தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென்பது - பழமொழி நானூறு 37

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு) (’க்’ ‘ப்’ வல்லின எதுகை)

வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
து’ய்’த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
எ’ய்’ப்பினில் வைப்பென் பது. 37

- பழமொழி நானூறு

பொருளுரை:

தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுத்தும் சேமிப்பு எனக் கருதற்க; தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும் இருமைக்கும் அழகுண்டாகுமாறு செய்யத் தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்யின், தளர்ந்த காலத்து உதவும் பொருள் என்பது அதுவன்றோ?

கருத்து:

அறமே எய்ப்பினில் வைப்பாம்.

விளக்கம்:

பின்னர்ப் பெறுதல் ஒருதலை யன்மையான் வைப்பென் றுணரற்க என்றார்.

தான் உண்ணுதலும் அறமாதலின், துய்த்து என்றார்.

வைப்பு என்பது பின்னர் உதவுமாறு வைக்கப்படும் பொருள்.

'எய்ப்பினில் வைப்பு என்பது' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-22, 10:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே