வசந்தம்

வசந்தம்.....
இயற்கையின் பூப்புநாள்!
மஞ்சள் பூவணிந்து
மஞ்சள் நீராட்டுப் பருவம்!
தென்றல் தோழியோடு
பச்சைத் தாவணியில்
தலையில் மலர்கள் சூடி
மலை ஓரம் - அதன்
அருவி ஓரம்
மாலை நேரம் - நிலவு
காயும் நேரம்
இயற்கைப் பூமகள்
உலாவரும் வைபோகம்

வசந்தம்....
தென்னை மரசலசலப்பில் சங்கீதம்
மஞ்சள் வண்ண மாலையில் உல்லாசம்
பைங்கிளிகள் சிட்டுகளின் கொண்டாட்டம்
மது உண்ணும் வண்டிற்கோ திண்டாட்டம்
தலைவியின் நோய் தீர்க்கும் மருந்தாகும்
தலைவனுக்காய் ஏற்பட்ட விருந்தாகும்
இருவருக்கும் இடைசெல்லும் தூதாகும்
பிரிந்துள்ளோர்க்கு அது வேம்பாகும்

வாடிய பயிர்க்கோ வான்மழை வசந்தம்
தேடிய வயிற்கோ வட்டில் சோறு வசந்தம்
பாடிய வாயிற்கோ பைந்தமிழ் வசந்தம்
பருவம் வந்த பெண்ணிற்கோ பார்வையே வசந்தம்
பார்வை வழி மோதலின் பாஷையே வசந்தம்
பாஷை வழி பிறக்கின்ற காதலே வசந்தம்
காதலித்து கிடைக்கின்ற காட்சியே வசந்தம்
காட்சியின் முடிவில் காமமே வசந்தம்
காமம் இடை தொடர்கின்ற ஊடலே வசந்தம்
ஊடலுக்குப் பின் வருகின்ற கூடலே வசந்தம்

அதுமட்டுமா?
தட்சணை கேட்காத மாப்பிள்ளை வசந்தம்
தாலிக்குத் தங்கமென்றால் ஏழைக்கு வசந்தம்
படிக்கின்ற மாணவர்க்கு விடுப்புநாளே வசந்தம்
முடித்துவிட்ட இளைஞருக்கு வேலைவாய்ப்பே வசந்தம்
பிள்ளையில்லா பெண்டிர்க்கு தேன்மழலை வசந்தம்
கவிபாடும் கவிஞருக்கோ செந்தமிழே வசந்தம்
தெவிட்டாத செந்தமிழோ திகட்டாத வசந்தம்
இன்றும் என்றும் எங்கும் திகட்டாத வசந்தம்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Mar-22, 9:19 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vasantham
பார்வை : 309

மேலே