என்னைத் தேடி நான்
நான் யார்?
கேள்வியைப் பிடித்துக்கொண்டு
என்னுள்ளேயே
என்னையேத் தேடி புறப்பட்டேன்.
சுயதரிசனம்.
அங்கே ஒருவன்...
காலையில் எழுந்து
நீராடி தினமும்
சாமி கும்பிடுகிறானே.
அவனுள்ளும் ஒரே குழப்பம்
இறைவன்
இருக்கிறானா? இல்லையா?
இருந்தால் அவன் யார்?
அவனை நம்பி நிதமும்
ஊதுபத்தி...கற்பூரம்...
படையல்...பிரார்த்தனை...
அவனை ஏமாற்றுகிறோமா? - இல்லை
ஊரை ஏமாற்றுகிறோமா? - இல்லை
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா?
குழப்பத்தோடு இருக்கும்
அவன்தானா நான்.....?
ஒருவரையும் புண்படுத்தாமல்
நடக்க வேண்டுமென்று
தெரிந்தோ தெரியாமலையோ
எல்லோரையும் ஒருவிதத்தில்
புண்படுத்திகொண்டுத் திரிகிறானே....
எதையும் பெரிதாய் எண்ணாமல்
எல்லோரையும் நக்கலடித்துக்கொண்டு,
எல்லாவற்றையும் சாதாரணமாய்
எப்பொழுதும் சந்தோஷமாய்
இருக்க வேண்டுமென
பையித்தியம்போல் திரிகிறானே.....
சிறிய சொல்லுக்குக்கூட
புழுவாய் சுருண்டு
தன்னைத்தானே வருத்திக்கொண்டு
அத்தனையையும் மனதுள்
அடக்கிக்கொண்டு - அமைதியாய்
எல்லாப்பழியும் தன்னால்தானென்று
புழுங்கிச்சாகிறானே
அவன்தானா நான்?
எல்லாம் தெரிந்த மாதிரி
எல்லாம் தெளிந்த மாதிரி
நினைத்தது மாறும்போதோ - இல்லை
மாறித் திரியும்போதோ
மனம் சோர்ந்து
வாழ்க்கையை நொந்து
ஒரு மூலையில்
முடங்கி விம்முகிறானே
அவனா நான்?
குழந்தையை காணும்போது மகிழ்ந்து
குமரியை காணும்போது நெகிழ்ந்து
இளமையை காணும்போது குதித்து
முதுமையை காணும்போது முகம்சுழித்து
செல்கிறானே
அவன்தானா நான்?
புத்தனாய் சிலநேரம்...
பூதமாய் பலநேரம் ...
யேசுவாய் சிலநேரம்...
பாவியாய் பலநேரம்...
தத்துவ ஞானியாய் சிலநேரம்...
பித்துபிடித்த கோழையாய் பலநேரம்...
சிரிக்கின்ற கோமாளியாய் பலநேரம்
கொக்கரிக்கின்ற கோமகனாய் சிலநேரம்
கலைஞனாய் சிலநேரம்
கவிஞனாய் பலநேரம்
மனிதனாய் சிலநேரம்
மிருகமாய் பலநேரம்
மாறி மாறி
மாறும் இதில்
நான் யார்?
கேள்வியைப்பிடித்துக்கொண்டு
என்னுள்ளேயே
என்னையேத் தேடித்தேடி
அலைகிறேன்.
புரிந்துகொள்ளத் துடிக்கிறேன்
புரிந்துகொண்டு மேல்நிலைக்குப்
போவேனோ? - இல்லை
புரியாமல் அலைந்து அலைந்து
கீழ்நிலையில் சாவேனோ?
ஒன்றும் தெரியவில்லை....
எதுவும் புரியவில்லை....
[இது எனது நூறாவது படைப்பு]