உன்னைநீ முன்னம் உணர்க உணரினோ பின்னைவேறு இன்னல் பிறவாதே - ஞானம், தருமதீபிகை 950

நேரிசை வெண்பா

உன்னைநீ முன்னம் உணர்க; உணரினோ
பின்னைவே(று) இன்னல் பிறவாதே - மன்னியபேர்
இன்ப வுருவனாய் எவ்வுலகும் அன்பூர்ந்து
முன்புதொழ நிற்பாய் முதல். 950

- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முன்னதாக உன்னை நீ நன்கு உணருக, அவ்வாறு உணரின் பின்பு யாதொரு துன்பமும் உனக்கு நேராது; என்றும் நிலையான இன்ப உருவனாய் எவ்வுலகும் உவந்து தொழ நீ உயர்ந்து விளங்குவாய்; அந்த நிலையை அடைந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உணர்வுநலம் நன்கு நிறைந்த மனிதப் பிறவியை அடைந்தது உயர்ந்த கதியை அடையவேயாம். அவ்வாறு எய்தியவன் பரம பாக்கியவான் ஆகின்றான்; எய்தாதவன் ஆக்கம் இழந்தவனாய் அவல நிலையில் தாழ்ந்து அவமே கழிந்து போகின்றான்.

மடையன், மூடன், பேதை என்பன இழிநிலையரைக் குறித்து வந்துள்ளன; அறிவாளி, மேதை, ஞானி என்பன உயர் நிலையாளரை உணர்த்தி வருகின்றன. அறிவைவிட மேதை என்னும் சொல் நூறுமடங்கு உயர்ந்தது; மேதையை விட ஞானி என்பது ஆயிரம் பங்கு உயர்ந்தது. ஞானம் ஆன்மாவின் மேன்மையான ஒளி. இதனையுடையவர் ஓதாமலே எல்லாக் கலைகளையும் எளிதே உணர்ந்து கொள்ளுகின்றனர். உள்ளத் தூய்மையால் உறுவதாதலால் பேரின்ப வெள்ளத்தை இது அருளுகின்றது.

கல்வியறிவு கை விளக்கைப்போல் சிறிதுதான் காண உதவுகிறது; ஞானம் கதிர் ஒளிபோல் அரிய பல பொருள்களை எளிதே தெரியச் செய்கிறது. இதனை இயல்பாக வுடையவன் உயர் ஞானியாய் ஒளிமிகப் பெறுகிறான்; இழந்தவன் கழிமடையனாய் இழிந்து அழி துயரங்களில் யாண்டும் நீண்டு உழல்கின்றான்.

A man's wisdom is his best friend; folly his worst enemy. (W.Temple)

ஒரு மனிதனுடைய ஞானம் அவனுக்கு நல்ல நண்பன்; அஞ்ஞானம் கொடிய பகைவன் என இது குறித்துள்ளது.

True wisdom is to know what is best worth knowing, and to do what is best worth doing. [Humphrey]

அறியத் தகுந்ததை விரைந்து அறிந்து செய்யவுரியதை நன்கு புரியும்படி செய்வதே உண்மையான ஞானமாம் என இது உணர்த்தி யுள்ளது. உற்றதை உணரின் உரியது உறுகிறது.

எதை அறிந்தால் எல்லா அல்லல்களும் ஒருங்கே ஒழியுமோ அதை அறிந்து அவ்வழியே ஒழுகுவதே திவ்விய ஞானமாய்த் தெளிய நின்றது. ஈனம் படியாமல் ஞானம் படிந்தவர் வானம் படிந்து வரம்பில் இன்பங்களை அடைந்து மகிழ்கின்றனர்.

நேரிசை வெண்பா

ஈனம் தொடராமல் எவ்வழியும் பேரின்ப
வானம் தொடர வருவதே - ஞானமென
வந்த ததுவே வருபே ரொளியான
அந்தமிலா ஆனந்தம் ஆம்

ஞானத்தின் நயனையும் பயனையும் இது நன்கு உணர்த்தி அதனைத் தோய்ந்துய்யுமாறு இங்கு ஊக்கியிருக்கிறது.

வான ஒளி எதிரே வைய இருள் ஒழிதல்போல் ஞானி ஒளி முன் வெய்ய மருள் ஒழிந்து மெய்யான பேரின்பம் மேவுகிறது. அறிவும் இன்பமும் அமுதும் சுவையுமாயுள்ளன.

சக்தியம், ஞானம், ஆனந்தம் என்னும் இம்மூன்றும் கடவுளுக்குத் தூல சூக்கும காரண சரீரங்களாய் மருவியுள்ளன. ஞானானந்த மயம் பிரமம் என்பது வேத மந்திரம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

உண்மையறிவு ஆனந்த வுருவாகி எவ்வுயிர்க்கும்
உயிராய் நீரின்
தண்மையனல் வெம்மையெனத் தனையலா(து) இருந்துசரா
சரங்கள் ஈன்ற
பெண்மையுரு வாகியதன் ஆனந்தக் கொடிமகிழ்ச்சி
பெருக யார்க்கும்
அண்மையதாய் அம்பலத்துள் ஆடியருள் பேரொளியை
அகத்துள் வைப்பாம்.. - திருவிளையாடல்

சத்து சித்து ஆனந்தமாய் எங்கும் பரந்து விரிந்துள்ள பரமன் நிலையை இது வரைந்து காட்டியுள்ளது. மெய்ஞ்ஞானம் இறைவனுக்கு வடிவமாதலால் அதனையுடைய மெஞ்ஞானிகளிடம் அவன் ஆனந்தமயமாய் என்றும் மேவியிருக்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

உணர்பொருளும் உணர்வானும் உணர்வுமெனும் பகுப்பொழியா(து)
..ஒழிந்து பானுப்,
புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும் புனல்உவரும்
..பரிதி மீனுந்,
துணையவிரண் டறுகலப்பின் எம்முடனாய்ப் பேரின்பம்
..துய்த்து வாழ்வார்.
இணர்விரைத்த மலர்க்கோதாய் , அவர்வடிவே எமக்கினிய
..கோயி லாமால். 63 தழுவக் குழைந்த படலம், காஞ்சிப் புராணம்

ஞானிகள் எம்முடன் பேரின்பம் துய்த்து வாழ்வார்; அவர் வடிவமே எனக்கு இனிய கோயில் என இறைவியிடம் இறை வன் இவ்வாறு உரிமையோடு உவந்து கூறியிருக்கிறான்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் / மா தேமா அரையடிக்கு)

எண்டருமெய்ஞ் ஞானிகள்தாம் நன்மை தீமை
இயற்றினுமப் பலனுகரார் இவர்தம் மேனி
கண்டுதொழு வார்இகழ்வார் தம்பால் எய்தும்
கருமுகிலின் செயல்போலக் கருதார் ஒன்றும்
பண்டிகலும் வினையுடலின் பலிப்பி னாலே
பகர்காலம் திசைகளருங் தவங்கள் சீலம்
கொண்டதியா னம்செபங்கள் பூசை யாவும்
குறித்தொழித்தி டினுமவர்க் கமலன் பணியே. – சிவஞான தீபம்

மேலான ஞானிகளுடைய நிலையை இது விளக்கியுளது.

நிலம் நீர் முதலிய பஞ்ச பூதங்களின் தோற்றங்களையும் அகில லோக காரணனாய் இறைவன் இருக்கும் இயல்பையும் பூரணமாய் அறிந்தவர்களாதலால் ஞானவான்கள் வான ஒளி போல் எவ்வழியும் திவ்விய நோக்கோடு சிறந்து திகழ்கின்றார்,

அகில சராசரங்களை ஆத்துமாவிலும், அந்த ஆன்மாவைச் சகல சீவராசிகளிலும் எவன் பார்க்கிறானோ அவனே ஞானி; எங்கும் சமமான அமைதியாய் அவன் அமர்ந்திருப்பான் என வேத மந்திரம் போதனையோடு குறித்துள்ளது.

ஆத்துமாவில் அகிலத்தையும், ஆத்துமாவை எல்லா உயிர்களிலும் ஞான யோகி காண்கிறான்; காணவே எங்கும் அவன் சமமாயிருக்கிறான் எனக் கீதை குறித்திருக்கிறது.

அரிய பரமனை ஞானிகள் உரிமையோடு தெளிவாய்க் காணுகின்றனர்; அந்தக் காட்சிகளை இங்கே நாம் கண்டு மகிழ்கின்றோம். ஆன்ம நோக்கம் ஆனந்தமாய் வருகிறது.

உலக பாசங்களைக் கடந்தபொழுது உண்மை ஞானம் தேசு வீசி வர ஈசனைக் கண்டு இன்பம் மீதுார்கின்றனர். மாய மோகம் ஒருவிய பொழுது தூய பரம் தெரிகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மைத்தகு மாயை என்னும்
..மதுநுகர்ந்(து) அறிவி லோர்கள்
மொய்த்தரும் பிரபஞ் சத்தை
..வேறுவே. றாகக் காண்பர்;
சுத்தராய் ஞானா னந்தச்
..செழுங்கட லதனில் தோய்ந்து
தத்துவம் அறிந்தோர் ஒன்றாய்த்
..தம்முளே சகத்தைக் காண்பார். 1

எண்ணுறும் எண்ணெய் போல
..எங்கணும் நிரம்பி நிற்கும்
நண்ணரும் பிரமம் தன்னில்
..நண்ணிய சீவன் முத்தர்
விண்முதல் ஆய பூதம்
..எவற்றினும் மேவி என்போல்
பண்ணருந் திருட்டி யாதி
..பண்ணினும் பண்ணு வாரால். 2

நித்தியா னந்தம் ஆகி
..நிமலமாம் பிரமம் தன்னை
தத்துவ வித்தாய் உள்ளோர்
..பிரணவம் தன்னால் என்றும்
உத்தம தியானம் செய்யா
..உளமுவந்(து) எனது தாளில்
பத்திசெய்(து) என்பால் பாலில்
..பால்கலந்(து) என்னச் சேர்வார். 3 தத்துவ தரிசனம், கூர்ம புராணம்

தத்துவ ஞானிகளுடைய நிலைகளையும் காட்சிகளையும் இவை நன்கு காட்டியுள்ளன. பாலில் பால் கலந்தது போல் பரமனோடு அவர் கலந்து கொள்வார் என்றதனால் அவரது தலைமையையும் அதிசய ஆனந்த நிலைமையையும் ஈங்கு அறிந்து கொள்கிறோம்.

தூய ஞானம் தோய்ந்த பொழுது தீய மருள் ஒழிந்து போகின்றது; அரிய பல இனிய நீர்மைகள் பெருகி உயிர் புனித நிலையில் உயர்ந்து உயர் பரனோடு கலந்து மகிழ்கிறது. புனித ஞானம் மனிதனைப் புண்ணியன் ஆக்குகிறது.

The wise man is also the just, the pious, the upright, the man who walks in the way of truth. [Zochler]

ஞானவான் நீதியும் நேர்மையும் தெய்வ பக்தியும் நிறைந்து உண்மை நெறியில் ஒழுகும் உத்தமனாய் உயர்ந்துள்ளான் என உணர்த்தியுள்ளது. மெய்யறிவு தெய்வ நீர்மைகளை அருளுகிறது.

உண்மை ஞானம் இதயத்தில் உதயமாய போது அந்த மனிதன் உலகத்தில் ஒளி வீசி நிற்கிறான்; அந்த நிலைமையும் நீர்மையும் எவ்வழியும் தலைமை தோய்ந்து திவ்விய மகிமையில் சிறந்து திகழ்கின்றன. ஞானம் வர வானம் வருகிறது.

மெய்யுணர்வு மெய்ப்பொருளை நன்கு தெரிதலால் பொய்ப் புலைகள் புகைந்து போகவே பேரின்ப நிலையை ஞானி அடைகிறான். பிறவித் துயர்களையெல்லாம் அடியோடு நீக்கிப் பேரானந்தம் தருதலால் ஞானம் ஆராவமுதம் என அமைந்து நின்றது. பிறவித் துயர்களை அது களைகின்றது.

ஓர்த்துள்ளம் உள்ள(து) உணரின் ஒருதலையாய்ப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357 மெய்யுணர்தல்

உணர வேண்டிய உண்மையை உணர்பவன் ஞானி; அவ்வாறு உணர்ந்தால் பின்பு அவனுக்குப் பிறப்பில்லை என இது உணர்த்தியுள்ளது. பிறவாமைக்கு எல்லையைக் காட்டியிருக்கும் காட்சி கருதியுணரவுரியது. என்றும் உண்மையாயுள்ள பரம் பொருளை உள்ளது என்றது. உள்ளதை உள்ளி உய்தியுறுக.

ஆன்ம ஞானத்துக்கும் பரமான்மாவுக்கும் உள்ள உறவுரிமைகள் இங்கே தெளிவாக வெளியாயுள்ளன. மெய்யான பொருளை மேவி நின்ற அளவு உயிருயர்ந்து உய்தி பெறுகிறது; பொய்யான மருளை மருவின் புலைத் துயர்களையே அடைகிறது.

காணப்படுகிற இவ்வுலகம் பல கோடி சீவராசிகளையுடையது; செய்த வினைகளுக்கு ஈடாகவே தேகங்களை எடுத்து அலைகின்றன; எல்லாம் வெய்ய துயரங்களையுடையன; பொய்யான மாய மயல்களால் விளைந்தன; இந்தத் தீய புலைகள் தோயாமல் உள்ளம் தூயராயுயர்ந்த உண்மைப் பொருளை உணர்பவர் ஞானிகள் ஆகின்றார், ஆகவே ஞானானந்த மயமான ஈசனை அடைந்து என்றும் குன்றாத இன்பம் மிகப் பெறுகின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

உலகெது? நாம்ஆர்? என்ன
..உற்றுநின்(று) உணரு மட்டும்
கலகமார் பிறவி மோகம்
..கங்குல்போல் மூடி நிற்கும்;
அலகறும் உலகும் தாமும்
..அழிவில்சிற் சோதி என்றே
சலனமில் கண்ணால் கண்டோர்
..தத்துவ நிலைமை கண்டோர். – ஞான வாசிட்டம்

தன்னைச் சரியாக அறியும் வரையும் பிறவியிருள் நீங்காது; ஆன்ம நிலையை உண்மையாக அறிந்தவரே நித்திய முத்தராய் நிலவி நிற்கின்றார்; அந்தத் தத்துவ நலனை இது உணர்த்தியுளது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

தன்னைத் தானினி(து) அறிவதே தத்துவ அறிவாம்:
பின்னை வேறுள அறிவெலாம் பித்தறி வாகும்;
முன்ன தாகிய அறிவினை யுடையவர் முதன்மை
மன்னி மாண்புயர் இன்பினை மருவியுள் மகிழ்வார். - வீரபாண்டியம்

உள்ளதை உணர்ந்த மெய்ஞ்ஞானியாய் நீ உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-22, 3:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே