நானும் ஓர் விட்டில் பூச்சிதான்

என் ஆஸ்துமாவே...
நீ.....என் நெஞ்சுக்குழலில்
இசைக்கின்ற நாதங்கள்
கேட்பதற்கு என்னவோ
நன்றாகத்தான் இருக்கிறது
உனக்கு சங்கீதமாய்...
மற்றவர்க்கு நாரசமாய்...
எனக்கோ நரகவேதனையாய்.
நீ....என்னிதய மேடையின்
இரவுப் பாடகன்.
சில காலங்களில்
நீயேன் விடியலில் வருகிறாய்?
எனக்கே புரியாத புதிர்தான்.
உன் வருகையை என் இருமலினால்
அறிமுகப்படுத்துகிறாய்.
உன் வீணைக்கு - என்
நரம்புகள்தானா கிடைத்தன?
ஒவ்வொரு முறையும்
நீ மீட்டும்போது - நான்
துவண்டு....தளர்ந்தே போகிறேன்.
நீ கச்சேரியை
ஆரம்பிக்கும்போது என் நெஞ்சு
விம்மி வெடித்தே விடுகிறது.
உன் வசந்தம்
உலகிற்கு மழைக்காலம்.
மேகம் கவிந்துவிட்டால்
நீ தோகையை விரித்துவிடுகிறாய்.
நீ பாடிக்கொண்டே ஆடுவதை
தினம் ரசித்து...ரசித்து
நான் சலித்துவிட்டேன்.
உன் வீணைக்கு என்
கோழைகளினால்
எண்ணெய் பூசுகிறாயோ?
ஒவ்வாமை பொருட்கள் - ஒவ்வொன்றும்
உனக்கு பக்கவாத்தியக்காரர்கள்.
உன் கச்சேரிக்கு
மருத்துவர்கள்தான் நடுவர்கள்.
உன் சங்கீத சுருதி பேதத்தை - அவர்கள்
ஸ்டெத்தாஸ்கொப்பினால் அளவிடுகிறார்கள்.
நீ ஆரோகனம்... அவரோகனத்தில்
இசைக்கும்போது - அது
கல்யாணியா? இல்லை முகாரியா? - என்று
அறியமுடியாமல் தவித்துவிடுகிறார்கள்.
உன் கச்சேரி முடிந்தால்தான்
நான் பேசவே ஆரம்பிக்கிறேன்.
நீ....மூச்சை பிடித்துப் பாடும்போது
நான்...மூச்சைவிடவே பாடுபடுகிறேன்.
உன் கச்சேரியிலிருந்து என்றைக்கு
என் ஆத்துமா ஓடப்போகிறதோ
அன்றைக்குத்தான் எனக்கு விடுதலை நாள்.
அந்நாள் வரும்வரை...
உன் மேடை விளக்கை
சுற்றிச் சுற்றி வரும்
நானும் ஓர் விட்டில்பூச்சிதான்!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Feb-22, 9:17 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 95

மேலே