அபயம் என்பவர்க்கு இடங்கொடுப்பவனின் வீரம் - இனியவை நாற்பது 27
இன்னிசை வெண்பா
தானங் கொடுப்பான் தகையாண்மை முன்இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது. 27
- இனியவை நாற்பது
பொருளுரை:
அபயம் என்பவர்க்கு இடங்கொடுப்பவனின் பெருமை பொருந்திய வீரம் மிக இனியது.
தான் இறப்பதால் தன் மானம் நிலைக்கும் என்றால் உயிர் வாழாமல் துறப்பது மிக இனியது.
குற்றம் பாராட்டாதவராய் நன்மை உடையனவற்றை, கொள்ளும் முறைப்படி கொள்வது இனியது.
விளக்கம்:
தானம் கொடுப்பான் அபயப் பிரதானஞ் செய்து தன் பக்கத்தில் இடந் தந்து பாதுகாப்பவன். ‘மாவீரனல் லனாயின் அது செய்யத் துணியான்' என்பது குறிப்பு.
‘தானங்கொடுப்பான் தகையாண்மை' என்பதற்கு அன்ன முதலிய தானங்களைச் செய்வானது தகுதியின் தலைமை என்பர் பழையவுரைகாரர்.
‘ஊனங் கொண்டாடாருறுதி யுடையவை எனவும், காரணகாரியம், ஐநக ஐந்யம் முதலிய சம்பந்தங்களுள் யாதானும் ஒன்று பற்றி இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென ஆன்றோர் கொள்ளுமுறைப்படி கொள்க என்பர், ‘கோண் முறையால்' எனவுங் கூறினார்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
