வல்லே மழையருக்குங் கோள் மூவர் – திரிகடுகம் 50

இன்னிசை வெண்பா

கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழையருக்குங் கோள் 50

- திரிகடுகம்

பொருளுரை:

தான் கொள்ளுதற்குரிய பொருளை விரும்பி குடிகளை வருத்துகின்ற அரசனும்,

உண்மை நிகழ்ச்சியைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்ற மனிதரும்,

ஒருவனுக்கு மனையாளாய் வீட்டிலிருந்து அவன் சொல், மனையென்னும் இரண்டின் எல்லையைக் கடந்து நடப்பவளும்

ஆகிய இம்மூவரும் விரைந்து மழையைக் குறைக்கின்ற கோள்களாம்.

கருத்துரை:

குடிகொன்று இறைகொள்ளும் கொடுங்கோல் மன்னனும், பொய் பேசுகின்றவனும், பெண் தன்மையை மீறி நடக்கின்ற பெண்ணும் இருக்கும் நாட்டில் மழை பெய்யாது.

இறை – வரி, கோள் - வலி; தங்கள் இயக்கத்தால் ஒருவனுக்கு நன்மையேனும் தீமையேனும் வருவிக்கும் கிரகங்களுக்கு ஆதலால், பண்பாகு பெயர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-21, 4:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே