ஏ பணமே

ஏ பணமே!

ஏ பணமே!
நீ இல்லாததால்
பசி பசி என்று பதறுகின்றனர் சிலர்!

ஏ பணமே!
நீ இருந்தும்
புசி,புசி என்று சொல்லாமல் பொட்டியில் வைத்து பூட்டுகின்றனர் சிலர்!

குச்சு வீட்டில் குடியிருக்கமறுக்கும் நீ
மச்சு வீட்டில் மதுரகீதம் பாடுகிறாய்!

உலகத்தின்
உயிரே பணமே! இன்னும் எத்தனை நாளைக்கு சோம்பேறிகளின் வீட்டில் சிறைப்பட போகிறாய்!

உழைக்கும் வர்க்கத்தின் வியர்வை வாசம் பிடிக்க
வெளியே வா!

பணமே
உன்னைப் படைத்தவன் மனிதன்!

அவனையே நீ அடிமைப்படுத்தி விட்டாய்!

நீயே
மனிதனை பாதாளம் வரை
பாய விடுகிறாய்!

நீயே!
மனிதனை பத்தும் செய்ய வைக்கிறாய்!

பணமே நீ
சிலநேரம் பகையை வளர்கிறாய்!

சிலநேரம்
பூக்காத பாலை நிலத்திலும் புன்னகையைப்
பூக்க வைக்கிறாய்!

பணமே நீ
கைகூடாத தால்
சில கன்னியர்க்கு கல்யாணம் கானல்நீராகி விடுகிறது!

பணமே
உனக்கு செல்லப்பெயர்கள் ஆயிரம் உண்டு!

கல்யாணத்திற்கு வருபவர்கள் உன் மெய்யை மறைத்து மொய்யென்று கொடுக்கின்றனர்!

சிலருக்கு நீ
கடனாக வருகிறாய்!

சிலருக்கு நீ வரதட்சணையாக வருகிறாய்;

அதிகாரிகள் அவர்கள் வேலையை செய்வதற்கு அன்பளிப்பாய் வருகிறாய்!

உடன்பிறப்புகளை பங்காளி ஆக்குகிறாய் பகைகொண்டு கொலையுண்டு
உன்தாகம் தணிக்கிறாய்!

வட்டி என்று வந்து வாங்கிய உன்னை விட
பல மடங்கு வசூலித்து செல்கிறாய்!

வாங்காத பணத்திற்கு ஜாமின் போட
வம்பில் மாட்டி விடுகிறாய்!

சூதாட்டத்தில் நீ மறைந்து சூறாவளியாய் சிலர் வாழ்வை உரையாடுகிறாய்!

பணமே
உனக்கு கூட பெண்களை கண்டால் இளக்காரமா?

ஒரே வேலைக்கு ஆணுக்கு அதிக கூலி!
பெண்ணுக்கு
அதில் பாதி
இது என்ன நீதி!

கருப்பு பணமே!
நீ கரையேறி வந்தால்
பல ஏழைகள் வீட்டில் அடுப்பு எரியும்!

பணமே
மனிதன் படைத்த இரண்டில் ஒன்று நீ!

மற்றொன்று கல்லாய் கிடக்கும்
கடவுள்!

உன்னை அதிகமாக வேண்டும் என கடவுளிடம்
வேண்டிக் கொள்கின்றான்!

கடவுளுக்கே நீ இல்லை எனில் வெளிச்சம் இல்லை!

நீயும் பேசுவதில்லை கடவுளும் பேசுவதில்லை!

ஆனால் நீங்கள் இருவரும் பேசும் பொருளாய் எப்படி?

உங்களுக்கு உயிரில்லை உயிரினங்களை உலுக்குவது எப்படி?

பணமே பதுங்கிக்கொள் பழைய பண்டமாற்று முறைக்கு வழிவிடு! பணத்தால் பாதை மாறும் மூடர்க்கு பாதையை மூடு!

கவிஞர் புஷ்பா குமார்.

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (25-Mar-22, 1:46 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : yae paname
பார்வை : 177

மேலே