குடல் வெந்து சாகாதே கவிஞர் இரா இரவி

குடல் வெந்து சாகாதே! கவிஞர் இரா. இரவி !

குடித்துக் குடித்து குடல் வெந்து சாகாதே!
குடிப்பது உடலுக்குக் கேடு என்தை உணர்ந்திடு!

வருமானத்தில் பெரும்பகுதியை வீணாக்காதே!
வருமானத்தை இழந்து பின்னர் தவிக்காதே!

இறப்பு என்பது இயற்கையாகத் தான் வரவேண்டும்
இறப்பு குடியால் வந்துவிட வழிவகுக்காதே!

குடிகாரர்களை சமுதாயம் என்றுமே மதிப்பதில்லை
குடியால் மதிப்பை இழந்து செல்லாக்காசாகாதே!

உழைத்து ஈட்டிய பணத்தை குடிக்கு செலவழிக்காதே
உழைத்த பணத்தை நல்வழியில் செலவிட்டுப் பழகு!

ஒரே ஒருமுறை குடித்துப்பார் என்பான் நண்பன்
ஒருபோதும் சம்மதிக்காதே தீயவை தீண்டாதே!

காந்தம் போல கவர்ந்து இழுக்கும் குடிப்பழக்கம்
கவர்ந்து விட்டால் அதிலிருந்து மீள்வது கடினம்!

பிறந்தநாள் விருந்து குடித்துப்பார் என்பார்கள்!
பாதையை மாற்றி போதையில் வீழ்த்திவிடுவார்கள்!

பிராந்தி இல்லை பீர் மட்டும்தான் குடி என்பார்கள்
பிராந்தி பீர் எல்லாம் குடியின் கேடுதான் அறிந்திடு!

கழுதை விட்டையில் முன்பின் வேறுபாடு இல்லை
குடியில் நல்லகுடி இல்லை எல்லாம் கெட்டகுடி தான்!

சகதியில் உன்னை வீழ்த்திட துடிப்பார்கள் நண்பர்கள்!
சகதியில் விழாது விழிப்புணர்வோடு இருத்தல் நன்மை!

அவர் குடிப்பார் இவர் குடிப்பார் என்று விளக்குவார்கள்!
எவர் குடித்தாலும் எனக்கு வேண்டாமென மறுத்திடு!

என்றாவது என்றால் தப்பில்லை என்றுதான் சொல்வார்கள்
என்றுமே எனக்கு வேண்டாமென உறுதியாய் இரு!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (5-Jan-22, 7:36 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 84

மேலே