கோபமே

கோபமே!

கோபமே உனக்கு விதை எது?

காரமும் புளிப்புமா? அல்லது
உப்பும் கசப்புமா?

கோபமே உன் உறைவிடம் எது? மனதா? இதயமா?

கோபமே நீ வெளிவரும் வாயில் எது?
வாயா? கண்களா? கரங்களா?

கோபமே நீ
சில இல்லங்களில் கரண்டியையும் மத்தையும் ஆயுதமாக ஏந்துகிறாய்?

கோபமே நீ
மதம் கொண்ட யானை
மரங்களை முறிப்பது போல்
மனங்களை
மரண நகம் கொண்டு கிழிக்கிறாய்!

கோபமே நீ
ஒரு கோழை கோழைத்தனத்தை மறைக்க
குமுறி வெடிக்கிறாய்!

கோபமே! நீ குழந்தை எல்லோரும் உன்னை பார்க்க எக்காளமிடுகிறாய்!

எதிரே இருக்கும் பாத்திரங்களை எத்திவிடுகிறாய்!

தான் தான் சரியென்று எதிர்வாதம் புரிகிறாய்!
ஏற்றுக்கொள்ளாத போது
இடி முழக்கமிட்டு எனர்ஜியை இழக்கிறாய்!

கோபமே!
வெளியே வந்தால் உறவுகள் உடைகிறது!

உள்ளேயே இருந்தால் உள்ளமும் உடலும் உடைகிறது!

கோபமே!
கொப்பளித்து நீ வந்தால்
கண்கள் கொவ்வைப்பழமா சிவக்கிறது!

கோபமே!
வாய்வழி நீ
நீ வழிந்தால்
வார்த்தைகள்
கூரம்பாய் கூர் தீட்டிக் கொள்கின்றது!

கோபத்தில்
ஒரு வார்த்தை சொன்னதற்காய்
உயிருள்ளவரை மறுவார்த்தை பேசாமல்
மண்சேர்ந்தனர் பலர்!

கோபமே!
நீ மாக்களின் பண்பு!
மனித மனதில்
குடியேறாதே!

கோபத்தால் கணவனும் மனைவியும்
சுட்டுக்கொண்டது போதும்!
சுகம் காண
நீ விலக வேணும்!

விட்டுக் கொடுத்தால் நீ
விலகி விடுகிறாய்!

முட்டி நின்றால் நீ முளைத்து விடுகிறாய்!

விரக்தியில் நீ
வேர் விடுகிறாய்!
எதிர்பார்ப்பு
எடுபடவில்லை எனில்
எழுந்தாடுகிறாய்!

கோபமே!
நீ முள்
மனதிற்கு பாதுகாப்பாக சற்று விலகி நில்!

கோபமே! கோபித்துக் கொள்ளாதே!

காய்களை சுவைத்தது
போதும்!

கனிகளை சுவைக்க மனிதர்களிடம்
தணிந்து நில்!

கவிஞர் புஷ்பா குமார்.

எழுதியவர் : புஷ்பா குமார் (26-Mar-22, 12:36 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 95

மேலே