என்றும் நீ

தேவதையே....
நீ....என்னிதயத் துடிப்பு.
எண்ணக்குவிப்பு.
உன் நினைப்பு
எனக்கு பெருமூச்சு...
என் உயிர்த்துடிப்பில்
கலந்துவிட்ட உனக்கு
நான் என்னத் தரப்போகிறேன்?
என்னையே தந்துவிட்ட பிறகு....
உன் ஓரக்கண் பார்வையில்
நான் காண்பதுதான் சொர்க்கமா?
ஓ....அதில்தான் எத்தனையெத்தனை
அர்த்தங்கள்... அபிநயங்கள்...
அந்தப் பார்வைச் சங்கமத்தில்
என் மனது....
அறிவு....
ஆத்மா...
அத்தனையும் அடங்கிப்போய்விடுகிறது.
அதற்கு மட்டும் அத்தனை
சக்தி எங்கிருந்து வந்தது?
உன் விழிப் பார்வைதான்
பூத்துக் குலுங்கும் வசந்தமா?
அந்த வசந்தத்தில்
கலந்திட செண்டானேன்.
உன்னிதழ் ஊறும் தேனதைச்
சுவைத்திட வண்டானேன்.
காற்றாட நீவிட்ட கூந்தல்
என் முகத்தை மட்டுமா மறைத்தது?
உலகத்தையே அல்லவா மறைத்துவிட்டது.
"ச்சீ" என்று சிணுங்காதடி
நான்...நானாகவே இருக்க முடிவதில்லை.
அந்த சிணுங்கல் என்னுள்
எரிமலையாய் வெடிக்கிறது.
ஏக்கப்பெருவெள்ளமாய் வடிகிறது.
நுனிமூக்கை நீ சுழிக்கையில்
நான் பொடிப்பொடியாய் போய்விடுகிறேன்.
மவுனம்தான் நமக்குள்
நடக்கின்ற சம்பாஷனைகள்.
ஆனால்...அந்த வேதத்தைப் படிக்க
உன்னாலும் என்னாலும் மட்டும்தான் முடியும்.
நீ...
என்னருகில் இருந்தால் தேவதைதான்.
என்னை விட்டு விலகியிருந்தால்
அரக்கியாய் ஆகிவிடுகிறாயே!
உன் குரல் கேட்கும்வரை
செவிடனாய் இருக்கிறேன்.
கேட்டுவிட்டாலோ ....மற்ற ஒலிகளுக்கு
செவிடாகிறேன்.
உன் முகம் பார்க்கும்வரை
குருடனாய் இருக்கிறேன்...
பார்த்துவிட்டாலோ ...மற்ற அழகிற்கு குருடாகிறேன்.
நான் நினைத்தால்...
வானத்தை கிழித்து...
மின்னல் விளக்கை கொண்டு...
இடியின் மத்தளம் தட்டி...
சூரியனை பந்தாய் விளையாடி...
நட்சத்திரங்களை ஆரமாய் கட்டி - அதில்
சந்திரனை "டாலராய்" வைத்து
உன் கழுத்தில் சூட்டிவிடமுடியும்.
ஆனால் அத்தனை திறமைகளையும்
உன் சிரிப்பில் சிறையாக்கி விட்டாயே...
உன் விழிப்பில் வீணாக்கிவிட்டாயே.
அடி கள்ளி
அதனால்தான் எனக்கு
என்றும் நீ வேண்டும்.
என்றும்.....என்றென்றும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Feb-22, 10:35 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : endrum nee
பார்வை : 2887

மேலே