அறிவ தறிந்தார் அறத்தின் வழுவார் நெறிதலை நின்றொழுகு வார் – அறநெறிச்சாரம் 69

நேரிசை வெண்பா

மக்கள் உடம்பு பெறற்கரிது பெற்றபின்
மக்கள் அறிவும் அறிவரிது - மக்கள்
அறிவ தறிந்தார் அறத்தின் வழுவார்
நெறிதலை நின்றொழுகு வார் 69

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

மக்கட் பிறப்பினை அடைதல் அருமை; பிறந்தாலும் மக்களுணர்வாகிய ஆறறிவினையும் அடைதல் அதனினும் அருமை; ஆறறிவினையுமுடையராய்ப் பிறந்து அறியவேண்டியதை அறிந்தவர் அறநெறியிற் சிறிதும் வழுவார்; அன்றியும் அறநெறியை மேற்கொண்டு அதனுக்கேற்ப நடப்பார்.

குறிப்பு:

“மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்பராகலின், ‘மக்கள்’ என்பதற்கு, ‘ஆறறிவினையும் உடையராய்’ என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-22, 12:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே