சிறிய பகைஎனினும் ஓம்புதல் தேற்றார் பெரிதும் பிழைபா டுடையர் - நீதிநெறி விளக்கம் 54
இன்னிசை வெண்பா
சிறிய பகைஎனினும் ஓம்புதல் தேற்றார்
பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத்து
ஆழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும்
யானை நிழல்காண் பரிது. 54
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
தம் பகைகள் சிறியனவாயிருப்பினும் அவற்றினின்றுந் தம்மைக் காத்துக் கொள்ளுதலை உணராதவர் மிகவும் பிழையுடையராவார்; ஆழமான கயமாகிய நீர்நிறைந்த மடுவில் தவளை குதித்தாலும் அம்மடுவில் அவ்வமயம் காணா நின்ற யானையின் நிழலையும் காணுதல் அரிதாகிவிடும்.
விளக்கம்:
நீர் நிலையோரத்தில் ஒரு யானை நிற்க, அதன் நிழல் நீரில் காணப்படுகின்றது. அவ்வமயம் ஒரு சிறுதவளை தண்ணீரில் குதிக்கின்றது. குதித்தவுடன் நீர்கலங்கி யானையின் நிழல் சிதைவுறுகின்றது. தவளையோ யானையினும் எவ்வளவோ சிறியது. அது குதித்தலால் நீர்நிலை முற்றுங் கலங்கி, காணப்பட்ட யானையின் நிழல் சிதைவுறுவது போல, சிறிய பகைவராயிருந்தாலும் அவராலும் கேடுண்டு என்பது கொள்ளப்படும்.
"சிறு பாம்பெனினும் பெருந்தடி கொண்டடி" என்பது பழமொழி.
பூ நாகம் சிறிது; அதன் விடமோ உயிரையே வாங்கிவிடும். ஒரு சிறுவன் அல்லது ஒரு பெண் ஒருவரைப் பற்றி ஓர் அவதூறு சொல்வாராயின் உலகம் கேள்விப் பேச்சில் நம்புவதாயிருப்பதனால் அவ்வவதூறு அப்படியே பலபேரிடைப் பரவி அவர்க்குப் பகைவர் பலரை உண்டாக்கும்.
ஆகையால், பகை சிறிதெனிலும் விட்டிடல் வேண்டாவென்பது.
கருத்து:
தம்பகைவர் சிறியவராயினும் அவரைப் பொருள் செய்யாது ஒழுகுதலாகாது.