மனிதமே கடவுள்

மனிதன் கடவுளிடம்-
இறைவா - எங்கே போனாயடா ?

துன்பம் வரும்போதும், 
துயரில் அழும்போதும், 
தவறாமல் அழைப்பேனே - 
எங்கே போனாய் ?

களிப்பிலே ஆடிக் களைத்த பின்னும், 
நிம்மதிப் பெரு மூச்சு விட்ட பின்னும்,
வெற்றியாய் வாரிக் குவித்த பின்னும் -

பின்னே உனைத் திரும்ப 
அழைப்பேனே - எங்கே போனாய் ?

வீட்டிலே உனை வைத்தேன், 
வெள்ளியால் சிலை செய்து
தங்கத்தால் கவசம் போட்டும் - 
தங்காமல் போனாயே ! 

ஆலயம் தனை நாடி
ஆறு கால பூஜையுடன், 
அபிஷேக ஆராதனை செய்தேன் -
அப்பொழுதும் சென்றாயே !

கைகூப்பி வணங்கி, 
வாய் விட்டழைக்கிறேன் - என்
நோய் தீர்க்க வா ! உயிர் காக்க வா !
_____________________________________________
கடவுள் மனிதனிடம்-
மனிதா - எங்கே போனாயடா ?

துன்பம் துயரம் 
எது வந்த போதும் 
தர்மம் காப்பதே என் படைப்பு 
எங்கே போனதடா - மனிதம் ?

வெற்றியும், தோல்வியும் 
நிம்மதியும், பெருங்கவலையும் 
அனைத்துமே உன்னால் ஆனது
பிறப்பும் இறப்பும் தவிர -
இங்கே எனக்கென்ன வேலை ?

பெற்றோரையும், மற்றோரையும் 
புறத்திலே வைத்து -
வீட்டிலே (கற்)சிலையை வைத்து 
என்னதான் லாபம் ?

அரை வயிறு அன்னமாவது,
தானமாக அளித்திருந்தால் 
புண்ணியமாய் உன்னோடே 
அனுதினமும் இருந்திருப்பேன் !

வன்சொல் தவிர்த்து,
பொறாமை வெறுத்து,
ஆசை அடக்கி,
வஞ்சம் நீக்கி
வாழப் பழகு -

உன்னில் இருப்பேன் !
உன் மனமே கோவில் !
நீயே இறைவன் !

மறவாதே மனிதா !!
மனிதமே கடவுள் !!

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (21-Mar-22, 7:54 am)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 437

மேலே