பின்னின்று இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர் – அறநெறிச்சாரம் 84

நேரிசை வெண்பா

முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்துப் – பின்னின்(று)
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை. 84

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

தேவர்கள் விழித்த கண்மூடாமல் நிற்பதற்குக் காரணம் ஒருவன் எதிரில் நின்று கல்லும் உருகுமாறு முகமலர்ந்து வாயால் இன்சொற்கூறி அவனைப் புகழ்ந்து, அவன் அகன்ற பின்னர் அவனையே இகழ்ந்து கூறுகின்ற கயவர்களைக் கண்டு, கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும்.

குறிப்பு;

தேவர்கள் இயல்பிலே இமையாமல் நின்ற நிலையினை இங்ஙனத் தொடர்புபடுத்திக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாம்.

கயவர்களைச் சான்றோர் என்றது இழிவு பற்றியாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-22, 3:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே