையும் கவனமுடன் பார்த்துக்கொண்டு வந்தால் மற்றவர்களை பற்றி நினைப்பதற்குக்கூட உனக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் உன் மனம் எந்தநிலையிலும் வருத்தம், துன்பம் அடைவதில்லை. பெரும்பாலும் உன் மனம் துன்பப்படுவதற்கு துயரப்படுவதற்கு முக்கிய காரணம் உன்னை மறந்து உன்னுடைய செயல்பாடுகளை மறந்து மற்றவர்களின் செயல்பாடுகளை நீ உற்றுக் கவனிப்பதால்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக ஒருவன் வசதியான பணம் படைத்தவனை பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவன் மனம் அவனை அறியாமல் அந்த பணக்காரனைப் பற்றி அவன் எப்படி பணக்காரனாக வசதி படைத்தவனான் என்பதில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு விடுவான். அதில் அவன் சில நேரங்களில் தன்னையே மறந்து விடுவான். அந்த பணக்காரனைப் பற்றியே சிந்தனையில் அவன் ஆழ்ந்து விடுவான். அந்த பணக்காரன் தவறான வழியில் சென்று பணம் சேர்த்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டாலும், மனிதன் நல்லவைகளை பின்பற்றுவதில் மன உறுதி இல்லையென்றால், அவன் நாளடைவில் அந்தப் பணக்காரனின் செயல்பாடுகளை தவறுகளை சிந்திக்காமல் பின்பற்றத் தொடங்கி விடுவான். அப்போது பாவ புண்ணியங்களைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படுவதில்லை. அவன் மனமும் செயல்பாடுகளும் தவறான வழிக்குச் செல்வதற்கு காரணம் அவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் மற்றவர்களைப் பற்றி இடைவிடாது உற்று நோக்கியதன் விளைவு மனம் அமைதியில்லாமல் அவதிப்படுவான். எனவே நீ உன்னையே கவனித்து வரும்போது ஆன்மீக வழியில் உன் மனதை செயல்பாடுகளை செம்மைபடுத்த முடியும். ஆன்மீக வழியில் மனம் சென்று செம்மையானால் உன் செயல்பாடுகள் அனைத்தும் நல்லவைகளாக இருக்கும். அதனால் மன அமைதியும் கொள்வாய்.

வேதத்தில் ‘சமம்’ என்றால் ‘மனம் கட்டுப்பட்டு இருத்தல்’ என்று மனித மனம் விளக்கப்பட்டுள்ளது. மனிதமனம் இஷ்டத்துக்கு மனக்கட்டுப்பாடு இல்லாமல், மனம்போன போக்கில் சென்றால், மனம்போனபடி செயல்பட்டால் மனிதன் தான் விரும்பியதை அடையவோ, நிரந்தர ஆனந்தம் அடையவோ மன அமைதி பெறவும் முடியாது. அதனால் நமது மனமும் அமைதியை எளிதில் இழக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். மனதை நம் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக் கொண்டால், நம் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைப்பதோடு, மனதிற்கும் அமைதி கிடைக்கும்.

மனிதனைத் தவிர பறவை, விலங்கு, மரம் செடிகொடிகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு மனம் என்னும் கண்ணுக்குத்தெரியாத இந்திரியம் மனிதனைப்போல் இல்லை. மனிதனுக்கு உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் மனம் என்ற கண்ணுக்குத் தெரியாத இந்திரியம் இருப்பது ஆகும். எனவே மனிதன் உலகில் சிறந்த மனிதானாக இருக்க வேண்டுமானால் மனதை தன்னோட கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நம் மனம் நமது கட்டுபாட்டில் ‘இருக்கிறது’ அல்லது ‘இல்லை’ என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்வது? என்று கேட்கத்தான் தோன்றும். எடுத்துக்காட்டாக நாம் இரவு படுக்கப்போகும்போது நமது ஆழ்மனதில் ‘என்னை காலை ஐந்து மணிக்கு எழுப்பி விடு’ என்று உணர்வுபூர்வமாக மனதிடம் கட்டளையிடுங்கள். நாம் கட்டளையிடுவதை நமது ஆழ்மனம் அதனை உள்வாங்கிக்கொண்டு, காலையில் நாம் அதற்கு கட்டளையிட்டபடி தவறாமல் காலை ஐந்து மணிக்கு எழுப்பி விடும். நாம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாலும் எந்தவிதத்திலாவது நம்மை காலை ஐந்து மணிக்கு எழுப்பி விடும். அதாவது நாம் காணும் கனவின் மூலமாகவோ, பறவைகளின் ஒலியின் மூலமாகவோ, ஏதாவது ஒரு வினோதமான ஓசையின் மூலமாகவோ நம்மை தட்டி எழுப்பிவிடும்.

அவ்வாறு நாம் ஆழ்மனதில் கட்டளையிட்டபடி நம்மை காலையில் ஐந்து மணிக்கு மனம் எழுப்பி விடுவதற்குத் தவறும்பட்சத்தில், நம் கட்டளையை நமது ஆழ்மனம் கேட்காதபட்சத்தில், நம் மனம் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அப்போது இதன்மூலம் நாம் அறிந்து கொள்வதற்கு முடியும். நம் மனம் நமது கட்டுப்பாட்டில் செயல்படுவதற்கான முயற்சியில் ஆன்மீக வழியில் தியானம், பக்தி, யோகம் பஜனை போன்ற பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடவேண்டும்.

நமது வேதங்களும் இதிகாசங்களும் உபநிடதங்களும் ஆன்மீக வழியில் தியானம், ஜபம், மூச்சுப்பயிற்சி, பிரார்த்தனை போன்ற வழிமுறைகளை நமக்கு விளக்கிக் காட்டியுள்ளன. ஆன்மீக வழியில் தெரிவிக்கப்பட்ட பயிற்சிகளை தவறாமல் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒரு மனிதன் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் அவன் தன்னை மறந்து துாங்குகிறான் என்றால் உண்மையில் அது அவனுக்கு ஆண்டவன் கொடுத்த மிகப்பெரிய வரம்தான் என்று கூற வேண்டும். அவனுடைய மனம் அவன் சொல்லுக்கு கட்டளைக்கு அழகாக கட்டுப்படுகிறது என்று புரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் ஒரு மனிதன் எந்தவிதமான கனவுகளும், நினைவுகளும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குகிறான் என்றால் அவனது ஆழ்மனம் அப்போது நல்ல வேலை செய்துகொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

நாம் வீட்டிற்கு வெளியில் இருக்கும் மிதிவண்டி, கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் நமது வீட்டிற்குள் வைத்திருக்கும் பொருட்களான தொலைக்காட்சிப்பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனப்பொருட்களை கவனமாக பராமரித்தால்தான் அவைகள் நீண்ட காலத்திற்கு நன்கு செயல்படும். இத்தகைய நம் கண்களுக்குத் தெரியும் வெளியில் காணப்படும் பொருட்களின்மீது கவனம் செலுத்துகிறோம். ஆனால் நம்மில் இருக்கும் நம்மோடு உள்ளிருந்து இடைவிடாமல் உறவாடும், நம்முடைய கண்களுக்குத் தெரியாத நமது மனதையும் அதன் செயல்பாடுகளையும் சிறிதும் கவனிப்பதில்லை. மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் வேண்டும். நம்மையும் மீறி மனம் அதன் போக்கில் செல்லாமல் நம் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருத்தல் வேண்டும் என்பதைக்கூட நாம் அறிந்திருக்கவில்லை. இதற்கு காரணம் நமது அறியாமையே ஆகும்.

மனக்கட்டுப்பாடு என்றால் மனதை அடக்கி ஒடுக்கி மனதில் எண்ணங்களே இல்லாமல் அதாவது எந்தவித எண்ணங்கள் மனதில் இல்லாமல் வெறுமையாக வைத்துக்கொள்வது என்பது அர்த்தம் இல்லை. மனதை நமது பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு, மனதிற்கு நாம் எஜமானாக இருந்து மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, நாம் செயல்புரிய வேண்டும். நமது உடலில் உள்ள கை கால்கள் போன்றவற்றை எவ்வாறு நமது பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறமோ, அதுபோல் நமது மனதையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

நமது மனதை எப்படி வைத்துக் கொள்வது என்று சிந்தித்துப் பார்த்தால், நமது மனதை நமக்கு ஓர் பயன்படும் கருவியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நமது மனதில் எண்ணங்கள் எதுவும் இல்லாமல் வைத்திருப்பது என்பது அல்ல. வானமே இல்லாமல் இந்த பிரபஞ்சத்தை நினைத்து நம்மால் பார்க்க முடியுமா? அதுபோல்தான் மனிதர்கள் தங்கள் மனதை எண்ணங்களே இல்லாமல் வெறுமையாக ஒருபோதும் வைத்திருக்க முடியாது. ஆனால் நமது மனம் சும்மா இருப்பதே சுகம் ஆகும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். இதனையே பத்திரகிரியார் சும்மா இருப்பதை நினைத்து ‘ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்‘ என்று ஐம்புலன்களை அடக்கி மனதை கட்டுப்படுதல் அவசியத்தை இப்படி பாடல் மூலம் கூறி ஏங்குகிறார்.

மனித மனங்களை தூய்மையான மனம், உறுதியான மனம் என்றும் வகைப்படுத்தலாம். தூய்மையான மனம் நமக்குத் கண்ணுக்குத்தெரியாத உருவமற்ற நல்ல கருவி ஆகும். நாம் சுவாசிக்கும் காற்றுக்கு உருவம் இருக்கிறதா? வீசும் தென்றலுக்கு வடிவங்கள் இருக்கிறதா? காற்றை கண்ணால் காண முடிவதில்லை. ஆனால் நம்மைச்சுற்றி காற்று இருப்பதை நாம் நன்கு உணர முடியும். அதுபோன்றதுதான் மனமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது மனதை தூய்மையாக வைத்துக்கொள்ளவில்லையானால், மனக்கட்டுப்பாடு இல்லை என்றால், நம் மனம் அதன் இஷ்டத்திற்குதான் செயல்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொறாமைப்படாமல் இருப்பது, மென்மையாகப் பேசுதல், வன்முறைகளை வெறுத்தல், அனைவரிடமும் உண்மை அன்புடன் நடந்து செயல்படுதல், சகிப்புத் தன்மையுடன் பொறுமையுடன் இருத்தல் போன்ற உலகில் காணும் நல்ல பண்புகளைப் பெற்றிருப்பதுதான் தூய்மையான மனம் ஆகும்.

நண்பர் ஒருவர் நம்மிடம் நன்கு சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று கருத்து வேறுபாட்டால் நம்மிடம் கோபப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் பதிலுக்கு அவர் மீது கோபப்படக்கூடாது. அதற்கு மாறாக நாம் நம்முடைய கருத்துக்களை பொறுமையாக, மென்மையாக நண்பருக்கு புரியும்படி எடுத்துக் கூறவேண்டும். அவர் நாம் சொல்வதைக் கேட்காமல் புரிந்து கொள்ளாமல் அவர் தன்னுடைய கருத்தில் பிடிவாதமாக இருந்தால், பொறுமையுடன் அவரிடமிருந்து மௌனமாக விலகிக் கொள்வதுதான் மென்மையான மனதிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அவரிடமிருந்து நாம் அப்படி அவ்வாறு விலகினால் அவர் என்ன நினைப்பார், உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கும் என்று அப்போது நம் மனதைப்போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. ‘இன்னா செய்தாருக்கும் இனியவை செய்தல்’ இவையெல்லாம் தூய்மையான மென்மையான மனதிற்குரிய நல்ல பண்புகளில் ஒன்றாகும்.

தூய்மையான மனம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கரும்பலகையில் முழுதும் எழுத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது என்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கரும்பலகையில் நாம் எதுவும் மேலும் எழுத வேண்டும் என்றால், அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை அழித்தால்தான் கரும்பலகை தூய்மைநிலை அடையும். மேலும் அந்தக் கரும்பலகை தூய்மைப்படுத்தினால்தான் நாம் மேலும் அதில் எழுதமுடியும். நமது மனம் நல்ல பண்புகளுடன் எண்ணங்களுடன் தூய்மையாக மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். உலகில் உள்ள தீய எண்ணங்கள், தீய செயல்பாடுகள், பொறாமை, கோபம், வீண்விதண்டவாதம், தாழ்வுமனப்பான்மை போன்றவைகளால் மனதில் நிரம்பி இருந்தால், அவற்றை எல்லாம் கரும்பலகையில் இருக்கும் எழுத்துக்களை அழித்துத் தூய்மைப்படுத்துவதைப்போல், நமது மனதை நல்ல எண்ணங்களினால் செயல்பாடுகளால் நிரப்பி தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் மனதை ஆன்மீக வழியில் சென்று மனதில் உள்ள தீய எண்ணங்கள், தீய செயல்பாடுகள், பொறாமை, கோபம், இரக்கமின்மை போன்றவற்றை அகற்றி மனதை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போன்று எல்லா உயிர்களையும் தன் உயிர்போன்று நினைத்தல் வேண்டும். மனம், வாக்கு, செயல் மூன்றிலும் உண்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, உண்மை அன்பு போன்ற உலகில் காணப்படும் நல்ல பண்புகள் அனைத்தையும் நம் மனதில் நிரப்பிக் கொள்வதுதான் தூய்மையான மனத்திற்குரிய அடையாளங்கள் ஆகும்.

உலகில் காணப்படும் நல்ல பண்புகளை மனதில் நன்கு பதிந்து வைத்துகொள்ள வேண்டும். அவைகளை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிடாமல் நாம் கடைப்பிடித்து வர வேண்டும். நல்ல பண்புகளிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் இருப்பது உறுதியான மனமாகும். எடுத்துக்காட்டாக உறுதியான தூய்மையான மனம் என்பதற்கு அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம். மன்னன் அரிச்சந்திரன் நாடு, நகரம், போன்றவைகளை மட்டுமல்லாமல், தன் அன்பு மனைவி சந்திரமதி, அன்பு மகன் லோகிதாசன் போன்றவர்களை இழந்து கஷ்டப்பட்டாலும் வாக்குத் தவறாமல் உண்மை பேசுவதில் உறுதியாக இருந்தான். விசுவாமித்திர முனிவருக்கு கொடுத்த வாக்கினை காப்பாற்றுவதில் சத்தியத்தில் உறுதி காட்டிய செயல்பாடுகள் அவனது உறுதியான மனதினைக் காட்டுகிறது.

பதி இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த
நிதி இழந்தனம் இனி நமக்குளதென நினைக்கும்
கதி இழக்கினும் கட்டுரை இலக்கிலேம் என்றார்
மதி இழந்துதான் வாயிழந்து அருந்தவன் மறைந்தான்-

என்ற பாடல் அரிச்சந்திர புராணம் கூறும் வரலாற்று உண்மை ஆகும்.

மனக்கட்டுப்பாடு என்றால் மனதை தூய்மையாகவும், உறுதியான மனதுடன் இருப்பதுதான் மனக்கட்டுப்பாடு ஆகும். தீய பழக்க, வழக்கங்களை விட்டு விலகி நிற்பது சற்றுக் கடினம். நல்லவைகளை கடைபிடிப்பதில் உறுதியாகவும், தீவிரமாகவும் இருப்பது அதைவிடக் கடினம். அவ்வாறு கடைபிடித்தால், உலகில் நிலைத்த புகழை அடையலாம் என்பது, அரிச்சந்திரன் வரலாறு காட்டும் உண்மை ஆகும்.

கீதையில் கிருஷ்ண பகவான் .”கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே“ மற்றும் மனிதன் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள் பற்றி போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்துள்ளார். பொறாமைப்படும் மனம், கோபப்படும் மனம், லோபப்படும் மனம் இப்படிப்பட்ட தீய குணங்களில் ஒன்று இருந்தால்கூட மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. உலகில் உள்ள அனைத்து நற்பண்புகளுடன்கூடிய மனம்தான், தூய்மையான மனம் ஆகும். சாஸ்திரங்களில் கூறியுள்ள நல்ல பண்புகளை மனிதன் தவறாமல் கடைபிடித்து செயல்படுத்தினால் அவன் மனம் அவனோட கட்டுப்பாட்டுக்குள் அடங்கும். மனிதனுடைய நற்பண்புகள் கூடிய மனமே தூய்மையான மனம் ஆகும்.

