சாமியென்பவன் யாரடா
நான்....
பாலையில் வாடும்
ஒற்றைப் பனைமரம்.
என் பாதைகள் யாவும் பாறைகள்...
முட்கள் நிறைந்த புதர்கள்.
என் கால்களுக்கு
சுடு மணல்...மெத்தை சுகமளிக்கும்.
நான்...
ஒரு பாலைக் கவிஞன் .
மலர்களை பாடும்
மன்மத கவிஞனல்ல.
வெடித்த நிலத்தில்
கிணற்றைத் தோண்டும்
படித்த முட்டாள்.
வறண்ட நினைவுகள் - எந்தன்
வசந்த காலங்கள்.
கண்ணீர் ...நானென்றோ
சிந்தியதாய் நினைவு.
புன்னகை...நானென்றோ
மறந்துவிட்ட கனவு.
தன்னந்தனியனாய்
ஓடுகிறேன்..ஓடுகிறேன்...
இருட்டில் செய்த பிழையால் வந்த
குருட்டு வாழ்க்கை பாதைதன்னில்
நானே ராசா...நானே அடிமை..
என்று நானே
உருண்டு...புரண்டு...
வாழ்ந்து...வீழ்ந்து..
தினம்தினம் சாகும்போது
இடையில் வைத்த
சாமியென்பவன் யாரடா?
அவனுக்கு இங்கென்ன வேலையடா?