கன்னியின் தேடலில் கவிதை பிறந்தது

தண்ணொளி தனைவீசும் வெண்ணிலவின் இரவில்
புன்னகையில் பூத்தமுகம் பொலிவுடன் விகசிக்க
பஞ்சணையாம் மேகமிடை ரஞ்சகமாய் எழுந்து
என் நெஞ்சதனை கொள்ளைகொண்ட நங்கை இவள் யாரோ?

மென்பட்டு ஆடையது வெண்குடையாய் விரிய
விண்ணதனின் விதானமதில் மின்னல்போல் தோன்றி
கொஞ்சும்கிள்ளை மொழிபேசும் அஞ்சனவிழி அழகி
அவள் துஞ்சுகுழல் அலையில் உள்ளம் உருகியது ஏனோ?

சென்னியதில் செங்காந்தள் பூவிதழ்கள் சிரிக்கும்
வண்ணமயில் பெண்ணழகில் என்வாலிபத்தை தொலைத்து
மஞ்சுடை மங்கையவள் பொன்நிகர்த்த உடலை
நான் நெஞ்சணைத்து அன்புசெய்ய நேரம் எப்போ கூடும்?

கண்ணதனால் கணையெறியும் கன்னியவள் என்கனவில்
எண்ணமெல்லாம் அனல்வீசும் நினைவுகளின் நெருப்பில்
சஞ்சலத்தில் தவித்தநெஞ்சை தண்ணீராய் தணிக்க
அந்த வஞ்சிமகள் வந்தணையும் தருணம் எப்போதோ?

மண்ணதனில் மடந்தையவள் உதித்த இடம்தேடி
மனப்பட்சியதன் சிறகுகளை பறக்க நான்விரித்து
அஞ்சியந்த அஞ்சுகத்தை அடைய நான்தவிக்க
என் நெஞ்சமதில் பொங்கிவந்த கவிதை இது தானோ?

எழுதியவர் : மீரா பரா (14-Dec-21, 1:56 am)
சேர்த்தது : மீரா பரா
பார்வை : 86

மேலே