உலகில் சிலர் நல்லவர்களாக மென்மைகுணம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் உலக விவகாரங்களில் தங்களையும் அறியாமல் அவர்கள் ஈடுபடும்போது எதிர்பாராமல் மற்றவர்களின் கடின வார்த்தைகளைக் கேட்டவுடன் அவர்களையும் அறியாமல் அவர்கள் நல்ல மனம் பாதிக்கப்பட்டு துன்பத்தில் ஆழ்ந்து விடுவார்கள். அதனால் அவர்கள் சிலநேரங்களில் நல்ல குணங்களின் உறுதிப்பாட்டிலிருந்து மனம் தளர்ந்து விடுவார்கள்.

நமது மனதை மென்மையாக வைத்திருப்பதோடு, மற்றவர்கள் நம்மீது கூறும் கடுமையான வார்த்தைகளை சொற்களை பொருட்படுத்தாமல் தாங்கிக்கொள்ளக்கூடிய மனபக்குவத்தை நாம் அடைய வேண்டும். அவர்கள் நற்பண்புகளைக் கடைபிடிப்பதில் தங்கள் கொள்கையில் வாய்மை தவறாத அரிச்சந்திர மன்னன்போல் மன உறுதிபாடுடன் இருக்க வேண்டும். நம்மிடம் இருந்து எந்தச் சூழ்நிலையிலும் எந்தவித காரணத்தினாலும் மென்மையான வார்த்தைகளைத் தவிர வன்முறை தரக்கூடிய வார்த்தைகள் ஏதும் வரக்கூடாது.

அந்த அளவுக்கு நற்பண்புகளில் மனதில் உறுதிப்பாடு இருக்க வேண்டும். நமது நல்ல எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் நம் மீது கோபப்பட்டு மிகக்கடுமையாககூட பேசலாம். அவ்வாறு அவர்கள் இழிவாக நம்மை நோக்கிப் பேசினாலும், தர்மத்துக்கு மாறான வார்த்தைகளை நம்மை நோக்கி பேசினாலும் அவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டு, அவர்கள் மீது கோபப்படாமல் அவற்றை தாங்கிக்கொள்ளக்கூடிய பக்குவநிலையில் இருப்பதுதான் உறுதியான மனம் ஆகும்.

மனித மனம் எப்படி இருக்க வேண்டுமென்று ஆன்மீகம் கூறுகிறது. 1. நமது .மனம் கருவியாக செயல்படுவதற்கு வேண்டும்.அத்துடன் மனம் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் சொன்னதை மனம் கேட்க வேண்டும். 2. நமது மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதில் உறுதியாகவும் மனம் தளராமல் இருக்க வேண்டும். 3. உலகில் காணும் நற்பண்புகளுடன்கூடிய இருப்பிடமாக மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.

அனைத்து உயிர்களிடம் அன்புடன் இருக்க வேண்டும். இன்னா செய்தார்க்கும் இனியவை செய்தல் வேண்டும். எல்லா உயிரும் தன் உயிர்போல் நினைத்து வாழ வேண்டும். எந்தச்சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது கோபப்படாமல் பொறுமையுடன் இருக்க வேண்டும். சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் இத்தகைய குணங்களில் இருந்து மனிதன் எந்தச்சூழ்நிலையிலும் மனம் மாறிவிடாமல் தவறாமல் மனக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இத்தகைய மனநிலையில் நாம் வாழும்போது நாம் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும்.

நாம் பெற்ற குழந்தைகள் சில நேரங்களில் தவறுகள் செய்யும்போது, அவர்களிடம் கோபத்துடன் ‘நான் சொல்வதை நீ ஒரு தடவையாவது கேட்கிறாயா?’ என்று எத்தனைமுறைகள் குழந்தைகளிடம் கோபப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் நமது மனதே நாம் சொல்வதை ஒழுங்காக கேட்பதில்லை. அப்படி இருக்கும்போது நாம் சொல்வதை குழந்தைகள், மற்றவர்கள் கேட்கவேண்டும் என்றும் அவர்கள் நாம் கூறியபடிதான் நம்மிடம் நடக்க வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்கிறோம். நாம் சொன்னபடி நமது மனம் கேட்பதற்கு முதலில் மனதினை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மற்றவர்களை நாம் சொல்கிறபடி அவர்கள் கேட்கும்படி கூறலாம். மனம் போனபடி போகவிடாமல் நமது மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது பற்றி வேதங்கள் உபநிடதங்கள் வழிமுறைகளைக் கூறியிருக்கிறது.

நம் மனதை கட்டுப்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து அதன்படி செயல்புரிந்தால் மனதை கட்டுப்படுத்தி அதற்கு நாம் எஜமானாக இருக்கலாம். சிற்பியானவன் கல்பாறையில் இருக்கும் வேண்டாத பகுதிகளை உளி கொண்டு அகற்றி தன்னோட மனதில் தோன்றும் அழகிய உருவத்தினை அனைவரும் போற்றும் சிலையை உருவாக்குகிறான். அதுபோல்தான் நம் மனதில் நிரம்பி இருக்கும் தீய எண்ணங்களை, தீய செயல்பாடுகளை ஆன்மீக வழியில் சென்று அவற்றை அகற்ற வேண்டும். அவ்வாறு மனதில் தோன்றும் தீமை தரக்கூடிய எண்ணங்களை சிற்பி போன்று வேண்டாதவைகளை அகற்றும்போது மென்மையான மனம் என்ற அழகிய சிலை நம்மிடம் உருவாகும்.

வைராக்கியம் பற்றி பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தில் நமது மனதை
ஒழுங்குபடுத்துவதற்கு சீர்படுத்துவதற்கு கட்டுப்பாடு செய்வதற்கு அடக்குவது குறித்து கூறியுள்ளார். இதற்கு ஆன்மீகமும் வழிகாட்டுகிறது. ஆன்மீகப் பயிற்சியினால் மனதில் வைராக்கியம் வரும்போது நமது மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். இது முதல் வழிமுறையாகும். இயல்பாகவே நற்குணங்களுடன் இருக்கும் நம் மனம் நம் கட்டுப்பாடும் இல்லாமல் அதன் போக்கில் திரிந்தால், ஆன்மீக வழியில் சென்று செயல்பட்டு அதனை ஒழுங்குபடுத்துவதற்கு சீர்படுத்துவதற்கு நம்முடைய மனவைராக்கியத்தைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நம் மனதை சீர்படுத்தும்போது நாம் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும் என்று பதஞ்சலி முனிவர் கூறியுள்ளார்.

மனிதன் இந்திரியக் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்கும்போது, அவன் மனமும் மனிதருக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு ஆரம்பிக்கும். உலகில் காணும் தீயவைகளை தீய செயல்பாடுகளை ‘பார்க்காதே’ ‘கேட்காதே’ ‘பேசாதே’ என்று மனதில் எதிர்மறையாக நாம் எண்ணாமல், உலகில் காணும் நல்லவைகளை நல்ல செயல்பாடுகளை ‘பார்’ ‘கேள்’ ‘பேசு’ என்று மனதில் நேர்மறையாக எண்ணிப் பழகுவதற்கு வேண்டும். மனிதன் மனதைக் கட்டுப்படுத்த மனதின் மூலம் செயல்படும் இந்த இந்திரியங்களும் தானாகவே மனிதனுக்கு கட்டுப்படும். மனமும் வைராக்கியமும் ஒன்றையொன்று சார்ந்து மனிதர்களுக்கு நமது மனக்கட்டுபாட்டுக்கு உதவி செய்யும்.

உலகில் காணும் நல்ல பண்புகளுடன் செயல்பாடுகளுடன் நாம் இருத்தல் வேண்டும். உலகில் காணும் எவ்வுயிரும் தம் உயிர்போல் நினைத்து உயிரினங்களை எந்தச் சூழ்நிலையிலும் துன்பப்படுத்தாமல் இம்சைபடுத்தாமல், நம் பேச்சும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். உலகில் காணப்படும் நல்ல பண்புகளை நாம் கடைபிடிப்பதோடு எந்தச் சூழ்நிலையிலும் உண்மைத்தன்மையில் இருந்து மாறி விடாமல் மனஉறுதியுடன் அவற்றை கடைபிடிக்க வேண்டும். நல்ல குணங்களைத் தவறாமல் பின்பற்றுவது. முதலில் பிறர் மனம் வருந்தும்படி நாம் பேசாதிருத்தல் வேண்டும். பிறர் நம்மைப் புரிந்து கொள்ளாமல், நம்மை வருத்தம் அடையும்படி கோபப்படும்படி பேசினாலும், பொறுமையுடன் நாம் அவர்களிடம் கோபப்படாமல் மென்மையாக அவர்களுக்கு புரியும்படியாக எடுத்துக் கூறவேண்டும்.

நாம் சூரிய உதயத்துக்கு முன்னால் விழிப்பது சிறந்த பழக்கம். சிந்தனைக்கு உகந்த நேரம் ஆகும். அதிகாலையில் கடவுளைத் தியானம் செய்தல் அவசியம். பின்னர் நாம் காலைக்கடன்களை முழுமையாக செய்தல் வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மனம் குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பதற்கு காலை இளம் வெயிலில் மிதமான உடற்பயிற்சி செய்யவேண்டும். தியானப்பயிற்சி மூலம்தான் மனதை வசப்படுத்த வேண்டும் என்றால், மனதின் துணை கொண்டுதான் நம் மனதைக் கட்டுப்படுத்த முடியும். நமது மனதை இரண்டாகப் பிரிக்கலாம். மனதில் உள்ள தீய எண்ணங்களை நம்மை விட்டுப் போகும்படி முதலில் செய்ய வேண்டும். மற்றொன்று மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அகற்றி, நல்ல எண்ணங்களால் செயல்பாடுகளால் நிரப்பி மனதை நம் வசப்படுத்த வேண்டும். நல்ல எண்ணங்களை தீய எண்ணங்களை பிரித்து அறிவதற்கு ஆன்மிகம் துணை புரிகிறது.

நாம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் நம் மனம் தூய்மையாக இருப்பதற்கு மனப்பயிற்சி தியானப்பயிற்சி போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். மனதை அமைதிப்படுத்தப் பழகுதல், தியானப்பயிற்சி, பக்தி ஜபம் பாராயணம் போன்றவைகளை மனஉறுதியுடன் கடைபிடித்தால் நம் மனம் நாளடைவில் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, நாம் தேடும் விரும்பும் மன அமைதியும் நம்மை நாடி வந்து விடும்.

ஆன்மீக வழியில் தியானம் ஜபம் போன்ற பயிற்சிகளை இப்படியெல்லாம் மனதில் செய்தால் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமா? என்று சிலர் சந்தேகத்துடன் கேள்வி கேட்கத் தோன்றும். நாம் இந்த வழிமுறைகளில் பயிற்சியினை கடைப்பிடித்தால், மனம் நம் கட்டுபாட்டிற்குள் வருகிறதா என்பதை முதலில் ஆன்மீக பயிற்சியில் நாம் முயற்சி செய்து பார்க்கவேண்டும். அவ்வாறு முயற்சி செய்யாமல் நாம் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. இத்தகைய முயற்சி மேற்கொண்ட பிறகு நமது இந்த சந்தேகத்தை நமக்குள் கேட்டுக் கொள்ளலாம்.

பொதுவாகவே மனிதர்களிடம் அவர்கள் மனதிற்குள் எந்தச்செயல் செய்தாலும் அதன்மூலம் வரக்கூடிய பலன்கள் எல்லாம் வேகமாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற மனநிலையோடுதான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். அதாவது எந்தவொரு பயிற்சியை மேற்கொண்டாலும், அதன் மூலம் வரக்கூடிய பலன்கள் எல்லாம், ‘கையிலே காசு வாயிலே தோசை’ என்ற மனநிலையில்தான் விரைவாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது உடனே பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். உலகில் உடனடி உணவு(fast food), உடனடிக்காபி(instant coffee), என்று இருப்பதுபோல் நாம் பயிற்சியில் ஈடுபட்டவுடன் உடனடியாக நம்முடைய மனம் நம்மிடம் உடனே கட்டுப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவ்வாறு மனது மிக எளிதில் நம் கட்டுக்குள் வராது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மனப்பயிற்சி தியானப்பயிற்சி போன்ற பலவிதமான பயிற்சிகள் மூலமாகத்தான் சிறிதுசிறிதாக மனம் நம் வசப்படும். அவ்வாறு நாம் சிந்தித்து, செயலில் ஈடுபட்டு ஆன்மீக வழியில் நம்பிக்கையுடன் பொறுமையாக தியானம், ஜபம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதனால் நமக்கு என்ன பயன்கள் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (29-Nov-21, 1:51 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 123

மேலே